புதுச்சேரியில் புரட்சிக் கவிஞரின் பாடலைச் சுட்டிக்காட்டி
தமிழர் தலைவர் வழிகாட்டும் உரை!
புதுச்சேரி, மார்ச் 27 ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகி விட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும் என்று சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பரப்புரைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றினார்.
சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கம், மீண்டும் சேது சமுத்திரத் திட்டம் ஆகிய மூன்று முக்கிய கருத்துகள் தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளன? அதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டி ருக்கும் பின்னடைவுகள் என்னென்ன? அதிலிருந்து மீண்டு வருவது எங்ஙனம்? என்பன குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்தும் நோக்கோடு, பெரியார் பிறந்த ஈரோடு முதல் அந்தப் பெரியாரின் தொண்டர் ஆசிரியர் பிறந்த கடலூர் வரையிலுமாக கூட்டங்கள் நடத்துவதாக திட்டமிடப்பட்டு, தமிழ்நாடு தழுவிய அளவில் எழுச்சி மிக்க பரப்புரைப் பயணத்தின் 25 ஆம் நாள் 48 ஆம் கூட்டமாக நேற்று (26.03.2023) புதுச்சேரியில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புதுச்சேரியில் தமிழர் தலைவர்!
புதுச்சேரி சாரம் ஜீவா சிலை (அவ்வை திடல்) அருகில் நடைபெற்ற சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி தலைமை வகித்தார். புதுச்சேரி மண்டல தலைவர் அன்பரசன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மண்டல செயலாளர் அறிவழகன், மண்டல காப்பாளர் சடகோபன், மண்டல அமைப்பாளர் இராசு, ப.க. மாநில துணைத் தலைவர் ஆடிட்டர் ரஞ்சித் குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் லோ.பழனி, விலாசினி, மண்டல இளைஞரணி அமைப்பாளர் தி.ராசா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக பொதுச்செய லாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தொடக்க உரையாற்றினார்.
நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.
முன்னதாக இந்தப் பரப்புரை கூட்டத்தில் புதுச்சேரி மாநில மேனாள் முதலமைச்சர் வே.நாராயணசாமி, புதுச்சேரி மாநில தி.மு.க. அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சிவா, சி.பி.அய். மாநில செயலாளர் அ.மு.சலீம், சி.பி.எம். மாநில செய லாளர் இரா.இராஜாங்கம், ம.தி.மு.க. மாநில அமைப்பாளர் அ.கபிரியேல், வி.சி.க. மாநில முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன், ம.ம.க. மாவட்டத் தலைவர் சஹாபுதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருப்புச் சட்டைக்காரர்களின் கூற்று
மரண வாக்குமூலம்!
தமிழர் தலைவர் உரையாற்றும்போது, சொல்ல வேண்டிய கருத்துகள் ஏராளமுண்டு. ஆனால், நேரம் இல்லை. நாங்கள் பேசுகின்ற கருத்துகள் எவ்வளவு ஆதாரப்பூர்மானவை என்பதை நீங்கள் அறிந்துகொள்ள புத்தகங்களை வாங்கிப் பயிலுங்கள்; மற்றவர்களுக்கும் பரப்புங்கள் என்று கூறிவிட்டு, கருப்புச்சட்டைக்காரர் களின் பேச்சு எவ்வளவு நம்பிக்கைக்குரியது என்பதை எண்பிக்க, தந்தை பெரியாரை உதவிக்கு அழைத்தார். அதாவது, ”எங்கள் பேச்சு மரண வாக்குமூலம்” என்று பெரியார் கூறியதைக் குறிப்பிட்டு நீதிமன்றங்களில் மரண வாக்குமூலத்திற்கு இருக்கும் மதிப்பை எடுத் துரைத்தார்.
தொடர்ந்து, புதுச்சேரி தனி யூனியன் பகுதியாக இருந்தாலும் தமிழ்நாட்டோடு ஒப்பிடும் போது, பல பிரச்சினைகள் ஒன்றாகவே இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டி, ஆகவே, மீண்டும் இங்கே ஒரு மதச்சார் பற்ற அரசு அமையவேண்டும் என்பதை தொடக்கத் திலேயே பளிச்சென்று சொன்னார்.
நாடெல்லாம் பாய்ந்தது கல்வி நீரோடை!
தொடர்ந்து புதுச்சேரி புரட்சிக் கவிஞர் பிறந்த மண் என்பதை நினைவூட்டி, புரட்சிக்கவிஞரின் துணிச்சல் எப்படிப்பட்டது என்பதை ஒரு வரலாற்றுச் சம்பவத்தை ஒரு காட்சி போலவே – காட்சிப் பதிவு போலவே பேசிக் காட்டினார். அதாவது தமிழாசிரியரான புரட்சிக்கவிஞர் பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற ஆண்டுவிழாவில் வாசிப் பதற்கு கல்வியில் புரட்சி எப்படி வந்தது என்பதை கவி தையாக எழுதியதை ஆசிரியர் சுவைபட சொல்கிறார். அப்போது எதிரில் பிரெஞ்சு பாதிரிமார்களான மதவாதிகள் அமர்ந்திருக்கிறார்கள் என்பதை மறக்காமல் நினைவுபடுத்தினார். பிரெஞ்ச் ஆளுநரும் அங்கே இருக்கிறார் என்றதோடு, ‘நாங்களெல்லாம் கவர்னர் என்று சொல்லுவோம். ஆனால், பாண்டிச்சேரியில் ’குவெர்னர்’ என்று உச்சரிப்பார்கள்’ என்று சொல்லி, நிகழ்வு நடந்த காலத்துக்கே மக்களை அழைத்துச் சென்றுவிட்டார். அந்த வரலாற்று நிகழ்வில், எப்படி மக்களும், மதவாதிகளும் மிகுந்த எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்தார்களோ அதுபோலவே, புதுச்சேரி மக்களையும் ஆளாக்கிவிட்டார் ஆசிரியர். இப்படிப் பட்ட சூழலில் தான் அந்தக் கவிதை வாசிக்கப்படுகிறது. “வறியோர்களுக்கெல்லாம் கல்வியின் வாடை; வரவிட வில்லை மத குருக்களின் மேடை” என்ற அதிகார பீடத்தை அடியோடு பெயர்க்கும் அந்தக் கவிதையின் முதலிரண்டு வரிகளைச் சொல்லிவிட்டு ஆசிரியர் நிறுத் தினார். மதவாதிகள் பாடலை மொழி பெயர்ப்பின்மூலம் அறிந்துகொண்டு கோபத்துடன் சில மணித்துளிகள் மவுனமாக அடுத்தென்ன? அனைவரும் அடுத்தென்ன? என்ற ஆவலில் இருந்த பாங்கைக் குறிப்பிட்டு, “கோந்தினியே! கோந்தினியே!” என்று என்ற பிரெஞ்சு வார்த்தைகளைச் சொல்லி, ’தொடர்ந்து பாடுங்கள்’ என்ற தமிழ் பொருளையும் ஆசிரியர் சொன்னவுடன், பார்வை யாளர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தார்கள். அதற் கேற்ப கையொலியும், ஆரவாரமும் ஒன்றோடு ஒன்று கலந்து வந்தன. இப்படியொரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு, “நறுக்கத் தொலைந்தது அந்த பீடை; நாடெல்லாம் பாய்ந்தது கல்வி நீரோடை!” என்று முடித்தபோது, புரட்சிக்கவிஞர் அல்ல, புதுச்சேரி மக்கள் தாங்களே சாதித்தது போன்ற உணர்வு தோன்ற கையொலிகளின் ஓசையால் கடல் அலைகளைப் போல் ஆர்த்தெழச் செய்துவிட்டனர்.
பாடமெடுத்த ஆசிரியரும்,
மாணவர்களான மக்களும்!
மக்களின் உணர்வுகள் அடங்கியதும் அதற்கு முன்பு கல்வியில் நமது நிலை என்ன என்பதை மறக்காமல் நினைவுபடுத்தினார். கல்லாதவர்களாக இருந்தோம். நமக்கு அந்த நீதி மறுக்கப்பட்டிருந்தது. எதன் அடிப் படையில்? மனு நீதியின் அடிப்படையில். இந்த அநீதியை எதிர்க்கத்தான் நமக்கு நீதி தேவைப்பட்டது! என்று திராவிடர் இயக்கத்தின் வரலாற்றைத் தொட்டுக் காட்டினார். அதில் பிறந்த ஒரு தத்துவம் தான் சமூகநீதி என்று கற்றுக்கொடுத்தார். ஆசிரியருக்கே உரிய குணத் துடன் சமூகநீதி என்பதை சுருக்கமாகவும், தெளிவாகவும் கற்றுக்கொடுக்கும் நோக்கோடு, ‘சமூகநீதி என்றால் என்ன என்பதை கற்றுக்கொள்ள பெரிய பெரிய புத்த கங்களை படிக்க வேண்டியதில்லை என்று சொல்லி விட்டு, ‘புளியேப்பக்காரனைவிட பசியேப்பக்காரனுக்குத் தான் முன்னுரிமை கொடுக்கவேண்டும்’ என்று ரத்தினச் சுருக்கமாகக் கூறி விட்டு, ‘இதுதாங்க சமூக நீதி’ என்றார். மக்கள் பளிச்சென்று புரிந்துகொண்டு ஆசிரியருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் படபடவென்று கைதட்டி மகிழ்ந்தனர்.
அதன் பிறகு நாட்டில் பல்வேறு துறைகளில் 97% மக்களாகிய நாம் எவ்வளவு விழுக்காட்டை அனுபவிக் கின்றோம்; 3% மட்டுமே உள்ள பார்ப்பனர்கள் எவ்வளவு விழுக்காட்டை அனுபவிக்கின்றனர் என்பதைச் சொல்லி, மக்களின் சுயமரியாதையை கொழுந்துவிட்டு எரியச் செய்தார். அதுவும் போதாதென்று 10% மோச டியை போட்டுடைத்தார். அதிலும் அவர்கள் ஏழை களுக்கு கொடுத்த விளக்கத்தை எடுத்துரைத்து பார்ப் பனியத்தின் கோர முகத்தை மக்கள் முன்னிலையில் தோலுரித்துத் தொங்கவிட்டார். தொடர்ந்து மண்டல் கமிஷன் வரலாற்றையும், சமூக நீதியின் காவலர் வி.பி.சிங் அவர்களின் பங்களிப்பையும் எடுத்துரைத்து மக்களை நல்வழிப்படுத்தினார்.
ஓடப்பரும்! ஓட்டப்பரும்!
மேலும் உரையாற்றிய அவர், இப்படிப்பட்ட பாசிச அரசை விரட்ட என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியை மக்கள் முன்வைத்து, மீண்டும் புரட்சிக்கவிஞரை துணைக்கழைத்து விளக்கினார். முதலில் “ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால், ஓடப்பர் உதையப்பர் எல்லாம் ஒப்பப்பாராகிவிடுவார் உணரப்பா நீ” என்ற பாடலைச் சுட்டிக்காட்டி, ‘புரட்சிக்கவிஞர் துணிச்சல்காரர் என்பதையும், கோபத்தில் உதையப்பர் என்று பாடிவிட்டார். ஆனால், நாம் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது.
‘2024 இல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓடப்பராக இருக்கு நாம், ஓட்டப்பர் ஆகிவிட்டால், பாரதீய ஜனதா ஆட்சியை வீழ்த்திவிடலாம்’ என்று கூறியதும், மக்கள் கவிதையின் எதுகை மோனையில் கட்டுண்டாலும் சரியாகப் புரிந்து கொண்டு அப்படியே செய்வோம் என்பதைப்போல, கைதட்டி ஆசிரியரின் கூற்றை ஆதரித்தனர்.
ஆசிரியர் மேலும் ஒரு அரிய விளக்கத்தை மக்கள் முன் எடுத்துவைத்தார். அதாவது அம்பேத்கர் சிறப்பைச் சொல்லி, ’இந்திய அரசமைப்புச் சட்டப்படி இறையாண்மை என்பது குடியரசுத் தலைவரிடம் இல்லை! பிரதமரிடம் இல்லை! முதலமைச்சரிடம் இல்லை! ஆளுநரிடம் இல்லை!’ என்று சொல்லி நிறுத்தி, வலது கையை மக்களை நோக்கி நீட்டியபடி, மக்களிடம் இருக்கிறது! We the people of India என்றுதான் அரசமைப்புச் சட்டம் தொடங்குகிறது.
ஆகவே நமது எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு, ‘ஓடப்பராக இல்லாமல் ஓட்டப்பராக மாறுங்கள்’ என்று தொடக்கத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி இரண்டுக்கும் பிரச்சினைகள் ஒன்றுதான் என்று சுட்டிக்காட்டியதற்குத் தீர்வு போல சொல்லிவிட்டு, தனது உரையை நிறைவு செய்தார்.
முடிவில் புதுச்சேரி மண்டல துணைத் தலைவர் மு.குப்புசாமி நன்றி கூறினார். பரப்புரை கூட்டத்தின் முதல் நிகழ்வாக புதுவை கே.குமார் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், திராவிடர் கழக மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன்,பெரியார் வீர விளையாட்டு கழக மாநிலத் தலைவர் பேரா.ப.சுப்பிரமணியம், திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர்பாண்டி, தலைமை கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா மற்றும் புதுச்சேரி தோழர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.