[26-03-2023 நாளிட்ட ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் கட்டுரையின் தமிழாக்கம்]
சில விசித்திரமான கேள்விகளுடன் இன்று காலை நான் கண் விழித்தெழுந்தேன்.
நீங்கள் ஒரு பாசிச நாட்டில் வாழ்பவராக இருந்தால், பாசிசக் கொள்கைக்கு மரியாதை தராமல் போக முடியுமா? முடியாதல்லவா? நீங்கள் ஒரு கம்யூனிச நாட்டில் வாழ்பவராக இருந்தால், கம்யூ னிசக் கொள்கைக்கு மரியாதை தராமல் போக முடி யுமா? முடியாதல்லவா? கம்யூனிசக் கொள்கையை உங்களால் குறை கூறமுடியுமா? நரகத்தைப் போன்ற உங்கள் நாட்டு சிறையில் வாழ்நாள் முழுவதும் நீங்கள் அல்லல் பட தயாராக இல்லாத வரை அதனைக் குறை கூறமாட்டீர்கள் அல்லவா?
அது இருக்கட்டும், கோட்பாடுகளைப் பற்றி மறந்துவிடுங்கள். எப்படி இருந்தாலும், நாகரிக சமூக அரசியலுக்கும் கோட்பாடு அல்லது நல்லொழுக்கத் துக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை. அதிகாரம் மற்றும் பணம் பற்றியதாகத்தான் அரசியல் இருக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று கையாட்களின் உதவியுடன் பதவியில் இருக்கும் ஒரு சர்வாதிகாரியின்; கடுமையான சர்வாதிகார நாடு ஒன்றில் நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த சர்வாதி காரியை உங்களால் குறை கூறமுடியுமா? அந்த சர்வாதிகாரியின் கூலிக்கு மாரடிக்கும் தொண்டர்களின் உணர்வுகளை புண்படுத்த நீங்கள் தயாராக இல்லாத வரை, நீங்கள் அவ்வாறு செய்ய முடியாது அல்லது செய்யமாட்டீர்கள் என்றுதான் கூறவேண்டும்.
அதனால், எந்த ஒரு நவீன அரசியல் முறையை எடுத்துக் கொண்டாலும் சரி, நீங்கள் உயிருடன் இருக்கும் வரை, அவற்றை குறை கூறுவது என்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே ஒரு ஜனநாயக நாட்டில் வாழும் உங்களால் அந்த ஜனநாயகத்தையே குறை கூறுவது எவ்வாறு சரியாக இருக்கும்? ஜனநாயகத்தின் பேச்சு சுதந்திரத்தைப் பற்றிய அளவுகோல்களை புதிது புதிதாக கண்டு பிடிப்பதற்கு நீங்கள் யார் ? ஜனநாயகம் என்ன, உங்கள் அப்பன் வீட்டு சொத்தா? இல்லை! எந்த ஒரு தவிர்ப்பையும் பயன்படுத்தாமல், வருமான வரியை நீங்கள் கட்டி உள்ளீர்களா? சாணி பவுடரை எப்போதாவது நீங்கள் பயன்படுத்தி இருக்கிறீர்களா? இல்லை அல்லவா? அப்படி இருக்கும்போது, இந்திய ஜனநாயகத்தை விமர்சனம் செய்வதற்கான உரிமை உங்களுக்கு எங்கிருந்து வந்தது?
ராகுல் காந்தியை கண்மூடி வழிபடும் பக்தர் களுக்கு ஒன்றைச் சுட்டிக் காட்ட நான் விரும்புகிறேன். இந்தியா என்பது இந்த பூமியில் உள்ள ஒரு சாதாரணமான ஜனநாயக நாடல்ல. காலமுறைப்படி முறையாக, உலகிலேயே மிகப் பெரிய வாக்காளர் களைக் கொண்ட தேர்தல்கள் நடத்தப்படும் ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இந்த தேர்தல் களில் மேம்படுத்தப்பட்ட மின்னணுவியல் வாக்கு இயந்திரங்களை பயன்படுத்துவதுடன், போலி நிறுவனங்களால் நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்கு தேர்தல் நன்கொடை பத்தி;ரம் என்ற பெயரில் பெரு மளவு பணம் நன்கொடையாக அளிக்கப்படுகிறது.
ஜனநாயக நடைமுறையின் மாமியாரான இங்கிலாந்து நாடு போலவோ அல்லது ஜனநாயகத்தின் மைத்துனியான அமெரிக்க நாடு போலவோ அல்லாமல், ஜனநாயகத்தின் ஒரே தாயாக இருப்பது இந்தியாதான். எனவே, ஜனநாயகத்தின் மாமியாரான இங்கிலாந்தில், ஜனநாயகத்தின் தாயான இந்தியா பற்றி விமர்சனம் செய்ததற்காக மன்னிப்பு கேட்க ராகுல் காந்தி மறுத்ததால் கோபமடைந்த தேசப்பற்றுக் கொண்டவர்களில் நானும் ஒருவன்.
கடந்த வாரத்தில் ஒரு பெரும் பணக்கார இந்திய அரசியல்வாதி, “ஜனநாயகத்தை விமர்சனம் செய் பவர்களுக்கு ஒரு ஜனநாயக நாட்டில் இடம் இல்லை” என்று கூறியுள்ளார். பெரும்பான்மையான முட்டாள் களால் சீரழிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படும் ஜனநாயக அமைப்புகளால் ஜனநாயகம் சீரழிக்கப் பட்ட ஒரு நாடு இந்தியா என்று எடுத்துக் கொண் டாலும் கூட, அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசா மல் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்பதே உண்மையான தேசப் பற்று என்று கூறப்படுகிறது.
இந்த சர்வ ஷிரேஷ்டிர விஸ்வ ப்லா ப்லா என்ற இந்த அம்சம்தான் இந்திய ஜனநாயகத்திற்கு ஈடு இணையற்ற அழகைத் தருகிறது. சொற்களாலும், வாக்கியங்களாலும் இந்த அழகை ராகுல் அழித்துக் கொண்டிருக்கிறார் என்று குற்றம் சாட்டப்படுகிறது.
மறுபடியும் நாடாளுமன்றம் சுமுகமாக நடை பெறவும், ஜனநாயக வழியில் எந்த வித விவாதமும் இல்லாமல் மசோதாக்களை விரைவில் நிறைவேற்றவும் வேண்டுமெனில் அதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒரு சமரசத்துக்கு வரவேண்டும். அது ஒன்றுதான் இரு வருக்குமே வெற்றி கிடைக்கச் செய்யும். ஒருவரை ஒருவர் குறை கூற மாட்டோம் என்று இருவருமே உறுதி மொழி அளிக்கவேண்டும்.இந்த வழியில் அரசைக் குறை கூறுவதில் இருந்து ராகுல் தடுக்கப் படுவார். ஆனால் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியை குறை கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக டைனோசர்களுடன் உறவு கொண்ட ஆழ்கடல் மீனான கோலகோந்த் மீன் இனம் அழிந்து போனது பற்றி குறை கூறி எவரையாவது குற்றம் சாட்டலாம்!
எதைப்பற்றியும் எந்த விதத்திலும் குறை கூறி சாட்டும் குற்றத்திற்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்க வகை செய்யும் ஒரு புதிய சட்டத்தை இயற் றுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். எல்லா இந்தியர்களுமே மற்ற அனைத்து இந்தியர்களையும் புகழவே செய்வார்கள். உங்கள் தாய் செய்த சட்னி உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அதை புகழ்ந்தே பாராட்டுங்கள். விமானம் புறப்படும் நேரத்தில் முன்பதிவு செய்திருந்த பயணத்தை விமான நிறுவனம் அனுமதிக்க மறுத்தால் அதைக் குறை சொல்லாமல் பாராட்டுங்கள்! அறுவைச் சிகிச்சை மருத்துவர் கத்திரியை உங்கள் வயிற்றிலேயே வைத்து தைத்து விட்டாலும் கூட, ஒரு கடையையே வயிற்றில் வைக்காமல் போனதற்கு அவரை குறை சொல்லாமல் பாராட்டுங்கள் !
ஆண்டு முழுவதும் புகழ்மொழிகளும் பாராட்டு களுமே காற்றில் நிறைந்து இருக்கும். எதைப் பற்றியும், எவரைப் பற்றியும் குறை கூறுவதே இருக்காது. எல்லோரும் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப் பார்கள். இந்திய ஜனநாயகத்தின் 75 ஆம் ஆண்டு வைரவிழாவில் – இந்தியா நல்லதொரு அம்ருத நேரத்தில் தனது கடமையை இறுதியில் நிறைவேற்றும்.
நன்றி: ‘தி இந்து’ 26-03-2023
தமிழில் : த.க. பாலகிருட்டிணன்