கேள்வி: சோ அவர்கள் ‘துக்ளக்’ ஆசிரியராக இருந்தபோது பெண்களுக்கு எதிரான கருத்துகளைத் துணிந்து சொல்லியும், எழுதியும் வந்தார். இந்த விஷயத்தில் தாங்கள் எப்படி?
பதில்: சோ பெண்களை எதிர்க்கவில்லை. பெண்கள் இட ஒதுக்கீட்டைத்தான் எதிர்த்தார். அதுதான் இன்றும் நம் நிலை. பெண்கள் இட ஒதுக்கீட்டை எதிர்க்க எந்தப் பத்திரிகைக்கும் துணிவில்லை. நாம் துணிவாக எதிர்க்கிறோம்!
– ‘துக்ளக்’கில் குருமூர்த்தியின் பதில் (‘துக்ளக்’, 29.3.2023, பக்கம் 31)
ஒன்று தெளிவாகி விட்டது. பெண்கள் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதுதான் ‘துக்ளக்’ உள்ளிட்ட பார்ப்பனர்களின் நிலைப்பாடு.
மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரி பகுதி எண்ணிக்கை உடைய பெண்களே, என்ன செய்ய உத்தேசம்?
இரண்டாவதாக சோ, பெண்களை எதிர்க்கவில்லை என்று குருமூர்த்தி அய்யர்வாள் வக்காலத்து வாங்குகிறார்.
இதாவது உண்மையா?
பெண்களை சோ எதிர்ப்பதோடு நிற்கவில்லை. எப்படியெல்லாம் கொச்சைப்படுத்தி எழுதியிருக்கிறார்?
இதோ இரண்டு எடுத்துக்காட்டுகள்.
கேள்வி: ஆளானப்பட்ட அரசியல்வாதிகளே பெண்களுக்கு மனம் இரங்கும்போது, உங்கள் மனம் மட்டும் அவர்கள்மீது இரக்கம் கொள்ள மறுப்பது ஏன்?
சோவின் பதில்: பெண்களைப் பார்த்து மனம் இரங்க நான் என்ன அரசியல்வாதியா? பேயா, பிசாசா?
(‘துக்ளக்’, 14.9.2005, சோவின் பதில்)
பெண்களை, சோ மதிக்கும் இலட்சணம் இதுதானா?
இதோடு மட்டுமல்ல, ஏராளம் உண்டு என்றாலும், மேலும் ஓர் எடுத்துக்காட்டு!
கேள்வி: பெண்களைப்பற்றி உங்களுக்கு உண்மையான அபிப்பிராயம் என்ன?
சோவின் பதில்: உயர்ந்தவர்கள் அப்படி இருக்க விருப்பம் இல்லாதவர்கள்.
(‘துக்ளக்’கில் சோ, 18.3.2009).
குருநாதர் ‘சோ’ இப்படிக் கூறுகிறார் என்றால், அவர் சீடர் குருமூர்த்திவாலு என்ன சொல்லுகிறது?
சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றின் 10 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் (25.8.2019) என்ன பேசினார்?
இந்தியாவில் உள்ள பெண்களில் வெறும் 30 சதவிகிதம்தான் பெண்மை உள்ளவர்கள் என்று பேசி வாங்கிக் கட்டிக் கொள்ளவில்லையா?
வேலைக்குச் செல்லும் பெண்கள் ஒழுக்கக் குறைவானவர்கள் என்று சொன்னவர் இவர்களின் ஜெகத்குரு சங்கராச்சாரியார் ஜெயந்திர சரஸ்வதி ஆயிற்றே!
பெண்களே, இவர்களை எல்லாம் எது கொண்டு சாற்றுவீர்?
– மயிலாடன்