அஞ்சா நெஞ்சன் அழகிரி மறைந்தார்!!
தோழர் அழகிரிசாமி நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். எதிர்பார்க்கப்பட்ட செய்தி தான் என்றாலும் அதற்காக நம் துயரம் சிறிதும் குறையவில்லை! சமுதாயத்தைப் பிடித்திருந்த காச நோய்க்கு மருந்து தந்து குணப்படுத்தி வந்தவர். உடலைப் பீடிக்கும் காச நோய்க்கு இரையானார். சுயமரியாதை இயக்க ஆரம்ப முதல் உயிர் போகும்வரையில் இயக்கத்தொண்டு புரிந்து வந்த அஞ்சா நெஞ்சினர் அழகிரியை இழந்துவிட்டோம். மடமடவென் வீழ்கின்ற நீர் வீழ்ச்சி போல் மணிக் கணக்கில் நகைச்சுவை ததும்பப்பேசி, மாறுபட்ட கருத்தினரும் மயங்கி மனந்திருந்துமாறு தமிழ் நாடெங்கும் 20 ஆண்டுகளாக திக் விஜயம் செய்துவந்த ஆருயிர்த் தோழரை, ஒப்பற்ற வீரரை, தமிழ் வீடு இழந்துவிட்டது.
வைதீகம், முதலாளித்துவம், அதிகார வர்க்கம், எதற்கும் அஞ்சாது அருந் தொண்டாற்றிய கர்ம வீரனை இழந்து விட்டோம்! “இது தான் என் இறுதிப் பேச்சாக இருக்கும்; விடை பெற்றுக் கொள்கிறேன்,’’ என்று ஈரோடு மாநாட்டில் கால் நடுங்க, வாய் குளறப் பேசியபோதே இயக்கத் தோழர்கள் கலங்கினர்; கண்ணீர் உகுத்தனர்.
வறுமையை வாழ்க்கைத் துணையாகக் கொண்டும், சக்திக்கு மீறிய குடும்பப் பாரத்தைத் தலைமீது சுமந்துங்கூட – எந்த செல்வவானும், பட்டதாரியும் சாதிக்க முடியாத அளவுக்கு ஏழை அழகிரி சமுதாயத் தொண்டில் சாதித்து விட்டார். அவர் சாதனை ஏழைகளுக்கு ஓர் எடுத்துக்காட்டு. பணம் படைத்தோர்க்கு ஒரு படிப்பினை!
அழகிரியாரே! உம் கடமை தீர்ந்து விட்டது! உம் விகிதத்துக்கு மேற்பட்ட சேவை செய்து விட்டீர்! உம்மைப்போல் எமக்கும் இறுதிக் காலம் என்பதுண்டு என்பதை மறக்கவில்லை! அதற்குள்ளாக நீர் விட்டுப் போனவற்றை நாங்கள் செய்துமுடிப்போம்! உம் உடலருகே நின்று உறுதி கூறுகிறோம். இல்லை சபதம் செய்கிறோம்!
இதுதான் இந்நாட்டு இளைஞர்கள் வாயிலிருந்து வரவேண்டிய சூளுரை! இதுதான் அவர் தொண்டுக்கு நாம் செய்ய வேண்டிய கைம்மாறு!
அழகிரியாரை இழந்து அவதியுறும் அவரது மனைவியார்க்கும் குழந்தைகட்கும் நாம் எவ்வகையில் ஆறுதல் கூற முடியும்? அவர்கள் துயரத்தில் நமக்குப் பங்குண்டு. தமிழ் நாட்டினர்க்குப் பங்குண்டு. பெரும் பங்குண்டு!
நம் சமுதாயத்துக்குப் பல அழகிரிசாமிகள் தேவை!
அழகிரியார் பரப்பிய கொள்கைகள் உள்ளவரையில் அவர் பெயர் அழியாது! அழியாப் புகழ் பெற்றுவிட்டார், அழகிரி! வாழ்க அழகிரி! வாழ்க அவர் தொண்டு! வாழ்க அவர் கொள்கை!
‘விடுதலை’ 29.3.1949
அழகிரிசாமி மறைவு பற்றி
பெரியார் துயரம்
நண்பர் அழகிரிசாமி முடிவு எய்தியது பற்றி நான் மிகவும் துக்கப்படுகிறேன், மனப்பூர்வமாய் நிபந்தனை இல்லாமல் பின்பற்றி வருகிற ஒரு கூட்டுப் பணியாளருமாவார். இந்த 30 ஆண்டு காலத்தில் எனது கொள்கை யிலும் திட்டத்திலும் எவ்வித ஆலோசனையும் தயக்கமும் கொள்ளாமல் நம்பிக்கை வைத்து அவைகளுக்காகத் தொண்டாற்றி வந்தவர், என் விஷயத்தில் மறந்தும் புறங் கூறாமல் இருந்தது மாத்திரமல்லாமல் புறங் கூறுகிறவர்கள் யாராயிருந்தாலும் ஒளி மறைவில்லாமல் கண்டித்து விடுவார்.
திடீர் என்று நான் புகுத்தும் கொள்கையையும், போடும் திட்டங்களையும் சிறிறும் யோசனை இன்றி ஒப்புக்கொண்டு, அவைகளை எப்படிப்பட்ட அறிவாளிகள், குயுக்திக்கரர்கள் வாதக்கூட்டத்திலும் எதிர்ப்பிலும் மெய்ப்பித்து வெற்றி காணுவார்.
கொள்கை வேற்றுமை, திட்ட வேற்றுமை என்பது எனக்கும் அவருக்கும் ஒரு நாளும் காண முடிந்ததில்லை.
அவருடைய முழுவாழ்க்கையிலும் அவர் இயக்கத் தொண்டைத்தவிர வேறு எவ்விதத் தொண்டிலும் ஈடுபட்டதில்லை. அவருக்குப் போதிய பணம் இல்லை பல காரணங்களால் பொருளாதார நெருக்கடி அடிக்கடி அவருக்கு ஏற்படுவது இயற்கையாக இருந்துவந்தாலும், ஒரு சமயத்திலும் விளையாட்டுக்குக்கூட கொள்கையை’ எந்த விலைக்கும் விலைகூறி இருக்கமாட்டார் – சமீப காலமாக அவருக்கு உடல் வசதி இல்லாததால் அவருடைய தொண்டு சரிவர நடைபெறாமல் பல தடைகளுக்கும் அசௌகரியங்களுக்கும் ஆளாகிவிட்டது என்றாலும், அழகிரிசாமியைப் போல் இயக்கத்தில் படித்த, பாமர மக்களுடையவும், இளைஞர்களுடைய மனதைக் கவர்ந்து பற்றிகொண்டவர்கள் அரிது என்றே சொல்லு வேன்.
அப்படிப்பட்ட ஒருவர், உண்மையான வீரமும் தீரமும் உள்ளவர் இச்சமயத்தில் முடிவெய்திவிட்டது. எனக்கு மிகவும் வருத்தத்தைக் கொடுக்கிறது என்பதோடு இயக்கத்துக்கும் பதில் காண முடியாத பெருங் குறை என்றே சொல்லுவேன்.
-ஈ.வெ.ரா.
‘விடுதலை’ – 30.3.1949
எம்.ஆர். ராதா
தொண்டனுக்குள்ள கடமையை மறைந்த மாவீரன் அழகிரியின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். தலைவர் பெரியாரிடம் தன் இறுதி மூச்சுள்ளவரை அவர் நடந்து கொண்டுள்ள முறையை நாம் பின்பற்ற வேண்டும். சிறந்த முறையை நாம் பின்பற்ற வேண்டும். அக்கர்ம வீரரின் படத்தைத் திறக்க என்னைப் பணித்தனர். அதை நான் செய்வதைவிட அவருடன் இளமை முதற்கொண்டு பழகி தொண்டாற்றி வந்த, அவரின் நீண்ட நாள் நண்பர் பட்டுக்கோட்டைத் தோழர் டேவிஸ் அவர்கள் அப்பணியைச் செய்வதே பொருத்தமானது. ஆதலின் அழகிரிசாமி அவர்களின் படத்தைத் திறந்து வைக்குமாறு அவரைக் கேட்டுக்கொள்கிறேன்’’
‘விடுதலை’ – 8.8.1949