புதுடில்லி, மார்ச் 30- கருநாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் மே.10இல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் தெரிவித்துள்ளார். கருநாடக சட்டப்பேரவை பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அதற்குள் தேர்தல் நடைமுறைகளை நடத்தி முடிக்க வேண்டியது சட்ட விதி ஆகும்.
கருநாடக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் டில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கருநாடக சட்டப்பேரவை பதவிக்காலம் மே 24ஆம் தேதி முடிவடைகிறது. எனவே மே மாதம் 24-ஆம் தேதிக்குள் தேர்தல் நடைமுறைகள் முடிவடையும். கருநாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கருநாடகாவில் மொத்தம் 5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 2.62 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 2.5 கோடி பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 42,756 பேரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருநாடகாவில் முதல் முறையாக 9.17 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளனர். புதிய வாக்காளர் அடையாள அட்டைகோரி, 17 வயதிற்கு மேற்பட்டோர் 1,25,406 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஏப்ரல் 1, 2023இல் 18 வயது பூர்த்தி யாகும் அனைவரும் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள்.
கருநாடகாவில் உள்ள பழங்குடியின மக்கள் வாக் களிக்க பல்வேறு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. 80 வயதிற்கும் மேற்பட்டோர் , மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கருநாடக மாநிலத்தில் 36 தனி தொகுதி, 15 பழங்குடியினர் தொகுதி, 173 பொதுத்தொகுதிகள் உள்ளன. ஒரு வாக்குச்சாவடியில் 883 பேர் வாக்களிக்கும் வகையில் 58,282 வாக்குப்பதிவு மய்யங்கள் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 2018இல் 61 தொகுதிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்ட நிலையில், தற்போது பதற்றமான தொகுதிகள் 81 ஆக அதிகரித்துள்ளது. கருநாடக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்.13-அன்று தொடங்கி ஏப்.20 வரை நடைபெறுகிறது. வேட்புமனு மீதான பரிசீலனை ஏப். 21-ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுவை திரும்பப்பெற ஏப்.24 கடைசிநாள் ஆகும். இதனை அடுத்து கருநாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் மே.10 நடைபெறும். இதனை தொடர்ந்து மே.13-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அவர் கூறினார்.