(20.01.1947 அன்று ஈரோட்டிற்குப் பதினேழு கல் தொலைவில் உள்ள காஞ்சிக் கோவில் என்னும் ஊரில் பி.சண்முகவேலாயுதம் தலைமையில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)
சாமி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, சுயராஜ்யம் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, இந்த நாட்டுப் பழம் பெரும் குடிமக்களாகிய நாம் 100-க்கு 90 பேர் கொண்ட திராவிடர்கள் சூத்திரர் அல்லர், அடிமைகள் அல்லர், பஞ்சமர் அல்லர், கடை ஜாதியார் அல்லர், மக்களை ஏமாற்றி வஞ்சித்துப் பாடுபடாமல் வயிறு வளர்க்கும் சோம்பேறிக் கூட்டத்தவரான பிராமணர் அல்லர், மேற்ஜாதியார் அல்லர், யாவரும் ஒரு குல மக்களே! சரிநிகர் மக்களே யாவரும் என்று ஆகவேண்டும். இதுதான் திராவிடர் கழகத்தினரின் முதலாவதும், முக்கியமுமான குறிக்கோளாகும்.
இதற்கு நீங்கள், பார்ப்பனப் பித்தலாட்ட ஸ்தாபனம் எதுவானாலும் அதிலிருந்து விலகி ஆகவேண்டும். பார்ப்பன கடவுளும், பார்ப்பன மதமும், பார்ப்பனத் தேசிய (சுயராஜ்ய)மும் தான் நம்மை இன்று இந்த இழிநிலைக்கு ஆளாக்கிவிட்டன என்பேன்!
பார்ப்பனரில் இன்று 100-க்கு 100 பேர் படித்து இருக்கிறார்கள். திராவிடர்களாகிய கவுண்டர்கள், காணியாளர்களாகிய நீங்கள் 100-க்கு 90 பேர் படிப்பில்லாத, கைநாட்டுத் தற்குறிகள்! ஏன் என்று எந்தப் பார்ப்பானையாவது கேட்டீர்களா? நீங்களாவது யோசித்தீர்களா? ஏதோ ஒரு கவுண்டர் சட்டசபை மெம்பர், ஜில்லா போர்டு பிரசிடெண்ட், பிளாக் மார்க்கெட்டில் லட்சக்கணக்காக கொள்ளையடித்தால் போதுமா?
பார்ப்பான் உழுகின்றானா?
பார்ப்பான் பாடுபடாமல் கையில் மண்வெட்டி, கலப்பை, ஏர் தொடாமல் இந்தப்பஞ்ச காலத்தில் வயிறு வீங்க சாப்பிட்டுக் கொண்டிருக்கவும், நீங்கள் எப்படிப்பட்டவர்களானாலும், காட்டுவேலை, மூட்டை தூக்கும்வேலை, ஆகிய உடலுழைப்பு வேலைகள் செய்து அரிசி, பருப்பு, துணிக்குத் திண்டாடவும், அதிகாரிகள் உங்களை மிருகங்களிலும் கேவலமாய் நடத்தவும், 100-க்கு 90 மக்கள் இருக்கிறீர்களே! ஏன்? என்று உங்கள் சட்டசபை மெம்பர்களை, பிரசிடெண்டுகளை, கள்ளமார்க்கட் இளவரசர்களைக் கேட்டீர்களா? பார்ப்பனத் தாய்மார்கள் 18 முழம் சேலைபட்டு, ஜரிகைத்துணி ரவிக்கை, வைரம், செம்பு, தங்கம், மின்னல் நகைகளைப் போட்டுக்கொண்டு குலுக்குநடை நடக்கவும், உங்கள் தாய், தங்கை, குழந்தைமார்கள் கிழிந்த ஜால்ரா துணி கட்டிக்கொண்டு ஒரு பக்கம் இழுத்தால் ஒரு பக்கம் நழுவும்படி, புல்லும், விறகும், சுப்பியும் சுமந்து தினம் 4, 5 மைல் நடக்கவும் ஆடு, மாடு மேய்த்துப் பால், தயிர், வெண்ணெய் சேர்த்துப் பார்ப்பனர், பட்டணத்தவர் வயிறுகள் என்னும் டாங்கியில் கொட்டிவிட்டு எலும்புக்கூடு தெரியும்படி திண்டாடுகிறார்களே, ஏன் என்று கேட்டீர்களா? ஒருவர் இருவர் மெத்தை வீடு கட்டிக்கொண்டு மோட்டார், குதிரை வண்டி வைத்துக்கொண்டு,பணம் சேர்த்து பிரபு
வாகுமாறு, பார்ப்பான் இடம் கொடுத்துவிட்டால் போதுமா?
இப்போது தெரிகிறதா, சாமி பேராலும் சுயராஜ்யத்தின் பேராலும் பார்ப்பனர் செய்யும் பித்தலாட்டமும், சாமி இல்லை என்கிறவனும் நாட்டைக் காட்டிக் கொடுத்தவனுமான ராமசாமி வருகிறான், வரவேற்காதீர்கள், அவன் கூட்டத்திற்குப் போகாதீர்கள் என்று பார்ப்பனர்களும் அடிமைகளும் சுவர்களில் செம்மண்ணால் எழுதியதின் இரகசியமும்? என்று கேட்கிறேன்.
(பெரியார் தமது கோஷ்டியாருடன் காஞ்சிக்கோவிலில் செல்லும்பொழுது சுவரில், சாமி இல்லை என்று சொல்லும் பாவி ராமசாமி ஒழிக என்று ஒருசில இடங்களில் எழுதியதற்குப் பதில்கூறும் முறையில் பெரியார் தமது சொற்பொழிவைத் துவங்கினார்.)