திருப்பங்கள் எங்கெங்கே சமூகத்தில் ஏற்படுகின்றதோ, அத்தனையும் வரலாறுதான்!
திராவிட இயக்கத்திற்குப் பயன்படக்கூடிய பணிகளைச் செய்யுங்கள்; பெரியார் திடலை நோக்கி வாருங்கள்!
சென்னை, மார்ச் 26 திருப்பங்கள் எங்கெங்கே சமூகத்தில் ஏற்படுகின்றதோ, அத்தனையும் வரலாறு தான்! திராவிட இயக்கத்திற்குப் பயன்படக்கூடிய பணிகளைச் செய்யுங்கள்; பெரியார் திடலை நோக்கி வாருங்கள்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் படத்திறப்பு – நினைவேந்தல்
கடந்த 23.3.2023 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற மறைந்த பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நினைவேந்தல் உரையாற்றினார்.
அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி
வருமாறு:
மகளை மருத்துவராக்கினாரே தவிர, தன்னுடைய உடல்நிலையின்மீது அவர் கவனம் செலுத்தவில்லை!
தன்னைப்பற்றியோ, தன் உடல்நிலையைப்பற்றியோ அவர் எடுத்துக்கொள்ளவேண்டிய கவலையை எடுத்துக் கொள்ளவில்லை. மகளை மருத்துவராக்கினாரே தவிர, தன்னுடைய உடல்நிலையின்மீது அவர் கவனம் செலுத்தவில்லை.
உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப் பதைப்பற்றி கவலைப்படாமல் இருந்தவர். ஒருமுறை அவரை அழைத்து, என்னுடைய மருத்துவர் ஒருவர், சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் அவர். அவரிடம் சென்று சிகிச்சை பெறுங்கள்; ஏன் இவ்வளவு அலட்சி யமாக இருக்கிறீர்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.
ஓர் அன்பான வேண்டுகோள்!
இங்கே இவருடைய படத்தைப் பார்க்கும்பொழுது, பல நினைவுகள் வருகின்றன. பொதுவாழ்க்கையில் அவ ருடைய தொண்டறம், அவருடைய சிறப்பு, அவருடைய பெருமைகள் இவற்றையெல்லாம் கற்பதைவிட, இன் னொன்றையும் கற்றுக்கொள்ளவேண்டும். அவருடைய வாழ்க்கை ஈடுபாடு, நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, வாழ்க்கையை அமைத்துக் கொண்டது இவையெல்லாம் மிகச் சிறப் பானவை என்று சொன்னாலும், இங்கே வந்திருக்கின்ற வர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் – பகுத்தறி வாளரில் ஒருவரை நாம் இழந்தோம் என்று சொன்னால், சுயமரியாதைக்காரர்களில் ஒருவரை நாம் இழந்தோம் என்று சொன்னால், அவர் திராவிடர் கழகத்தில் உறுப்பினரா? உறுப்பினர் இல்லையா? என்பது முக்கிய மல்ல. ஒரு பகுத்தறிவாளர், ஒரு சுயமரியாதைக்காரர் – அவர் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம்; கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கலாம். அது நமக்கு முக்கியமல்ல. மனிதர்கள் என்று வருகின்ற நேரத்தில், அப்படிப்பட்டவர்களை நாம் இழந்தால், சமூக விஞ்ஞானிகளை இழக்கின்றோம் என்று அர்த்தம்.
ஒரு சமூக விஞ்ஞானியை வளர்ப்பது என்பதும், அந்த விஞ்ஞானி கிடைப்பது என்பதும் சாதாரண மானதல்ல.
ஒரு சமூக விஞ்ஞானி என்பவர், தன்னுடைய புகழைப்பற்றி கவலைப்படாதவர். தன்னுடைய பெருமைகளைப்பற்றி நினைக்காமல், உண்மைகளை மட்டுமே பேசுவார். கேட்டால், கேளுங்கள், கேட்கா விட்டால் போங்கள்; அதுபற்றி கவலையில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அந்த உணர்வுகளைப் படைக்கக்கூடிய வாய்ப்புப் பெற்றவர்கள்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், உங்களையெல்லாம் அன்போடு வேண்டிக் கேட்டுக்கொள்வது என்னவென் றால், உங்கள் உடல்நலத்தை நீங்கள் அலட்சியப் படுத்தாதீர்கள்.
மீண்டும் கரோனா தொற்று பரவுகிறது, ஆகவே எல்லோரும் முகக்கவசம் அணியவேண்டும் என்று சொன்னால், பரவாயில்லை, நாம் ஒருவர் அணியாவிட் டால் என்னவாகப் போகிறது என்று நினைத்து, எல்லோரும் முகக்கவசம் அணியாமல் வந்தால் எப்படி இருக்கும்?
இது அறிவுப்பூர்வமான விஷயம். அதில் போய் நாம் பரிசோதனை செய்யவேண்டிய அவசியம் கிடையாது.
ஆகவே, நாம் எந்த முறையில் வாழவேண்டுமோ அப்படி வாழவேண்டும்.
இரண்டு வகையான தாக்குதல்களை சமாளிக்கவேண்டியது இருக்கிறது
நோய்கள் என்பது உடலைத் தாக்குகிறது. நம்மைப் பொறுத்தவரையில், இரண்டு வகையான தாக்குதல்களை சமாளிக்கவேண்டியது இருக்கிறது. மூளையைத் தாக்கு கின்றவைகளையும் சமாளிக்க வேண்டி இருக்கிறது; உடலைத் தாக்கும் நோய்களையும் சமாளிக்கவேண்டி இருக்கிறது.
ஆகவேதான், அதில் மிக கவனமாக, எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
எனவே, அருள்கூர்ந்து நீங்கள் அனைவரும் உடல் பரிசோதனையை வயதானவர்களாக இருந்தாலும் சரி, இளைஞர்களாக இருந்தாலும் சரி, ஆண்டிற்கு ஒரு முறையோ, இருமுறையோ செய்து தங்களுடைய உடல்நலத்தைப் பாதுகாக்கவேண்டும்; அதிலும் குறிப்பாக மகளிர் உடல்நலம் மிகவும் முக்கியம்.
ஆண்களைப்பற்றி, அதிகம் பெண்கள் கவலைப்படு கிறார்களே தவிர, தங்களுடைய உடல்நலத்தைப்பற்றி கவலைப்படுவதில்லை. இது மிகப்பெரிய குறை பாடாகவே இருக்கிறது.
ஒவ்வொரு நாளும் உழைக்கக்கூடியவர் மங்களமுரு கேசன் அவர்கள். எத்தனையோ புத்தகங்களை எழுதி யிருக்கிறார். அதன்மூலமாக அவர் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.
இங்கேகூட நம்முடைய மா.செ. அவர்கள் ஒன்றைச் சுட்டிக்காட்டினார். நான் நினைத்துக் கொண்டிருந்ததை, இங்கே அவர் சொன்னார்.
மங்கள முருகேசன் 185 புத்தகங்களுக்குமேல் எழுதியிருக்கிறார். 40 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.
நம்முடைய நன்றியை உரித்தாக்குகின்றோம், முதலமைச்சருக்கு!
நம்முடைய முதலமைச்சர் அவர்கள், அவர்களுக்கே உரிய பெருந்தன்மையோடும், தனித்தன்மையோடும், திராவிட இயக்கத்தில் யார் யாரெல்லாம் ஈடுபட்டார் களோ, அவர்கள் மறையும்பொழுது, அவர்களுடைய வீட்டிற்குச் சென்று, இறுதி மரியாதை செலுத்துகிறார்.
அதற்காக அந்தக் குடும்பத்தின் சார்பாக மட்டுமல்ல, இயக்கத்தின் சார்பாகவும் அவருக்கு நாம், நம்முடைய நன்றியை உரித்தாக்குகின்றோம்.
நான் வழிமொழியக் கடமைப்பட்டு இருக்கிறேன்!
அந்த வகையில், பேராசிரியர் மா.செ. அவர்கள் சொன்னதைப்போல, மங்களமுருகேசன் அவர்களு டைய நூல்களை, நாட்டுடைமையாக்கவேண்டும் என்று சொன்னார். அவர் சொன்னதை நான் வழிமொழியக் கடமைப்பட்டு இருக்கிறேன்.
நானே முன்மொழிய வேண்டும் என்று நினைத்தேன்; அவர் முந்திக்கொண்டார். ஆகவே, யார் சொல்வது என்பது முக்கியமல்ல.
”எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு!”
மங்களமுருகேசன் அவர்களுடைய நூல்களை, அரசுடைமையாக்கவேண்டும்!
ஆகவே, நிச்சயம் அதனை இந்த அரசு செய்யும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஏனென்றால், ஏற்கெனவே பல பேருக்கு அதனை செய்திருக்கிறார்கள். அது ஒரு தொடர் பணியாக இருந்துகொண்டிருக்கின்ற காரணத்தால், மங்களமுருகேசன் அவர்களுடைய நூல்களை, அரசுடைமையாக்கவேண்டும்.
எதற்காக என்றால், அது பணத்திற்காக அல்ல – அந்தக் கருத்துகள் பரவவேண்டும்; அவருடைய உழைப்பின் பெருமையை, வருகின்ற சந்ததிகள், வாழ் கின்ற சந்ததிகள் மட்டுமல்ல; வாழ்ந்த சந்ததிகள், வாழ் கின்ற சந்ததிகள், வாழப் போகின்ற சந்ததிகளும் தெளி வாகத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம்.
பல நேரங்களில் நம்முடைய பணி, இந்தத் தலை முறைக்காக மட்டுமல்ல; வரப்போகின்ற தலைமுறை களுக்கும் சேர்த்துத்தான் இந்தப் பணியை நாம் செய்துகொண்டிருக்கின்றோம்.
மங்களமுருகேசன் அவர்கள் எந்தப் பணியானாலும், மிகவும் கடுமையாக உழைக்கக் கூடியவர். பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில், நான் ஒரு பணியைக் கொடுத்தேன்.
‘‘உலகத் தலைவர் பெரியார் – பன்னாட்டு சிந்தனைகள்
ஓர் ஒப்பீடு’’
பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் என்ற மய்யத்தின் சார்பாக, அய்யாவினுடைய சிந்தனை கள், ஆய்வுகள்குறித்து, கருத்தரங்கம் நடத்துவோம். ”உலகத் தலைவர் பெரியார் – பன்னாட்டு சிந்தனைகள் ஓர் ஒப்பீடு” என்ற ஆய்வுக் கோவையை – இவ்வளவு பெரிய புத்தகத்தை தொகுப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருந் தவர் பேராசிரியர் மங்களமுருகேசன் அவர்களா வார்கள்.
அவருடைய வேகத்திற்கு இந்தப் புத்தகம் அச்சாகவில்லை.
என்னங்க, தொகுத்து எவ்வளவு நாட்களாயிற்று; இன்னும் அந்தப் புத்தகம் வெளிவரவில்லையே என்பார்.
ஒரு தேனீ போன்று சுறுசுறுப்பாக பணியாற்றக் கூடியவர். உழைப்பது குறித்து அவர் கவலைப் படமாட்டார்.
பெரியார் திடலில் நடைபெறும் இயக்க நிகழ்ச்சிகளுக்கும் வருவார்; பார்வையாளராக இருந்து பார்த்து, அந்நிகழ்ச்சிகள்பற்றி கட்டுரை எழுதுவார்.
பேசிக்கொண்டிருக்கும்பொழுது ஒரு செய் தியை சொன்னால்கூட, உடனே உள்வாங்கி, அதை பயன்படுத்திக் கொள்வார்.
ஆண்டு தவறாமல் மலர் வெளியிடுகின்ற நாளிதழ் விடுதலை!
நான் இயக்கத்தில் பொறுப்பேற்றதுமுதல் 60 ஆண்டு களுக்குமேல் ‘விடுதலை’ மலரை வெளியிடுகிறோம். ஆண்டு தவறாமல் மலர் வெளியிடுகின்ற நாளிதழ் என்றால், அது விடுதலை நாளிதழ்தான்.
அந்த விடுதலை மலரைப்பற்றி எழுத ஆரம்பித் தார்கள். முதலில் பேராசிரியர் இராமநாதன் அய்யா எழுத ஆரம்பித்தார், ”மலருடைய சிறப்புகள்” என்ற தலைப்பில்.
அவர் மறைந்தவுடன், பேராசிரியர் இறையன் அவர் கள் எழுதினார். அவருக்குப் பிறகு, கு.வெ.கி.ஆசான் அவர்கள் எழுதினார்.
அதற்குப் பிறகு, மலரைப்பற்றி மங்களமுருகேசன் அவர்கள் எழுதினார். மலரில் வெளிவந்த கட்டுரைகளின் சிறப்புகள் குறித்து மிகச் சிறப்பாக எழுதுவார்.
இயக்க நிகழ்ச்சிகளுக்கு வந்து, குறிப்பெடுத்து, மூன்று, நான்கு கட்டுரைகளாக எழுதுவார்.
நான் அவரிடம் சொல்வேன், ”என்னங்க நீங்க, மூன்று கட்டுரைகளாக எழுதவேண்டுமா? ஒரு கட்டுரையிலேயே முடிக்கலாமே?” என்பேன்.
”இல்லீங்க, உங்களுக்குத் தெரியாது. மற்றவர்களிடம் வரவேற்பு இருக்கிறது” என்று சொல்வார்.
இப்படி ஒவ்வொரு முறையிலும் பார்த்தீர்களே யானால், இந்த இயக்கத்திற்குக் கண்ணுக்குத் தெரியாத கருப்புச் சட்டை அணிந்தும், அணியாதவர் அவர்.
சென்னையில் நடைபெற்ற பல போராட்டங்களில், எங்களோடு பங்கேற்று, கைதாகி இருக்கிறார். இந்த விஷயம் பல பேருக்குத் தெரியாது.
திராவிடர் கழகப் போராட்டங்கள் எல்லாம் மிகவும் விசித்திரமாகவும், வித்தியாசமாகவும் இருக்கும்.
”எங்களை கைது செய்து உடனே விட்டுவிட வேண் டாம்; சிறைச்சாலையில் கொஞ்ச நாள் வையுங்கள்” என்போம்.
ஆனால், இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் ரிமாண்ட் செய்கின்ற பழக்கமே அரசாங்கத்திடம் குறைந்து போய்விட்டது.
சிறைச்சாலையிலேயே திருமணங்களை நடத்தியிருக்கின்றோம்!
முன்பெல்லாம் 15 நாள் ரிமாண்ட் செய்வார்கள். 15 நாள்கள் ஓய்வு எடுக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும். அங்கே நாங்கள் திட்டமிட்டு பயிற்சி வகுப்புகளை நடத்துவோம். ஏன், திருமணங்களையும் நடத்தியிருக்கின்றோம். அரசு செலவிலேயே சாப்பாடு, கரண்ட் செலவு, தங்கும் செலவு உள்பட.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு திரைப் படத்தில் சொல்வார், சிறைச்சாலையில் இருப்பவர்களின் உடம்புக்கு ஒண்ணு என்றால், உடனே டாக்டர் ஓடோடி வருவார் என்று.
சென்னையில் நடைபெற்ற ஒரு போராட்டத்தில், எங்களை கைது செய்து, ஒரு மண்டபத்தில் மாலை வரை வைத்திருந்தார்கள். அங்கே ஒவ்வொருவரும் உரை யாற்றினார்கள். அவரவர்களுடைய அனுபவங்களை யெல்லாம் சொன்னார்கள்.
இவற்றையெல்லாம் வரலாற்றுப் பேராசிரியரான அவர் தொகுத்து, இலக்கிய மணம் கமழ்வதுபோன்று, ஆக்கினார்.
வரலாறு என்பது, பாபர் வாழ்ந்தார், ஹூமாயூன் வாழ்ந்தார் என்பதுதான் வரலாறு என்று பல பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
திருப்பங்கள் எங்கெங்கே
சமூகத்தில் ஏற்படுகின்றதோ, அத்தனையும் வரலாறுதான்!
வரலாறு என்பது, அன்றாட வாழ்க்கையில் நடைபெறக்கூடிய சுவையான சம்பவங்கள், திருப்பங்கள் எங்கெங்கே சமூகத்தில் ஏற்படு கின்றதோ, அத்தனையும் வரலாறுதான்.
அவருடைய வாழ்க்கை என்பது எடுத்துக் காட்டான வாழ்க்கையாகும். அவருடைய இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத இழப்புதான்.
இங்கே இருப்பவருடைய படத்தைப் பார்த்து தோழர்கள் என்ன தெரிந்துகொள்ளவேண்டும்?
உடல்நிலைப்பற்றி சொன்னோம்; உழைப்பைப்பற்றி சொன்னோம்.
மூன்றாவது பாடம் என்னவென்றால், நம்முடைய ஜெகதீசன் அவர்கள் ஓர் அருமையான விஷயத்தைச் சொன்னார்.
சங்கராச்சாரி கைது ஆனது எதற்காக? குற்ற வழக்கில், கிரிமினல் வழக்கில்.
லட்சியத்திற்காகவோ, நாட்டிற்காகவோ போராடிய தற்காக அவரை கைது செய்யவில்லை. ஆனால், சங்கராச்சாரியாரை கைது செய்தபொழுது, பெரிய பெரிய தலைவர்கள் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
குடியரசுத் தலைவராக இருக்கக்கூடிய ஆர்.வெங்கட்ராமன் போன்றவர்கள், பெரிய மருத்துவ மனைக்குத் தலைவராக இருக்கக்கூடிய ஒரு பார்ப்பனரும் தலைமை வகித்தார்.
சங்கராச்சாரி ஜெயிலுக்குப் போனதையே இன்றைக்கு மறைத்துவிட்டார்கள். ஆனால், நம்மாட்கள் சிறைச் சாலைக்குச் சென்றுவந்தால், இவன் ஜெயிலுக்குப் போன வன்; இவன் குற்றம் செய்தவன் என்று சொல்லி, அவரு டைய பொதுவாழ்க்கையையே முடித்துவிடுகிறார்கள்.
ஆனால், அங்கே அதுபற்றி கவலைப்படாமல், ”கங்கா ஜலம்” இரண்டு முறை தெளித்தால், ”எல்லா பாவமும் நீங்கும்” என்று சொல்கிறார்கள்.
திராவிட இயக்கத்திற்குப் பயன்படக்கூடிய பணிகளைச் செய்யுங்கள்;
பெரியார் திடலை நோக்கி வாருங்கள்!
இந்தப் படத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டிய மூன்றாவது பாடம் என்னவென்றால், ஓய்வு பெற்றவர்கள், அறிவு, ஆற்றல் இவையெல்லாம் இருக்கக்கூடியவர்கள் – நமக்கு எல்லா வசதிகளும் இருக்கிறது; தேவைக்கேற்ப இருக்கிறது – கூடுமானவரையில் வாழ்க்கைக்குரியவை இருக்கிறது; குடும்பத்தை ஒழுங்குபடுத்திவிட்டோம் என்று நினைப்பவர்கள், பொதுத் தொண்டாற்றுங்கள். குறிப்பாக திராவிட இயக்கத்திற்குப் பயன்படக்கூடியபணிகளைச் செய்யுங்கள். பெரியார் திடலை நோக்கி வாருங்கள்!
எப்படி ஓய்வு பெற்ற பார்ப்பனர்கள், சங்கர மடத்தை நோக்கி, சங்கராச்சாரியாரை நோக்கிப் போகிறார்கள்; அதுபோல, பெரியார் திடலை நோக்கி வாருங்கள் என்பதைத்தான், மங்களமுருகேசன் படம் தெரிவிக்கிறது. அதனை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
இதை நாங்கள் வேண்டுகோளாக வைக்கின்றோம்.
யாருக்கு என்ன பதவி? யாருக்கு என்ன பெருமை? என்பதைப்பற்றி கவலைப்படவேண்டாம்.
மங்களமுருகேசன் எழுத்துகள் ஜீவனுள்ள எழுத்துகள்; காலத்தை வென்றவையாக இருக்கும்!
மங்களமுருகேசன் அவர்களுடைய தொண்டு என்றைக்கும் வாழும்; அவருடைய எழுத்துகள் ஜீவனுள்ள எழுத்துகள் காலத்தை வென்றவையாக இருக்கும்.
அப்படிப்பட்டவர்கள் மறைவதில்லை; என்றும் வாழ்வார்கள்.
”தமிழுக்குத் தொண்டு செய்பவன் சாவதில்லை” என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்.
மங்களமுருகேசன் அவர்கள் தமிழுக்கு மட்டு மல்ல, தமிழ்நாட்டிற்குத் தொண்டு செய்தார்; தமிழ் இனத்திற்குத் தொண்டு செய்தார்; தமிழனுடைய சுயமரியாதைக்கு அவர் மிக முக்கியமானவராக இருந்தவர்.
சுயமரியாதையால் அவருக்கு இழப்பு இல்லை; அவருக்கு இறப்பு இல்லை!
அவருடைய ஆய்வறிக்கையே Thesis) ”சுயமரியாதை இயக்கம்.” வாழ்க்கையும் சுயமரியாதைதான்.
அவர் இன்னும், மேலும் வளரவில்லையே என்று வருத்தத்தை சொன்னால், அதற்கும் அந்த சுயமரியாதை தான் காரணம் என்பது எல்லோருக்கும் தெளிவாகத் தெரியும்.
ஆகவே, சுயமரியாதையால் அவருக்கு இழப்பு இல்லை; அவருக்கு இறப்பு இல்லை.
அவர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்கிற எண்ணத்தைத்தான் நாம் ஒவ்வொருவரும் மனதில் வைத்துக்கொண்டு, இந்தப் படத்தைப் பார்த்து, பாட மாகப் பெறவேண்டும் என்று சொல்லுகிறோம்.
நான்காவது பாடம் என்னவென்று சொன்னால், அவர் தன்னுடைய மறைவிற்குப் பின்னால், மருத்துவ மனைக்கு அவருடைய உடலை அளிக்கவேண்டும் என்று பதிவு செய்திருக்கிறார்.
இறந்த பின்னர் உடலுக்கு சடங்குகள், உடலை அடக்கம் செய்வதற்கோ, எரியூட்டுவதற்கோ இடம் தேடுவது என்கிற சங்கடங்கள் இல்லாமல், ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி, சென்னை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள்.
தமிழ்நாடு அரசுக்கும் –
அமைச்சர் மா.சு. அவர்களுக்கும்
நன்றி சொல்லவேண்டும்!
இந்நேரத்தில் தமிழ்நாடு அரசுக்கும், குறிப்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருக்கும் நன்றி சொல்லவேண்டும். சென்னை பொது மருத்துவ மனைக்கு அவருடைய உடல் கொடுக்கப்பட்டது. அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை, அதிகாரிகள் வர மாட்டார்கள். அப்பொழுது நம்முடைய அமைச்சர் மா.சு. அவர்கள், குறிப்பிட்ட அதிகாரிகளிடம் சொல்லி, விடுமுறையாக இருந்தாலும், அந்த உடலைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னார்.
மறைந்தும், மறையாமல் வாழ்கிறார்;
இறந்தும், இறவாமல் வாழுகிறார்
மங்களமுருகேசன் அவர்கள் மறைந்தும் மறையாமல், ஒவ்வொருவரது நெஞ்சங்களிலும் வாழ்கிறார். அவரு டைய உடலின் ஒவ்வொரு பாகங்களும் மருத்துவ மாணவர்களுக்குப் பயன்படக் கூடிய அளவிற்கு, பல மருத்துவர்களை உருவாக்கக் கூடிய அளவிற்கு, அவர் மறைந்தும், மறையாமல் வாழ்கிறார். இறந்தும், இறவாமல் வாழுகிறார் என்பதுதான் அதற்கு அடையாளம்.
“பெரியார் உடல் உறுப்புக் கொடைக் கழகம்” என்ற ஒன்று இருக்கிறது.
உடல் உறுப்புகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக இன்றைக்குக் கொடையாக கொடுக்கிறார்கள்.
விழிக்கொடை கொடுப்பதின்மூலமாக, அவர் மறைய வில்லை வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதுபோல, சிறுநீரகக் கொடை என்றாலும் சரி, இதயத்தையும் கொடையாகக் கொடுக்கிறார்கள்.
மூளைச்சாவு ஏற்பட்டு ஒருவர் இறக்கும் தறுவாயில், உடல் உறுப்புக் கொடைகளைக் கொடுக்கிறார்கள்.
ரத்தத்தைக் கொடையாகக் கொடுக்கும்பொழுதே, அதில் ஜாதி ஒழிந்து போகிறது. மதம் ஒழிந்து போகிறது.
வாழ்க்கைத் தத்துவமே அதில் உள்ளே அடங்கியிருக்கிறது.
உடலைக் கொடையாகக் கொடுக்கும்பொழுது, மூடநம்பிக்கைகளும் ஒழிக்கப்படுகிறது!
இந்த சடங்குகளை செய்யவேண்டும்; அந்த சடங்குகளைச் செய்யவேண்டும்; எங்கள் முறைப் படி செய்ய வேண்டும்; உங்கள் முறைப்படி செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு இடமில்லாமல், உடலைக் கொடையாகக் கொடுக்கும்பொழுது, மூடநம்பிக்கைகளும் ஒழிக்கப்படுகிறது.
நாவலர் நெடுஞ்செழியன்
நாவலர் நெடுஞ்செழியன் சொல்வார், ”ஆதிகாலத்தில் பிணத்தைத் தூக்கிக் கொண்டு போவார்கள்; சுடுகாடு ஊருக்கு வெளியில் இருந்தது; அதனால், அங்கே உடல்மீது நெருப்பு வைக்கவேண்டும் என்பதற்காக, சக்கிமுக்கு காலத்தில், சுடுகாட்டில் அதற்கு வாய்ப்புக் குறைவு என்பதற்காக, உடலைத் தூக்கிச் செல்லும் பொழுதே நெருப்பை உண்டாக்கி, அந்த நெருப்பை கையில் எடுத்துச் செல்ல முடியாது என்பதற்காக, ஒரு பானையில் வைத்தான். அந்தப் பானையை கையில் தூக்கிக் கொள்ள முடியாது என்பதற்காக, வாழை மட்டையில் அந்தப் பானையை வைத்து எடுத்துச் சென்றான். அது அன்றைய காலத்திற்குச் சரி. இன்றைக்கு மின் மயமானத்திற்குச் செல்லும்பொழுதும், பானையில் நெருப்பை மூட்டி தூக்கிச் சென்றால், என்ன அர்த்தம்?” என்று கேட்பார்.
இதுதான் மூடநம்பிக்கை, இதுதான் சடங்கு, இதுதான் சம்பிரதாயம், இதுதான் சனாதனம் என்று சொல்லும் பொழுது, அந்த சனாதனத்திற்கே மின்மயானம் என்று வந்தபொழுது அது போய்விட்டது.
அந்த மின்மயானத்தில்கூட வரிசையில் காத்திருக்க வேண்டும்; அந்தப் பிரச்சினையையும் இப்பொழுது தீர்த்துவிட்டார்.
அவர் மறைவு என்பது சுலபமாக ஏற்றுக்கொள்ள முடியாததுதான். ஆனாலும், அவர் மறைவால் யாருக்கும் ஒரு தொந்தரவுகூட கிடையாது.
ஒரு மறைவைக்கூட நம்முடைய ஆட்கள் இன் னொரு கோணத்தில் சொல்வார்கள்; ”சாவு வந்தால், இப்படி வரவேண்டும்” என்பார்கள்.
அது ஒரு ஆறுதல் முறை. மறைவு என்பது மறைவுதான், அதிலொன்றும் சந்தேகமேயில்லை.
மறைந்தாலும், யாருக்கும் தொல்லையில்லாமல், மற்றவர்களுக்குப் பயன்படக்கூடிய அளவிற்குத் திகழ்ந்திருக்கிறார் மங்களமுருகேசன் அவர்கள்.
”செத்தும் கொடுத்தல்” என்பது இதுதான். இவர்கள் சீதக்காதிகளா இல்லையா என்பது முக்கியமல்ல.
இவர்கள் செத்தும் அறிவைக் கொடுக்கிறார்கள்; கல்வியைக் கற்றுக் கொடுக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது.
இது நான்காவது பாடம்.
எனவேதான், நாம் மறைந்தாலும்கூட, மற்றவர் களுக்குப் பயன்பட முடியுமா? என்று யோசியுங்கள், திட்டவட்டமாக – நம்முடைய உடலை மருத்துவ மனைக்குக் கொடுப்போம் என்ற உறுதிக்கு வாருங்கள்!
பெரியார் உடல் உறுப்புக் கொடைக் கழகத்தில்
நீங்கள் உறுப்பினராகுங்கள்!
பெரியார் உடல் உறுப்புக் கொடைக் கழகத்தில் நீங்கள் உறுப்பினராகுங்கள்! எழுதிக் கொடுங்கள்! அதன்மூலமாகப் பாடத்தைப் பெறுங்கள்!
மங்களமுருகேசன் அவர்கள் என்றைக்கும் அவருடைய நூல்கள் மூலமாக வாழ்வார்; அவருடைய எழுத்தின்மூலமாக என்றைக்கும் நமக்கு அவர் வழிகாட்டுவார்.
அவருக்கு வீர வணக்கம் செலுத்துகிறோம்!
அவரைப் போன்ற பலர் உருவாகவேண்டும்; ஒரு மங்களமுருகேசன் அல்ல; பல மங்கள முருகேசன்கள் திடல் நோக்கி வரவேண்டும். வரவேற்பதற்கு இரு கை நீட்டி நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறி, அனைவருக்கும் ஆறுதல் கூறி, அவருக்கு வீர வணக்கம் செலுத்தி விடைபெறுகிறேன்.
வாழ்க பெரியார்!
வாழ்க மங்கள முருகேசன் புகழ்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நினைவேந்த லுரையாற்றினார்