பெரும்பான்மையான உழைக்கும் மக்களை தீட்டானவர்களாக கருதிய சமூகச் சூழல்கள் பல ஆண்டுகளாக இந்த நாட்டில் நீடித்து வந்தது. பிறப்பால் உயர்ந்தோர் என தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்வோர் பெரும்பான்மை மக்களை இழிமக்களாக கருதிய மனப்போக்கு இன்றளவும் நீடிக்கிறது. இந்த இழிநிலை களையப்பட வேண்டும் என நாடு தழுவிய அளவில் கவனத்தை ஈர்த்த முதல் மனித உரிமைப் போராட்டம் வைக்கம் போராட்டமாகும்.
‘தீட்டு’ மூவகை
அன்று நிலவிய சமூகத் தீட்டு என்பது மூன்றுவகையிலானது. தொட்டால் தீட்டு (Untouchability) இழிநிலை மனிதர்களாக அடக்குமுறைக்கு ஆளான மக்கள் தொட்டால் உயர்நிலை என தங்களைக் கருதிக் கொண்ட மக்கள் தீட்டாகி விடுவார்களாம். அடுத்து, ‘பார்த்தால் தீட்டு’ (Unseeability). சில வகை அடக்கு முறைக்கு ஆட்பட்ட மக்களைப் பார்த்த நிலையில் அடக்கிய மக்கள் தீட்டாகி விடுவார்களாம். பார்வையில் படக் கூடாது என்றால் பகலில் நடமாடக் கூடாது; இரவில்தான் அந்த ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக உழைத்திட முடியும். உழைப்பில் கூட நிலவிய ஒடுக்குமுறை இது. மூன்றாவது வகை – உயர்வு நிலை மக்கள் பயன்படுத்திடும் பொதுப் பாதையை, பொதுக் குடிநீர் நிலையை ஒடுக்கப்பட்ட மக்கள் பயன்படுத்தினாலே அந்தப் பாதை, நீர்நிலை ஆகியவை உயர்நிலை மக்கள் பயன்படுத்தப்பட முடியாதபடி தீட்டாகிவிடும். எனவே, அந்தப் பொதுப் பாதை பொதுக் குடிநீர்நிலை ஒடுக்கப்பட்ட மக்களால் நெருங்கக் கூட முடியாத வகையிலானது. நெருங்கினால் தீட்டு. (Unapproachability).
மனித உரிமைப் போராட்டம்
இப்படியான மூன்று வகைப்பட்ட ‘தீட்டுகளில்’, ‘நெருங்கினால் தீட்டு’ என்பதை எதிர்த்து வெற்றி அடைந்த போராட்டம்தான் வைக்கத்தில் நடைபெற்றது 1924ஆம் ஆண்டில். இன்றைய கேரள மாநிலம் – அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நேரடி ஆட்சிக்குட்பட்ட வைக்கம் ஊரில் இருந்த மகாதேவர் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ‘தாழ்த்தப்பட்டவர்கள்’ எனக் கருதப்பட்ட மக்கள் நடக்கக் கூடாது என்ற வழக்கம் நிலவி வந்தது. சமஸ்தானம் முழுவதும் அப்படிப்பட்ட நிலைமை நிலவி வந்ததை எதிர்த்து அடையாளமாக – தொடக்கமாக வைக்கத்தில் போராட்டத்தைத் தொடங்கினர் அப்பொழுது கேரளாவைச் சார்ந்த முற்போக்கு சிந்தனையாளர் பலர்; பெரும்பான்மையினர் காங்கிரசு இயக்கத்தைச் சார்ந்தவர்கள். ஆனால், காந்தியாரின் ஆதரவு வேண்டும் என போராட்டக்காரர்கள் முயற்சி செய்தபொழுது காந்தியார் அதற்கு சம்மதிக்கவில்லை. நடத்திடவிருந்த போராட்டம் கோவிலுக்குள் நுழைய அல்ல; கோயிலைச் சுற்றியுள்ள பொதுப் பாதை அனைவரது பயன்பாட்டுக்கும் வர வேண்டும் என்பதுதான்; இருப்பினும் காந்தியார் அந்தப் போராட்டத்திற்கு மதத்தில் குறுக்கீடு கூடாது என ஆதரவு தரவில்லை.
போராட்டக்காரர்கள் அமைதி வழியில் போராட முனைந்து – பொதுப் பாதையை பயன்படுத்திட முனைந்தபொழுது அடுத்தடுத்து சிறையில் அடைக்கப்பட்டு போராட்டம் முடக்கப்படும் நிலை உருவாகிவிட்டது. சிறையிலிருந்தபடி போராட்டத் தலைவர்கள் அந்த சமயம் சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த தந்தை பெரியாருக்கு கடிதம் எழுதுகின்றனர்; அவர் வைக்கம் வந்து போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திட வேண்டும் என்று – தமிழ்நாட்டில் பிரச்சாரப் பயணத்தில் இருந்த பெரியார் கடிதம் கண்டவுடன், ஈரோடு சென்று தோழர்களை அழைத்துக் கொண்டு வைக்கம் செல்கிறார்;
வைக்கம் வந்தவருக்கு ராஜாவின் வரவேற்பு
வைக்கம் வந்தவருக்கு, திருவிதாங்கூர் ராஜா சார்பாக வரவேற்பு அளித்திட காத்திருந்தனர்; சென்னைக்குப் பயணமாக ராஜா ரயிலில் செல்லும்பொழுதெல்லாம் ஈரோட்டில் பெரியார் அவர்களின் சத்திரத்தில் தங்கிவிட்டுச் செல்லுவது வழக்கமாம்; அப்படிப்பட்ட விருந்தோம்பிய பெரியாருக்கு அரசு மரியாதை தர விரும்பினார் ராஜா. வரவேற்க வந்தவர்களிடம் தான் ராஜாவின் விருந்தினராக வரவில்லை; வைக்கத்தில் போராட்டம் நடத்திட வந்துள்ளேன்; ராஜாவுக்கு எனது நன்றியினை தெரிவித்து விடுங்கள் என வரவேற்க வந்தவர்களிடம் சொல்லிவிட்டு பெரியார் போராட்டக் களம் இறங்கினார். இரண்டு முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்; முதல் முறை சிறை சென்ற பொழுது போராட்டத்தைத் தொடர்ந்திட தனது மனைவி நாகம்மையார் அவர்களை வைக்கத்திற்கு வரவழைத்து போராடச் செய்கிறார். ஆண்கள் போராட்டம் என்பது பெண்கள் போராட்டமாக வடிவெடுக்கிறது.
கட்சி எல்லைகளைக் கடந்த போராட்டம்
தமிழ்நாட்டில் காங்கிரசுக் கட்சித் தலைவராக இருந்தும், கட்சியின் ஆதரவில்லாமல், தான் தலைவராக – ஏற்றுக் கொண்டிருந்த காந்தியாரின் ஆதரவு இல்லாத நிலையிலும் – போராட்டத்தின் நோக்கம் கருதி தனி மனிதராக களம் இறங்கி போராட்ட வெற்றிக்குப் பாடுபட்டார் தந்தை பெரியார்.
ஏறக்குறைய ஓராண்டு தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் வெற்றி பெறும் நிலை உருவான நிலையில் காங்கிரசுக் கட்சியில் இருந்த ஆதிக்க சக்திகள் காந்தியாரை வைக்கம் பிரச்சினையில் ஈடுபட வைக்கின்றனர். போராட்டத்தின் தொடக்க நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் சீக்கியர் பலர் வைக்கம் வந்து போராட்டக்காரர்களுக்கு உணவு தயாரித்து உறுதுணையாக இருந்தனர். ஆனால், காந்தியார், பிற மாநிலத்தவர், பிற மதத்தவர் வைக்கம் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது எனக் கூறியதால் அந்த சீக்கியர்கள் திரும்பிச் செல்ல நேர்ந்தது. அப்படிப்பட்ட காந்தியார் இறுதியில் வைக்கம் பிரச்சினை குறித்து திருவிதாங்கூர் ராணியிடம் பேச்சு வார்த்தைக்கு செல்கிறார்.
பேச்சு வார்த்தையில் பின்னிலைப்படுத்தப்பட்ட பெரியார்
பேச்சு வார்த்தையின்பொழுது ‘தெருவில் நடக்க அனுமதி அளிக்கிறோம்; இதைக் காரணமாக வைத்து கோயிலுக்குள் நுழைவோம் என அந்தப் போராட்டக்காரர்கள் அடுத்த கட்டத்திற்குச் செல்வார்களே! என ராணியார் கூறினார்.
காந்தியார், அரசு விடுதியில் இருந்த பெரியாரிடம் ராணியாரின் கூற்றினைச் சொன்னபொழுது ‘இப்போதைக்கு தெருவில் நடந்து செல்ல மட்டும்தான் போராட்டம்; இதுவே பின்னாளில் கோயில் நுழைவுப் போராட்டமாக மாறும்’ என்று பெரியார் கூறுகிறார். ராணியாரிடம் போராட்டக்காரர்களின் நிலை குறித்து – பெரியார் கூறியது சொல்லப்படுகிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் கோயிலைச் சுற்றியுள்ள தெருவில் நடக்க அனுமதி வழங்கப்படுகிறது. வைக்கம் போராட்டம் வெற்றி பெறுகிறது. நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கிறது.
போராட்டச் சிறப்புகள்
வைக்கம் போராட்டம். தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டம் அல்ல. மலையாளம் பேசக்கூடிய மக்கள் மத்தியில் ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்து போராட்டக் கனலை மக்கள் மனதில் பற்ற வைத்தவர் பெரியார்.
பெரியார் அவர்கள் தொடங்கிய போராட்டம் அல்ல அது. மலையாள நாட்டவர் தொடங்கிய போராட்டம். தொய்வு ஏற்பட்ட நிலையில், அங்கு சென்று எழுச்சிப் போராட்டமாக மாற்றியவர் பெரியார்.
போராட்டத்தில் இரண்டு முறை சிறை சென்ற தலைவர் தந்தை பெரியார். இரண்டாம் முறை சிறை சென்றபொழுது அரசியல் கைதியாக அல்லாமல் சமூகக் குற்றமிழைத்த கைதி போல உடையணிந்து கடுந்தண்டனையுடன் சிறையில் கைதி வேலைகளையும் செய்த போராளி தந்தை பெரியார்.
வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியாரின் ஈடுபாட்டை குறைத்திட ஆதிக்க சக்திகளும் சென்னை மாகாண ஆட்சியாளர்களும் பல்வேறு வழக்குகள் தொடர்பாக அவரை தமிழ்நாட்டிலேயே தங்க வைத்திட திட்டம் தீட்டி செயல்பட்ட நிலையிலும் அவைகளையும் நேர்கொண்டு, வைக்கம் போராட்டத்தினைத் தொய்வின்றி நடத்தி வெற்றிக்கு ஆதாரமாக இருந்தவர் தந்தை பெரியார்.
அம்பேத்கருக்கு உந்து சக்தி
இப்படிப்பட்ட திருப்பங்கள் பல கண்ட வைக்கம் போராட்டமே மனித உரிமைக்காக நாட்டிலேயே முதன்முதலாக நடத்தப்பட்ட போராட்டமாகும். இந்த வைக்கம் போராட்டம்தான் – புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் தாம் நடத்திய மகத் போராட்டத்திற்கு (பொதுக்குளத்தில் குடிநீர் எடுக்கும்) உந்துசக்தியாக, முன் மாதிரியாக இருந்ததாக கூறியது – வைக்கம் போராட்டத்தின் சிறப்பினைப் பறைசாற்றுவதாக உள்ளது.
ஒரு புரட்சியாளரின் சிறப்பினை மற்றொரு புரட்சியாளர்தான் அடையாளம் காண முடியும்; காணுவார்; ஆதிக்க சக்திகள் நிச்சயம் அலட்சியம் செய்துவிடுவர். இன்றும் அலட்சியப்படுத்திடும் வடிவங்கள் மாறினாலும் – கேரள மாநில அரசு வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவினை ஏப்ரல் 1ஆம் நாள் தொடங்கி 603 நாள்கள் மாநிலம் முழுவதும் நடத்திட முன்னெடுத்திருப்பது போராட்டத்தின் பலனைப் பெற்ற, பெற்றுக் கொண்டிருக்கிற மக்களின் நன்றி நிலையினைக் காட்டுவதாகவே கருத வேண்டும்.
வெற்றி விழாவில் பெரியார்
ஆரம்ப நிலையில் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்காத காந்தியார் – போராட்டத்தைக் கைவிடக் கோரிய காந்தியார், தொடர்ந்து போராட்டம் நடந்து வெற்றி பெறக் கூடிய சூழலில் பேச்சுவார்த்தைக்கு வருகிறார். போராட்டக் காலத்தில் முதன்மையாக இருந்த பெரியாரை முன்னிலைப்படுத்தாத பேச்சு வார்த்தையிலும், காந்தியாருக்கு ஆக்கரீதியாக – அதே வேளையில் தமது கொள்கையிலும் சமரசம் செய்து கொள்ளாமல் தள்ளி இருந்தே வெற்றி கண்ட தகைமையாளர் தந்தை பெரியார்.
வைக்கம் போராட்ட வெற்றி விழாவில் தமிழ்நாட்டிலிருந்து தனது துணைவியார் நாகம்மையார் அவர்களுடன் சென்று பங்கேற்ற பெருமையாளர் பெரியார். வெற்றி விழாவிலும் பெரியாரின் பங்கேற்பு, தலைமைக்கு போராட்டக்காரர்கள் நன்றி காட்டினர்.