மேகாலயா சட்டப்பேரவை கூட்டத் தொடர் (மார்ச் 20) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது அவையில் ஆளுநர் ஹிந்தியில் உரையாற்றினார். இதற்கு சட்டப் பேரவை உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்புக் குரல் கொடுத்த நிலையில், ஆளுநருக்கு ஆதரவாக சில அமைச்சர்களும் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் “அசாமி மொழி எங்கள் மீது திணிக்கப்பட்ட போது எங்கள் சுயமரியாதையைப் பாதிக்கிறது என்பதை அறிந்து தனிமாநிலம் கண்டோம் என்பதை ஆளுநருக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று ஆளுநருக்குக் கண்டனம் தெரிவித்தனர்.
60 தொகுதிகளைக் கொண்ட மேகாலயா மாநிலத்தில் பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும்கட்சியான தேசிய மக்கள் கட்சி 26 தொகுதிகளிலும், அய்க்கிய ஜனநாயகக் கட்சி 11 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 5 இடங்களிலும், பா.ஜ.க. 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆட்சி அமைக்க எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேசிய மக்கள் கட்சிக்கு பா.ஜ.க. ஆதரவு அளித்தது. (இதுதானே இவர்களின் வேலை!) இதையடுத்து கான்ராட் சங்மா முதலமைச்சராக பதவி ஏற்றார். இதைத்தொடர்ந்து மார்ச் 20ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் பாகு சவுஹான் பேரவையில் ஹிந்தியில் உரையாற்றினார். மேகாலயா மாநிலத்தின் ஆட்சி மொழியாக ஆங்கிலம் உள்ளது. அப்படி இருக்கும்போது ஆளுநர் ஹிந்தியில் உரை யாற்றியது சலசலப்பை ஏற்படுத்தியது. உத்தரப் பிர தேசத்தை பூர்வீகமாகக் கொண்டவரும், அந்த மாநிலத்தில் இருந்து 6 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக் கப்பட்டவருமான ஆளுநர் சவுகான், சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் ஹிந்தியில் பேசத் தொடங்கியவுடன் வாய்ஸ் ஆஃப் பீப்பிள்ஸ் கட்சியைச் சேர்ந்த (விபிபி) சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரின் பேச்சைக் கண்டித்து குரல் கொடுத்தனர்.
ஆளுநர் ‘எங்களுக்கு புரியும் மொழியில் அவையில் பேச வேண்டும்’ என வி.பி.பி. கட்சி சட்டமன்ற உறுப்பினர் அர்டெண்ட் மில்லர் குரல் கொடுத்தார். அவருக்கு ஆதரவாக பிற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பலரும் குரல் கொடுத்த நிலையிலும், பேரவைத் தலைவரோ ஆளுநர் தொடர்ந்து ஹிந்தியில் உரையாற்ற அனுமதி வழங்கினார். அதைக் கண்டித்து, சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து செய்தியாளர் களிடம் பேசிய வி.பி.பி. கட்சி சட்டமன்ற உறுப்பினர் அர்டெண்ட் மில்லர், மேகாலயா, ஹிந்தி பேசும் மாநிலம் அல்ல; அசாம் மொழி எங்கள் மீது திணிக்கப்பட்ட போது எங்கள் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்பட்டது. இதனை அடுத்து மக்களைத் திரட்டிப் பெரும் போராட்டம் நடத்தி, மக்களும், தலைவர்களும் சேர்ந்து மேகாலயா என்ற மாநிலத்தை உருவாக்கினோம்; ஆளுநருக்கு எங்கள் வரலாறு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறோம். ஆகவே ஆளுநர் எங்களுக்கு புரியும் மொழியில் பேச வேண்டும்” என வலியுறுத்தினார்.
இன்றைக்கு இந்திய ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக் கூடிய, ஆர்.எஸ்.எசின் அரசியல் வடிவமான பி.ஜே.பி. அதன் ஆர்.எஸ்.எஸ். மொழிக் கொள்கையான சமஸ்கிருதம், ஹிந்தி ஆகியவற்றைத் திணிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறது.
தேசிய புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் நய வஞ்சகமாக மொழியைத் திணிக்கும் நிலையைப் புரிந்து கொண்டு, தந்தை பெரியாரின் திராவிட மண்ணான தமிழ்நாடு உள்பட வேறு சில மாநிலங்களும் அக்கல்விக் கொள்கையை ஏற்காமல் புறக்கணித்து வருகின்றன.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற ஒன்றிய பிஜேபி அரசின் சித்தாந்தப்படி இந்தியாவைத் தங்களின் பார்ப்பனீய பாசிச ஒற்றை ஆட்சிக் குடையின் கீழ்க் கொண்டு வர துடியாய்த் துடிக்கிறது.
இந்த நிலை அவர்களின் நினைப்பை நிர்மூலப்படுத்தி விடும்; தனக்குத்தானே வைத்துக் கொள்ளும் வெடிகுண்டு போன்ற அபாயம் இது.
ஏதோ தமிழ்நாடுதான் ஹிந்தியை எதிர்க்கிறது என்று எண்ண வேண்டாம்!
மேகாலயாவும் போர்க் கொடி தூக்கியுள்ளது என்பதை ஒன்றிய அரசு கவனத்தில் கொள்ளா விட்டால் ‘கரணம் தப்பினால் மரணம்’ என்ற நிலை தான் – எச்சரிக்கை!