ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் பார்ப்பனர்கள் சங்க மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொண்ட ஒன்றிய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதைக் கேளுங்கள்! கேளுங்கள்!!
“நண்பர்களே உங்களுடைய உற்சாகம், சக்தி இரண்டுமே நாம் பிராமணர்கள் என்ற ஒற்றுமை தான்.நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லவும், இங்கு நமக்கு எதிராக நடக்கும் அநீதியை எதிர்ப்பதற்கும் எப்பொழுதும் நமது ஒற்றுமையும் புத்திசாலித்தனமும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
நீங்கள் தான் இந்தியாவின் “நம்பிக்கையின்” பாது காவலர்கள். கடவுள் சிவனிடம் பெற்ற “கோடாரி” என்ற ஆயுதத்தால் பகவான் பரசுராமன் நமது பிராமணர்களையும் அவர்களின் மதத்தையும் பாதுகாத்தார் என்பதை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்
ராஜஸ்தான் மாநிலத்திற்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே பட்ஜெட்டில் ரூ.650 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. தற்பொழுது ரூ.9,532 கோடி பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக் காலத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பெரிய பட்ஜெட்டை பகவான் பரசுராமனுக்கு அர்ப்பணிக்கிறேன், பரசுராமரின் அருளாசி நம்மிடையே என்றும் நிறைந்திருக்கிறது, அவர் நம்மைப் பாதுகாப்பார்” என்று கூறியுள்ளார்.
(டைம்ஸ் ஆஃப் இந்தியா – 20.03.2023)
மதச்சார்பின்மை அடிப்படையில் அமைந்த இந்திய அரசியல் சாசனத்தின் பேரால்,
ஒன்றிய அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டு இந்திய மக்களை மதத்தின் அடிப்படையில், ஜாதியின் அடிப்படையில், அணி திரட்டிப் பிளவு படுத்தியுள்ளார்.
இவர் மட்டுமல்ல நாடாளுமன்ற – மக்களவை யின் தலைவராக இருக்கக் கூடிய ஓம்பிர்லா ஜெய்ப்பூர் (11.9.2019) பார்ப்பனர்கள் மாநாட்டில் என்ன பேசினார்?
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் அகில பார்ப்பன மகாசபைக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஓம் பிர்லா கலந்து கொண்டு உரையாற்றினார். அக்கூட்டத்தில் பிர்லா பேசுகையில், “மற்ற சமூகத்தினரின் முன்னேற்றத்துக்காக எப்போதும் உழைக்கும் ஒரு சமுதாயம்தான் பிராமண சமுதாயம். நாட்டுக்கே வழி காட்டிய சமுதாயம் பிராமண சமுதாயம். கல்வியையும், நெறிகளையும் சமூகத்தில் பரவித் தழைத்தோங்கச் செய்தது பிராமண சமுதாயம்தான். இன்றுகூட ஒரு கிராமத்தில் ஒரே ஒரு பிராமணக் குடும்பம் இருந்தாலும்கூட மற்றவர்களைவிட அந்தக் குடும்பம் கல்வியிலும், தியாகத்திலும், சேவை மனப்பான்மையிலும் உயர்ந்ததாக இருக்கும். பிராமணர்கள் பிறப்பாலேயே மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் ஆவர்” என்று கூறியதோடு நிற்கவில்லை.
இதுதொடர்பாக முகநூலிலும் டிவிட்டரிலும் கூடஅவர் கருத்து கூறியிருந்தார். அதில், “பிரா மணர்கள் தங்களது தியாகத்தாலும், அர்ப்பணிப்பு உணர்வாலும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளனர். இதனால்தான் மற்றவர்களுக்கு வழி காட்டியாக அவர்கள் திகழ்கின்றனர்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
கேரளாவில் நடைபெற்ற பார்ப்பனர் சங்க மாநாட்டில் கேரள உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரும் கலந்து கொண்டு பேசி இருக்கின்றனர்.
“இப்பொழுதெல்லாம் பார்ப்பனர் பிரச்சினை ஏது சார்?” என்று மே(ல்)தாவியாகப் பேசும் பார்ப்பனர் அல்லாத தோழர்கள் மேலே எடுத்துக் காட்டப்பட்டுள்ள தகவல்களை நுனிப்புல் மேயாமல் ஆழமாக சிந்திக்க வேண்டும் என்பதே நமது எதிர்ப்பார்ப்பு!