புதுடில்லி, மார்ச் 25- காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: மேனாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தி, ராகுல் காந்தி குறித்து பாஜக தலைவர்கள் மிக மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர். இப்போது வரை விமர்சனம் தொடர்கிறது.
இதுதொடர்பாக காங்கிரஸ் தரப்பில் அவதூறு வழக்குகள் தொடரப்படவில்லை. ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் மீது பல்வேறு நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
சூரத் நீதிமன்ற தீர்ப்பு, எம்பி தகுதி நீக்கம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள், சட்ட நிபுணர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் ராகுல் காந்தி மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்வார். அவருக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம். மேலும் நாடு முழுவதும் சாலை, தெருக்களில் இறங்கி காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். இது சிறை நிரப்பும் போராட்டமாக இருக்கும். இவ்வாறு காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதை உறுதி செய்யும் வகையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, “ஜனநாயகத்தை காப்பாற்ற சிறைக்கு செல்லவும் தயாராக உள்ளோம்’’ என்று தெரிவித்தார். காங்கிரஸ் சார்பில் தலைநகர் டில்லி உள்பட நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதோடு சமூக வலைதளங்களிலும் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் தொடங்கப்பட்டிருக்கிறது.