திருவாங்கூர் பார்ப்பனீயத்தின் வருணாசிரம ஜாதீய – தீண்டாமை என்னும் கொடிய நாகப் பாம்பு எங்கெங்கும் படமெடுத்து ஆடிய ஒரு சமஸ்தானம்.
மன்னராட்சி தான் அங்கே! தீண்டாமை, பாராமை, நெருங்காமை என்னும் கொடிய தொற்று நோய்ப் படர்ந்த பூமி அது.
ஈழவச் சமுதாயத்தைச் சேர்ந்த மாதவன் என்பவர் எப்படியோ தப்பித் தவறிப் படித்து வழக்குரைஞரானார். திருவனந்தபுரம் பத்மநாபர் கோயில் வளாகத்தில் தான் நீதிமன்றமும், அலுவலகங்களும். மாதவன் வழக்குரைஞர் என்ற முறையில் நீதிமன்றம் சென்றபோது, தடுக்கப்படுகிறார்.
ஏன்? ஏன்? மன்னனின் பிறந்த நாள் கொண்டாடமாம் – அந்தப் பகுதிகள் எல்லாம் யாகத் தீ – பூதிரிகளுக்கான வேட்டைக்காடு அல்லவா! எங்குப் பார்த்தாலும் பூஜை புனஸ்காரங்கள்.
ஈழவ ஜாதியைச் சேர்ந்தவர் (நாடார்) என்னதான் படித்திருக்கட்டுமே – வழக்குரைஞர் பட்டம்தான் பெற்று இருக்கட்டுமே!
ஜெபம் நடக்கும் தருணத்தில் அவர் நுழையலாமா?சனாதனம் என்னாவது? சகித்துக் கொள்ள முடியுமா? சவுண்டிகள் தொடை தட்டினர்!
நியாயத்தைப் பேச நீதியைக் கேட்க அப்பொழுதும் அங்கு மனித மாணிக்கங்கள் இருக்கத்தான் செய்தனர். ஒரு நூற்றாண்டுக்கு முன் (30.3.1923).
சத்தியக்கிரக குழு அமைக்கப்பட்டது.
அன்றைய கேரள மாநிலக் காங்கிரஸ் தலைவர் பாரிஸ்டர் கே.பி. கேசவமேனன், கேம்.எம். பணிக்கர், கேளப்பன் ஆகியோர் இணைந்தனர்.
30.3.1923 அன்று முதல் சத்தியாக்கிரகக் குழு தடையை மீறி வீதிக்குள் அடி எடுத்து வைத்தது. கொச்சாத்தி (புலையர்) பாகுலேயன் (நாயர்) கோவிந்த பணிக்கர் (ஈழவர்) கைது செய்யப்பட்டனர்.
அடுத்து காங்கிரஸ் தலைவர் கேசவமேனன், டி.கே. மாதவன், மதுரை ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் நாள்தோறும் ஒவ்வொருவராகக் கைதாகினர். 19 பேர் கைதோடு சத்தியாக்கிரகத்தின் கடை மூடப்பட்டு விட்டது.
அடுத்து என்ன செய்வது? சத்தியாக்கிரகிகள் சிந்தித்தனர். அதனைத் தொடர்ந்து நடத்த இந்தியாவில் யார் இருக்கிறார்கள்? இந்தக் கொள்கையில் ஒரு மாமனிதர் கிடைக்க வேண்டுமே! போராட்ட வீரராக இருக்க வேண்டுமே!! கிளர்ச்சியை நடத்தும் உறுதி படைத்தவராக வேண்டுமே!!!
இந்தியத் துணைக் கண்டத்திலேயே ஒரே ஒருவர்தான் அந்தத் தலைவர்களின் சிந்தனை வெளிச்சத்தில் கிடைத்தார் – அவர் யார்? சென்னை மாநிலக் காங்கிரஸ் தலைவராக இருந்த ஈ.வெ.ராமசாமி நாயக்கர்தான் (அப்பொழுது அப்படித்தான் அறிமுகம்) அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட விலை மதிப்பிட முடியாத வைரம்.
களத்திற்கு வருகிறார் (13.4.1923) களம் சூடுபிடித்து விட்டது. அவரின் சொற்பொழிவுவைப்பற்றி கேட்கவா வேண்டும்! நாலாத்திக்குகளிலும் சுழன்றடித்த சூறாவளியாயிற்று.
தந்தை பெரியார் உரை வீச்சு எப்படி இருக்கும்? இதோ தமிழ்த் தென்றல் திரு.வி.க. கூறுகிறார்.
“ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர் நூற்புலமை உடையவரல்லர். ஆனால் நூற்புலவர் அவர் போல் பேச மாட்டார். நாயக்கர் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் கூட்டத்தில் இடையறாது காற்றும், மழையும் கலந்து வீசுவதுபோல நான்கு மணி நேரம், அய்ந்து மணி நேரம் பேசுவார். ஏழை மக்களுக்கு நன்மை உண்டாக்குமாறு அவரைப் போல் பேசுபவர் தமிழ்நாட்டில் அரியர் என்றே கூறலாம். மலையினின்றும், அருவி இடையூறின்றிப் பெருக்கொடுத்தோடுவது போல, நாயக்கர் வாயிலினின்றும் சொற்கள் பெருக்கெடுத்தோடும்!” என்று எழுதினார் திரு.வி.க. (நவசக்தி 24.5.1924).
‘அதுதான் வைக்கத்தில் நடந்தது. இவரை அனுமதித்தால் மோசம் போய் விடுவோம்’ என்று கருதிய நம்பூதிரிகளும், இந்து சமஸ்தான ராஜாவும் பெரியாரை சிறையில் அடைத்தனர்.
முதலில் அருவிக்குத்தி சிறை – இரண்டாவது முறை திருவனந்தபுரத்தில் கடுங்காவல் தண்டனை.
இதுகுறித்து கே.பி. கேசவமேனன் ‘தன் வரலாறு’ நூலில் எழுதுகிறார். இன்று படித்தாலும் நம் கண்கள் இரத்தக் கண்ணீர் வடிக்கும்.
“கால்களில் விலங்குச் சங்கிலி, தலையிலே கைதிகள் அணியும் ஒரு குல்லாய், முழங் காலுக்குக் கீழே தொங்குகின்ற ஒரு வேட்டி, கழுத்தில் கைதி எண் குறிக்கப்பட்ட ஒரு மரப்பட்டை. இவற்றோடு ஈ.வெ.ராமசாமி கொலைகாரர்களோடும், கொள்ளைக் காரர்களோடும் வேலை செய்து கொண் டிருக்கின்றார். தண்டனை அடைந்த ஒரு சாதாரணக் கைதி ஒரு நாளைக்கு எவ்வளவு வேலை செய்வானோ, அதுபோல் இருமடங்கு வேலை செய்கிறார்.
ஒரு ‘ஜாதி இந்து’ என்று சொல்லக்கூடிய நிலையிலே உள்ள ஒருவர் கேரளத்திலுள்ள தீண்டத்தகாத மக்களுக்கு உரிமை வாங்கிக் கொடுப்பதற்காக செய்த தியாகம் நமக்கு புதுவாழ்வு தந்திருக்கிறது. இந்தப் பெரிய உன்னத இலட்சியத்திற்காக அவர் அனைத்தையும் இழக்கத் தயாராக இருக்கிறார்.
ஈ.வெ.ரா. அவர்களுக்கு இருக்கக்கூடிய நாட்டுப் பற்று, உற்சாகம், அனுபவம், பெருந் தன்மை, பெரும் பக்குவம் இவைகளெல்லாம் உடைய இன்னொருவரை இந்த நாட்டிலே அந்த அளவுக்குக் காண முடியுமா? இந்த மாநிலத்து மக்கள் அனுபவிக்கிற கொடுமையை நீக்க வேண்டும் என்பதற்காகத் தாம் எவ்வளவு கஷ்ட நஷ்டங்களை வேண்டுமானாலும் ஏற்கலாம் என்று சொல்லி ஒரு தலைவர் வந்தாரே – அதைப் பார்த்து இந்த மாநில மக்களாக இருக்கிற யாருக்குமே வெட்கமேற்பட வில்லையா? கேரளத்தின் முதிர்ந்த அனுபவ மிக்க தலைவர்கள் தங்கள் சாய்வு நாற்காலி யைத் தூக்கியெறிந்துவிட்டு தங்கள் பங்கைச் செலுத்த இப்போதாவது வர வேண்டாமா?” என்று எழுதியுள்ளார் கே.பி. கேசவன் மேனன்.
பெரியார் சிறைப்பட்டார் என்றாலும் அவருடைய துணைவியர் நாகம்மையாரும், தங்கை எஸ்.ஆர்.கண்ணம்மாளும் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர் என்பதெல்லாம் எத்தகைய வீர வரலாற்றுக் கல்வெட்டு!
“பெரியார் உயிரோடு வெளியில் வந்தால் அவ்வளவுதான்! தங்கள் ஆதிக்கத்தின் குடல் சரியும் என்று ஆத்திரப்பட்ட நம் பூதிரிப் பார்ப்பனர்கள் “சத்ருசம்ஹார யாகம்” நடத்தினார்கள். இந்த யாகத்திலிருந்து ஒரு பூதம் கிளம்பி, சிறையில் உள்ள பெரியாரின் கழுத்தை நெரித்துக் கொன்று விடுமாம்! எவ்வளவு அற்பர்கள்!
ஆனால் நடந்தது என்ன? மன்னர் “திருநாடு அடைந்தார்” (மரணமடைந்தார்), இராணி ஆட்சிக்கு வருகிறார்.
காந்தியார் பேச்சு வார்த்தை நடத்துகிறார் தந்தை பெரியாரைக் காந்தியார் சந்திக்கிறார். முடிவில் முதற் கட்டமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வீதிகளைத் திறந்து விட இராணி சம்மதித்தார்.
74 நாட்கள் சிறையிலும், 64 நாட்கள் போராட்டக் களத்திலும் நின்ற ஒரே தலைவர் தந்தை பெரியார்! “வைக்கம் வீரர்” என்று நவசக்தியில் திரு.வி.க. எழுதினார்.
வைக்கம் வெற்றி விழா 29.11.1925 அன்று நடைபெற்றது. அவ்விழாவில் தந்தை பெரியாரும் அன்னை நாகம்மையாரும் பங்கேற்றனர்.
வைக்கம் நூற்றாண்டு விழாவினை ஆண்டு முழுவதும் கொண்டாட தமிழ்நாடு முதல் அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவிப்பினை வெளியிட்டு வரலாறு படைத்து வரலாற்றில் இடம் பிடித்தார்!
603 நாட்கள் வைக்கம் போராட்டம் நடைபெற்றதால் 603 நாட்களும் விழா கொண்டாடப்படும் என்று கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயன் அறிவித்தார்.
நாளை (ஏப்ரல் 1) கேரளாவில் நடைபெறும் விழாவான முதல் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல் அமைச்சரும், கேரள முதல் அமைச்சரும் பங்கு கொள்வது கண் கொள்ளாக் காட்சியாக அமையப் போகிறது.
“பெரியாரைப் பின்பற்றும் பொருத்தமான தருணம்” என்று காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி பொருத்தமாகவே கூறி இருக்கிறார்.
உடலால் மறைந்து தந்தை பெரியார் 50 ஆண்டுகள் ஆகப் போகின்றன. ஆனால் காலத்தைக் கடந்து மன்பதைக்கு வழிகாட்டும் மானுடத் தந்தையாக ஒளிவீசுவார்!
வாழ்க வைக்கம் வீரர்!