நேற்றைய (25.3.2023) கட்டுரையின் தொடர்ச்சி…
ஒதுக்கப்படும் துறை ஒரு விபத்து போல (விருப்பப் படி இல்லாமல்)அமைந்து விடுவதால் பல மாணவர் களுக்கு படிப்பில் ஆர்வமின்மையும் சலிப்பும் ஏற்பட்டுவிடுகிறது.ஆனால் இது மாணவர்களிடம் அவர்களது ஜாதிகளைப் பொறுத்து வேறு வேறான விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது.சாதாரணமாக படிப்பில் ஆர்வமில்லாத பல முன்னேறிய ஜாதி மாண வர்களுக்கு இது வேறு மாற்று வழிகளில் பயணித்துப் பார்க்க ஒரு வாய்ப்பாக அமைந்து அதுவே கல்லூரிப் படிப்பில் அவர்கள் காட்டும் குறைவான ஆற்றலுக்கு ஒரு நியாயமாகவும் அமைந்துவிடுகிறது. இது போன்ற மாணவர்களுக்கு அவர்களது குடும்பத் தொடர்பு களாலும்,பொருளாதார வசதியாலும்,பழைய தலை முறை பண்பாட்டு முதலீடுகளாலும், சங்கிலித்தொடர் போன்ற சமூக உறவு வலைப்பின்னல்களாலும் நாம் எப்படியும் காப்பற்றப்பட்டு விடுவோம் என்று இயற்கையாகவே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி விடுகிறது.இவை கல்லூரியில் அவர்கள் விளைவு களைப் பற்றிக் கவலைப்படாமல் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கானப் பாதுகாப்பைத் தருகிறது.நல்ல அறிமுகத்திற்கு கூடுதல் மதிப்பெண்கள் கொடுக்கும் ஒரு நிறுவனத்தில் வேலையில் சேர, உங்களைப் பற்றி விசாரித்து அறிய எப்படி,யாரைக் குறிப்பிடுவீர்கள் என்பதை ஒரு நிமிடம் எண்ணிப்பாருங்கள்.இது புரியும்.
ஆனால்,சாதாரணமாக இட ஒதுக்கீட்டில் சேர்ந்த பல மாணவர்கள் விருப்பமில்லாத துறையில் சிக்கிக் கொண்டால், அவர்களுக்கு உயர்ஜாதி மாணவர்க ளைப் போல் இதுபோன்ற புதிய முயற்சிகளில் ஈடுபட, – அதனால் ஒருவேளை வரக்கூடும் பாதிப்புகளை எதிர் கொள்ளத் தேவையான ஆடம்பர வசதி வாய்ப்புகள் இல்லை.பெரும்பாலும் அவர்களுக்கு அவர்களது முன்னேறிய ஜாதி நண்பர்களுக்கு இருப்பது போன்றத் தொடர்புகளோ,பொருளாதார வசதியோ,பழைய தலைமுறைப் பண்பாட்டு முதலீடுகளோ இருப்ப தில்லை. படிப்பில் மோசமான மதிப்பெண்கள் பெற்றால் அவர்கள் மீது விழும் கறையை எண்ணி அச்சமடைவது அவர்களது கலக்கத்தையும் அழுத்தத் தையும் அதிகப்படுத்துகிறது. சோதனை முயற்சி களில் ஈடுபடும் சுதந்திரம் கூட ஒருவரின் படிநிலை மற்றும் ஜாதியால் கட்டுப்படுத்தப்படுகிறது.இளமையின் வேகம் எல்லாருக்கும் சமமாக அமைவதில்லை. ‘தகுதி, திறமை’எதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறு கிறது என்றால் நம் துவக்கப் புள்ளிகள்,பயணப் பாதைகள்,பொருளாதார வசதிகள்,நம் மீதான பிறரின் கண்ணோட்டங்கள், நாம் சந்தித்த இடர்ப்பாடுகள், மற்றும் கணக்கில்லா பல்வேறு காரணங்களே நம்மை உருவாக்குகின்றன என்ப தையே. நமக்குச் சொல்லப் பட்டதற்கு மாறாக நாம் விளையாடுவது என்றும் ஒரு சம தளத்தில் அல்ல என்பதை நாங்கள் உணர்ந்து விட்டோம். உதாரணமாகச் சொல்லவேண்டு மென்றால், ஒரு 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் நம்மைப் போன்றவர்கள் (முன்னேறிய ஜாதியினர்) மேட்டிலிருந்து கீழ்நோக்கியும், வரலாற்று ரீதியாக ஓரங்கட்டப்பட்ட பின்புலத்திலிருந்து வந்த மற்றவர்கள் கீழிருந்து மேல்நோக்கியும் ஓடுகிறோம்.பல சமயங் களில் ஓடு தளத்தின் இந்த ஏற்ற இறக்கம் மட்டு மல்லாமல்,நம்மில் சிலர் இறங்கு பாதையில் 50 மீட்டரும், பின்தங்கிய சமூகத்தினர்,ஏறு பாதையில் 500 மீட்டரும் ஓடுகிறோம்.இருந்தும் இந்த ஓட்டப் பந்தயங்களை முடிக்க நாம் எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டோம் என்பது மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு நமது ஆற்றல்கள் ஒப்பிடப் படுகின்றன. இதைத்தான் மதிப்பெண்களும், ரேங்கு களும் செய்கின்றன.ஒருவரின் தகுதிக்கு அடையாள மாக அவரது மதிப்பெண்கள் மற்றும் ரேங்குகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளவது என்பது, ஒருவரின் உடல் நலனை அறிய அவரது உடல் சூட்டின் அளவை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு அவரது வயது,பாலினம்,மற்றும் அவரது முந்தைய உடல் நலச் சிக்கல்கள் இவை எவற்றையும் கண்டுகொள்ளாமல் விடுவதைப் போன்றதே.
வரலாற்று ரீதியான அநீதிகளுக்கு அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கும் கொள்கை மட்டுமே தீர்வாக அமையும்.ஜாதியப் பாகுபாடுகளைக் களையாமல் சமநீதியுள்ள சமூகத்தைக் கட்டமைக்க முடியும் என்பது சரியான கொள்கையல்ல.பிரிட்டனின் பொரு ளாதார வரலாற்று அறிஞரான ஆர்.எச். தவனேயை மேற்கோள்காட்டி சாண்டல் எழுதுகிறார்:”சமூக நலன் என்பது நல்லிணக்கணத்தையும் ஒருமைப் பாட்டை யும் பொறுத்திருக்கிறது.தனி மனித மகிழ்ச் சிக்கு, மனிதர்களுக்கு வசதியான உயர்வான நிலைக ளுக்கு உயரும் சுதந்திரம் மட்டும் போதாது,அவர்கள் உயர்ந் தாலும் இல்லாவிட்டாலும் சுயமரியாதையோடும் நாகரி கத்தோடும் வாழக்கூடிய நிலையையும் உரு வாக்க வேண்டும்”
பார்வை
நாங்கள் இருவரும் இரண்டு வேறு வேறு அய். அய்.டி களின், வேறு வேறு துறைகளின் பழைய மாணவர்கள்.வரலாற்று ரீதியாக உரிமைகள் பெற்ற முன்னேறிய ஜாதிகளைச் சார்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள்.இது ஏதோ உணர்ச்சி யில் எழுதப்பட்ட வாக்கு மூலமோ அல்லது ஜாதியப் பாகுபாடு பற்றிய பெருந் தத்துவமோ அல்ல.இது நாங்கள் அய்.அய்.டி களில் கண்டவற்றின் பிரதிபலிப்பே-அதுமட்டுமல்ல நாங்கள் எப்படி எங்கள் பின்புலத்தின் அடிப்படையில் மட்டுமே அங்கே உயர் படிகளில் இருந்தோம், பல சமயங்களில் அங்கே தகுதியின் பெயரால் ஜாதியப் பாகுபாடுகள் காட்டப் பட்ட பொழுது நாங்கள் எப்படி அமைதியாகவும்,அவை புரியாமலும் இருந்துவிட்டோம் என்பவை பற்றியான பிரதிபலிப்பும் ஆகும்.
அய்.அய்.டி களின் ஒவ்வொரு மாணவனும் அங்கே நுழைவதற்கு எவ்வளவு கடினமாக முயற்சி எடுக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.ஆனால் அதைத் தகுதி,திறமை என்று அழைப்பது எவ்வளவு தவறு என்பதை நாங்கள் உணர சில காலம் ஆனது.தர்சன் சோலங்கியின் இந்தத் துயரமான முடிவு, இலட்சக்கணக்கான உயர் நிலைகளில் இருக்கின்ற மேனாள் அய்.அய்.டி மாணவர்களுக்கு அவர்கள் அங்கே படித்த காலங்களில் பார்த்த இருளையும், காட்டப்பட்ட ஒருதலைப்பட்ச அணுகுமுறைகளையும் வலியோடு நினைத்துப் பார்க்க ஒரு தூண்டுகோலாக அமைய வேண்டும்.அதைப்போலவே கல்வி நிலையக் கூட்டாளிகள் என்ற முறையில் அய்.அய்.டி களில் பயிற்றுவிக்கும் பேராசிரியர்களும், வகுப்பறைகளை தகுதி திறமை பூச்சாண்டி(மெரிடோகிரசி) மற்றும் ஜாதியப் பாகுபட்டு அடிப்படையிலான முடிவுகள் இல்லாத ஆரோக்கியமான இடங்களாக மாற்ற முயற்சிக்க வேண்டும்.அக்கறையோடு உதவுவது, மற்றும் சமத்துவ, சுயமரியாதை, சகோதரத்துவ மனப்பான்மைப் பண்பாட்டை வளர்த்தெடுப்பது ஆகியவை குறுகிய கால பயிற்சிகளால் சாத்தியமாகாது.அவற்றைப் அய்.அய்.டிகளின் பாடத்திட்டங்களுக்குள் கொண்டு வந்து கல்லாரி வளாக வாழ்க்கையின் மரபணுவாக ஆக்கி கற்கும் இடங்களை மகிழ்ச்சியான வாழ்விடங்களாக மாற்ற வேண்டும்.இவை வெறும் தார்மீக ரீதியில் தேவைப்படும் அவசியமான செயற் பாடுகள் மட்டுமல்ல.நலமான, வளமான இந்தியாவை உருவாக்க பெரிய அளவில் உதவக்கூடிய நடவடிக் கைகளும் ஆகும்.
Authors: Rajesh Golani and Rajendran Narayanan
நன்றி : The Hindu 23-3-2023
தமிழில்: சு.பழநிராசன்