கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்ர காளி யம்மன் கோயில் தூக்கத் திருவிழாவில் ஒரு நேர்த்திக் கடன்பற்றி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
குழந்தை இல்லாத பெற்றோர்கள் மற்றும் ஆரோக் கியமாக வாழ எப்படி நேர்த்திக் கடன் கழிக்க வேண்டுமாம்?
இரு சக்கரம் கொண்ட தேரில் 41 அடி உயரத்தில் இரண்டு மரங்கள் பொருத்தப்பட்டு, அதில் நான்கு தூக்க வில்கள் கட்டப்பட்டு இருக்கும்.
விரதம் இருக்கும் பெற்றோர்கள் நால்வரின் இடுப்பை இணைத்துத் துணிகளால் கட்டியபின் குழந்தைகளை அவர்கள் கையில் ஏந்தியதும் தூக்கமரம் விண்ணோக்கி எழும்பும்.
இந்தத் தேர் ஒருமுறை கோயிலை வலம் வரும் அதன்பின் குழந்தைகள் இறக்கப்பட்டு கோவில் நடையில் வைத்து புனிதநீர்தெளிக்கும்போது, தூக்க நேர்த்தி முடியுமாம்.
இது எத்தகைய உயிருக்கு ஆபத்தான செயல்!
எத்தனையோ இடங்களில் தேர்கள் கவிழ்ந்து உயிர்கள் பலியாகவில்லையா?
உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கோயில் சடங்குகள் தடை செய்யப்படவில்லையா?
தலையில் தேங்காய் உடைக்கும் காட்டு விலங் காண்டித்தனம், அலகுக் குத்துதல் என்பதெல்லாம் பக்தி என்ற பெயரால் அனுமதிக்கப்படுவது நியாயமா?
தலையில் தேங்காய் உடைப்பதை நரம்பியல் மருத்துவர்கள் ஆபத்தான செயல் என்று எச்சரித்துள்ளனர்.
தலையில் தேங்காய் உடைப்பதை எதிர்த்து கரூர் மாவட்ட திராவிடர் கழகம் போராட்டம் நடத்தியும்கூட கரூர் பக்கத்தில் மேட்டுமகாதானபுரத்தில் குறிப்பிட்ட கோயிலில் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைப்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறதே!
அரசு இவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருப்பது நியாயந்தானா?
விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் ஒரு பக்கத்தில் சொன்னாலும் அதை மதிப்பதில்லையே!
எச்சில் இலை மேல் உருளுவது, கோயிலில் பக்தர்கள் செருப்படி வாங்குவது (சேலம் அன்ன தானப் பட்டியில்), துடைப்பக்கட்டையால் அடிப்பது, பூசாரி வாயில் மெல்லும் வாழைப் பழத்தை பக்தர்கள் வாயால் கவ்வுவது (காரமடை) என்பது எல்லாம் எதைக் காட்டுகின்றன? சட்டமன்றத்திலேயே விடுதலையில் வெளிவந்த படத்தை எடுத்துக்காட்டி இது காட்டுவிலங்காண்டித்தனம் என்று முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கண்டித்த துண்டே!
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், பரப்பியவன் அயோக்கியன், வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்றால் அனல் கக்கும் பக்த சிரோன் மணிகள், பக்தி உபந்நியாசம் செய்யும் பாகவதர்கள், நீதிமன்றம் சென்று விளம்பரம் தேடுவோர் இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லுவார்கள்?
அன்பே உருவானவன் ஆண்டவன், உருவமற்றவன், அய்ம்புலனுக்கும் புலப்படாதவன் என்றெல்லாம் வக் கணையாக ஒரு பக்கத்தில் பேசிக் கொண்டு, இன்னொரு பக்கத்தில், அவற்றுக்கு நேர் எதிராக, கடவுளுக்கு உருவம் கற்பிப்பது, கோயில் கட்டுவது, கடவுளுக்கு மனைவி, வைப்பாட்டி மக்கள் பேறு, திருவிழா, நேர்த்திக் கடன்கள் கழிப்பது எல்லாம் எதைக் காட்டுகின்றன?
இது ஒரு வகையான சுரண்டல் தானே! பார்ப்பனர்களின் உழைப்பில்லாப் பிழைப்புத் தானே!
இவற்றை எல்லாம் எடுத்துச் சொன்னால் இடக்கு முடக்காகப் பேசுவதும், நாத்திகர்கள் என்ற ஒற்றைச் சொல்லில் அடக்குவது எல்லாம் அவர்களின் அறி யாமையைத்தான் அப்பட்டமாக வெளிப்படுத்துமே தவிர, துளி அறிவையும் வெளிப்படுத்தப் போவதில்லை.
கோயில்களில் கிடா வெட்டுவது ஆடு வெட் டுவது என்பதை எல்லாம் அரசு தடுக்கவில்லையா?
பண பலமும், விளம்பரமும் இல்லையாகின் கடவு ளாவது கோயிலாவது என்று கேட்டார் தந்தை பெரியார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டு ஒன்றுக்கு 180 நாள்களுக்கு மேல் கோயில் விழா என்பது எல்லாம் எதைக் காட்டுகிறது?
இவற்றை நாம் சுட்டிக்காட்டுவதன் நோக்க மெல்லாம் மனிதனுக்குப் பகுத்தறிவை ஊட்டு வதும், சுரண்டலைத் தடுக்கவுமேதான்!
சீற்றம் தவிர்!
சிந்தனையை வளர்!!