ஒசூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட ஒரு சதுக்கத்துக்குப் பெரியார் சதுக்கம் என்ற பெயர் நீண்ட காலமாகவே இருந்து வந்தது. காவி – சங்பரிவார்க் கூட்டம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில் ஒசூர் மாநகராட்சி மன்றத்திலேயே அதிகாரப் பூர்வமாக “தந்தை பெரியார் சதுக்கம்” என்று பெயர் சூட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது.
தீர்மானம் வருமாறு: ஒசூரில் பெரியார் சதுக்கம்
பொருள் எண் : 87
ஒசூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட ஒசூர் உள் வட்டசாலையில் இணையும் பகுதிகளான முனீஸ்வர் நகர், வ.உ.சி., நகர் நியூ எ.எஸ்.டிசி ஹட்கோ சந்திப்பு பகுதியை பொதுமக்கள் அடையாளம் கண்டு கொள்ளவும், வெளியூர் மக்களுக்கு அடையாளம் தெரியும் வண்ணம் அப்பகுதிக்கு தந்தை பெரியார் சர்க்கிள் என பெயர் வைக்க திரு. காட்டுராஜா என்கிற வனவேந்தன் – முனீஸ்வர் நகர், என்பவர் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து அரசாணை (நிலை) எண்: 98 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (ம.ந.6) துறை நாள் 11.07.2022-இல் அரசின் அனுமதி பெற்ற பின்னரே சாலைகள் · கட்டடங்கள், பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்களுக்கு பெயர் வைப்பது அல்லது பெயர் மாற்றுவது தொடர்பாண முன்மொழிவுகள் நகராட்சி நிர்வாக இயக்குநர், சென்னை அவர்களின் வழியாக அரசுக்கு அனுப்ப வேண்டும் எனவும் அரசின் அனுமதி பெற்ற பின்னரே நகர்ப்புற உள்ளாட்சிகளின் சொத்துக்களுக்கு பெயரிடுவது மற்றும் பெயர் மாற்றம் குறித்த தீர்மானங்கள் சம்பந்தப்பட்ட மாமன்றங்களில் ஒப்புதலுக்கு வைக்கப்பட வேண்டும் என அரசு ஆணையிட்டுள்ளதால் இவ்வலுவலக ந.க.எண் 6083/2022/எப்.1 நாள் 17.10.2022ஆம் தேதிய கடிதத்தில் நகராட்சி நிர்வாக இயக்குநர், சென்னை அவர்கள் மூலமாக அரசுக்கு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன.
நகராட்சி நிர்வாக இயக்குநர். சென்னை அவர்களின் 10.02.2022 தேதிய ந.க. எண். 34194/2022/டிபி1 கடிதத்தில் அரசு கூடுதல் தலைமை செயலாளர். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை. சென்னை அவர்களின் 06.02.2023ஆம் தேதிய கடித எண். 433/ம.ந.7/2023 கடிதத்தில் மேற்படி பகுதிக்கு தமிழில் “தந்தை பெரியார் சதுக்கம்” எனவும், ஆங்கிலத்தில் “Thanthai Periyar Square” எனவும் பெயர் சூட்டுவது குறித்த தீர்மானத்தை ஒசூர் மாநகராட்சி மாமன்றத்தில் ஒப்புதலுக்கு வைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதால் மேற்படி பொருள் குறித்த மாமன்றத்தின் ஒப்புதல் கிடைத்த பிறகு, உரிய கருத்துருவினை நகராட்சி நிர்வாக இயக்குநர். சென்னை அலுவலகம் வாயிலாக அரசுக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்து வரப்பெற்றுள்ள அரசு கடிதம் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநர், சென்னை அவர்களின் கடிதம் மாமன்றத்தின் பார்வைக்கு.
எனவே மேற்படி பகுதிக்கு தமிழில் “தந்தை பெரியார் சதுக்கம்” எனவும். ஆங்கிலத்தில் “Thanthai Periyar Square” எனவும் பெயர் வைக்க அரசுக்கு கருத்துரு அனுப்ப மாமன்றத்தின் அனுமதிக்கு வைக்கப்படுகிறது.”
இத்தீர்மானத்தை எதிர்த்து அ.தி.மு.க. உறுப் பினர்கள் வெளி நடப்பு செய்தனர் என்பதைவிட வெட்கக் கேடு வேறு எதுவாக இருக்க முடியும்?
இது அண்ணா தி.மு.க. அல்ல – பா.ஜ.க. சங்பரிவாரின் அடிமை தி.மு.க. என்பது வெளியாகி விட்டது.
அக்கட்சியில் உள்ள அய்யா, அண்ணாமீது மதிப்புக் கொண்டவர்கள் சிந்திப்பார்களாக!
தந்தை பெரியார் பெயர் சூட்ட உரிய வகையில் முனைந்து செயலாற்றிய திராவிடர் கழகத் தோழர்களுக்குப் பாராட்டுகள்!