வைக்கம் போராட்டம் என்பது என்ன?
ஏப்ரல் 1- கேரளாவில் முதலமைச்சர் பங்கேற்கும் நூற்றாண்டு விழா
– க.திருநாவுக்கரசு
திராவிட இயக்க ஆய்வாளர்
இப்போதைய கேரள மாநிலம் அன்று மூன்று பகுதிகளாகப் பிரிந்து இருந்தது. அவை மலபார், கொச்சி, திருவாங்கூர் என்பவைகள் ஆகும். மலபார் சென்னை மாகாணத்தோடு இணைந்து இருந்தது. கொச்சியும், திருவாங்கூரும் தனி அரசர்களின் ‘நாடு களாக’ இருந்தன. திருவாங்கூரில்தான் வைக்கம் என்னும் ஊர் அப்போது இருந்தது. அங்கே மகாதேவர் ஆலயம் என்று ஒன்று உண்டு. வைக்கம் ஒரு நகர ‘அந்தஸ்தை’ பெற்று இருந்தது. மகாதேவர் ஆலயத் தைச் சுற்றியுள்ள வீதிகளில் தீண்டத்தகாதவர்கள் (ஈழவர், தீயர், நாடார்) நடக்கக்கூடாது – சாலையில் செல்லக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டு இருந்தது. வைக்கம் போராட்டம் என்பது ஆலய நுழைவுப் போராட்டம் இல்லை.
‘வைக்கம் வீரர்’ பெரியாரே காரணம்
தாழ்த்தப்பட்டோரையும் வீதிகளில் மற்ற ஜாதி யினரைப் போல நடந்து செல்ல அனுமதிக்க வேண்டி திருவாங்கூர் அரசினரை எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. இப்போராட்டத்திற்குத் தமிழ்நாட்டுப் பங் களிப்பு எப்படி கிடைத்தது? இன்று கேரள அரசு நம் முதலமைச்சரை அழைத்து வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவினைத் தொடங்கி வைக்கும் அளவுக்கு வாய்ப்பு நமக்கு வாய்த்திருப் பதற்குக் காரணம் என்ன? – என்று நாம் சிந்தித்துப் பார்த்தால் ‘வைக்கம் வீரர்’ பெரியார் தான் – அவர் வைக்கத்தில் நிகழ்த்திய போராட்ட பங்களிப்புதான் இன்றைய தினம் நம் முதலமைச்சர் நூற்றாண்டு விழாவினைத் தொடங்கி வைப்பதற்கான பாத்திய தையை – உரிமையை வழங்கி இருக்கிறது. அது எப்படி என்று சுருக்கமாகப் பார்ப் போம்.
திருவாங்கூர் பகுதியில் அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்தவர் டி. கே. மாதவன் என்பவராவார். இவர் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக் காக அப்பகுதியில் போராடிக் கொண்டிருந்தார். இச் சமயத்தில் பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தார். வைக்கம் போராட்டத்தை முதன் முதலில் முன்னின்று நடத்தியவர், குரல் கொடுத் தவர் டி.கே.மாதவன். இவர் அந்த ஊர் காங்கிரஸ்காரர். இவர் நாராயண குருவின் சீடராவார். இக்கொடுமையை எதிர்த்துப் போராட்டம் நடத்த வேண்டும் என்பதற் காகக் காந்தியாரை அவர் சந்தித்து ஒப்புதல் கடிதம் பெற்று வந்தார். அது முதல் அவர் போராட்டம் நடத்து வதற்கான ஆதரவினை மக்களிடம் திரட்டி வந்தார். அவர் காங்கிரசோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண் டது குறித்தும் காங்கிரஸ் மாதவனின் திட்டத்தை ஏற்ற பொழுது இருந்த நிலைமைகள் குறித்தும் ‘கழிஞ்ச காலம்’ எனும் நூலில் பாரிஸ்டர் கே.பி.கேசவ மேனன் விளக்கமாக எழுதியிருக்கிறார்.
1924 பிப்ரவரி 16இல் கொல்லம் சுயராஜ்ஜிய ஆசிர மத்தில் கூடிய கேரள காங்கிரஸ் தீண்டாமை ஒழிப்புத் தீர்மானத்தை நிறைவேற்றி அறக் கிளர்ச் சிக்கு வழி வகுத்தது. வைக்கம் அதற்கான களமாகத் தேர்ந்தெடுக் கப்பட்டது. இதற்காக காந்தியாருக்குக் கடிதம் எழுதி அவரது வாழ்த்தினையும் பெற்றனர். 1924 மார்ச் 30ஆம் தேதி வைக்கம் போராட்டம் தொடங்கியது. வைக்கம் மகாதேவர் ஆலயத்திலிருந்து 300 அடி தொலைவில் ஒரு பலகை தொங்கிற்று. அதில், ‘தீண்டத் தகாத ஜாதியினர் இதற்கப்பால் பிரவேசிக்கக் கூடாது’ என இருந்தது. அந்தப் பலகையைக் கடந்து செல்வதுதான் அறப்போராளிகளின் போராட்ட முறையாகும்.
போராட்டத்தை கைவிடச் செய்ய
காந்தியார் செய்த முயற்சி
இப்படிப் போராட்டம் தொடங்கி முதல் இரண்டு நாள்கள் மட்டுமே நடைபெற்றது. கலவரம் வெடிக் கப் போகிறது எனும் வதந்தி சிலரால் கிளப்பிவிடப் பட்டது. இதனால் போராட்டம் நிறுத்தப்பட்டு இந்தத் தகவலைக் காந்தியாருக்கு தந்தி மூலம் தெரிவித்தனர். எனினும் போராட்டம் நடந்து கொண்டு இருந்தது. இந்நிலையில் வாஞ்சீவர அய் யர், சிவராம அய்யர் என்கிற இரண்டு பார்ப்பனர்கள் காந்தியாரைச் சந்தித்தனர். சாலைகள் அனைத்தும் கோவிலுக்குச் செல்பவை என்றும் அவை கோவிலுக்குச் சொந்தமானவை என்றும் காந்தியாரிடம் தெரிவித்தனர். போராட்டக்காரர் களுக்கு அறிவுரை வழங்குமாறு கோரினர். இது பொய் யான தகவல். ஆனாலும் அந்தச் செய்தியை ஏற்றுக் கொண்டு காந்தியார் போராட்டத்தை நிறுத்தி வைக்கு மாறும், மத்தியஸ்தத்திற்கு மதன்மோகன் மாளவியாவை அனுப்புவதாகவும் கேசவ மேனனுக்குக் கடிதம் எழுதினார்.
இத்தருணத்தில்தான் போராட்டக்காரர்கள் பெரியாருக் குத் தந்தியும் கடிதமும் அனுப்பினார்கள். குரூர் நீலகண் டன் நம்பூதிரிபாடு தந்தி அனுப்பினார். பெரியாருக்குத் தந்தி 4.4.1924இல் கிடைத்தது. இதேபோல ஜார்ஜ் ஜோசப்பும் கேசவமேனனும் பெரியாருக்குக் கடிதம் எழுதினார்கள். அக்கடிதத்தைக் குளித்தலை மாநாட் டிற்குப் பிறகு பண்ணைபுரம் சென்ற பெரியாருக்கு ரீ-டைரக்ட் செய்யப்பட்ட கடிதம் கிடைத்தது. பெரியாருக்கு அப்போது உடல்நிலையும் சரியில்லை. இருப்பினும் அவர் வைக்கத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். 13.4.1924இல் போய்ச் சேர்ந்தார். இது குறித்துப் பெரியார் ஒரு வேண்டுகோளையும் விடுத்தார். அதனை ‘இந்து’ நாளேடு வெளியிட்டது. பெரியார் பிரச்சாரம் செய்தார். கிளர்ச்சியில் ஈடுபட்டார். ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை. அதற்குப் பதிலாக அவருக்கு வரவேற்பு வழங்கினர். இதற் குக் காரணம் திருவாங்கூர் மன்னர் இரயில் பயணம் மேற்கொள்ளு கிறபோது ஈரோட்டில் பெரியார் மாளிகையில் தங்கி இளைப்பாறிவிட்டு போவது வழக்கம். அதனால் அவர்கள் பெரியாரைக் கைது செய்யாமல் மரியாதை வழங்கினர்.
விருந்தினராக வரவில்லை!
பெரியார், தாம் போராட வந்திருப்பதாகவும் விருந் தினராக வரவில்லை என்றும் ‘பிட்’ என்னும் காவல் துறை அதிகாரியிடமும் பேஷ்கர் (சமஸ்தான முதல்வர்) சுப்பிரமணிய அய்யரிடமும் தெரிவித்து விட்டார். சுமார் 10 நாள்கள் வரை பெரியார் கைது செய்யப்பட வில்லை. அதற்குப் பின்பு தடை உத்தரவு போடப் பட்டது. பெரியாரும் கோவை அய்யாமுத்துவும் பிரச் சாரம் செய்தனர். தடையை மீறிப் பேசினர். அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். ஒரு மாதம் வெறுங் காவல் சிறை தண்டனை கொடுத்தார்கள். அருவிக்குத்தி என்கிற ஊரிலுள்ள சிறையில் இருவரும் அடைக்கப் பட்டார்கள். இப்போராட்டம் குறித்து கோவை அய்யா முத்துவும் எழுதியிருக்கிறார்.
வைக்கம் போராட்டத்திற்கு
சீக்கியர்கள் ஆதரவு
பெரியாரும், அய்யாமுத்துவும் சிறையில் இருந்த போது பெரியாரின் மனைவி நாகம்மையார், தங்கை கண் ணம்மாள், எஸ்.இராமநாதன் வைக்கம் வந்தார்கள். வைக்கம் அருகே உள்ள ஊர்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்தார்கள். போராட்டத்தில் பங்கேற் கிறார்கள். ஆதரவு பெருகுகிறது. ஆனால் காங்கிரசோ, காந்தியோ இப்போராட்டத்தை ஆதரிக்கவில்லை. இரண்டு பார்ப்பனர்கள் கூறியதைக் கேட்டு காந்தியார் போராட்டத்தை நிறுத்தினார் என்றே பதிவுகளில் காணப்படுகிறது. ஆனால் பெரியார் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவுடன் போராட்டம் வேகம் அடைந்தது. இந்தச் சமயம் இராஜாஜியும், எஸ்.சீனிவாச அய்யங்காரும் வைக்கத்திற்கு வந்து போராட்டத்தை விட்டுப் பெரியாரை தமிழ்நாடு திரும்புமாறு கோரினர். போராட்டம் வேகப்படும் போது ஏன் பெரியாரைத் தமிழ்நாடு திரும்புமாறு அந்த இருவர் கோருகின்றனர்? பெரியாரோ அவர்களின் கருத்தை ஏற்கவில்லை. இதையொட்டித்தான் சுவாமி சிரத்தானந்தா இப்போராட்டத்திற்கு ஆதரவு தந்தார். சீக்கியர்கள் ஆதரவு தெரிவித்து ரூ.2000.00த்தை எடுத்துக் கொண்டு வைக்கம் வந்தனர்.
அருவிக்குத்தி சிறையில் இருந்த பெரியார் ஒரு மாதத்திற்குப் பிறகு விடுதலை ஆனார். மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டார். இரண்டாவது முறை போராட்டத்திலும் பெரியார் கைது செய்யப்பட்டார். ஆறு மாதம் தண்டிக்கப்பட்டார். திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். முதன் முதலில் வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைப்பட்ட டி.கே. மாதவனும், கேசவமேனனும் சிறை வாழ்வில் வெகுச் சிறப்பாகக் கவனிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிறை யில் எல்லா வசதிகளும் செய்து தரப்பட்டன. இதைக் கே.பி.கேசவமேனனே எழுதி இருக்கிறார்.
பொய்யான தகவல்களைக் கூறி
கொச்சைப்படுத்தினர்
ஆனால் பெரியாரை அவர்கள் சிறையில் எப்படி நடத்தினர் என்பதுபற்றி ஆசிரியர் கி.வீரமணி ‘தமிழரசு’ இதழிலும் (3.11.1985) அவர் எழுதிய ‘காங்கிரஸ் வரலாறு’ எனும் நூலிலும் இடம் பெற்று இருக்கிறது. அந்த வரிகளை அப்படியே இங்கே பதிவு செய்கின்றோம்.
“கால்களில் விலங்குச் சங்கிலி, தலையிலே கைதிகள் அணியும் குல்லாய், முழங் காலுக்குக் கீழே தொங்கு கின்ற ஒரு வேஷ்டி – கழுத்தில் கைதி எண் குறிக்கப் பட்ட ஒரு மரப் பட்டை. இவற்றோடு ஈ.வெ.ராமசாமி கொலைகாரர்களோடும் வேலை செய்து கொண்டு இருக்கிறார். தண்டனை அடைந்த ஒரு சாதாரண கைதி எவ்வளவு வேலை ஒரு நாளைக்குச் செய்வானோ அது போல இரு மடங்கு செய்கிறார்.”
இப்படியான நிலை உள்ளூர் போராட்டக்காரர் களுக்கு இல்லை. பெரியாருக்கு மட்டுமே இவ்வளவு கடுமையான தண்டனை வழங்கினார்கள். இந்த ஒருதலைபட்சமான நிலையை ஏன் செய்தனர் என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் வேடிக்கை என்ன வென்றால் பெரியார் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொள்ளவே இல்லை என்று இன்னும் சிலரும், முழுவது மாகப் பங்கேற்க வில்லை என்று இன்னும் சிலரும் பெரியார் பங்களிப்பு அவர்களின் கட்சிக்காரர்களால் மிகைப்பட எழுதப்படுகிறது என்றும் கூறுகிறார்கள். அதோடு போராட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போதே பாதியில் விட்டு விட்டு சென்று விட்டார் என்றும் கொச்சைப்படுத்துகிறார்கள். இவை யெல்லாம் உண்மை இல்லை. நம் இயக்கத்தவர் எவரும் போராட்டத்தை மிகைப்படுத்தியோ பெரியார் மட்டும்தான் பங்கேற்றார் என்றோ யாரும் எழுத வில்லை.
வைக்கம் போராட்டம் 20 மாத காலம் தொடர்ந்து நடைபெற்றது. (அதாவது 30.3.1924 முதல் 23.11.1925 வரை) இந்த 20 மாத காலத்தில் இரண்டு முறை வைக்கம் போராட்டத்தில் பெரியார் ஈடுபட்டு இருக்கிறார். முதல் முறை ஒரு மாதம் சிறையும் இரண்டாவது முறை 6 மாதங்கள் சிறைத் தண் டனையும் பெற்றார். ஆறு மாத சிறைத் தண்டனை யின்போது திருவாங்கூர் மன்னர் திருநாடு சேர்ந்தார் (இறந்தார்) என்பதனால் 4 மாத தண்டனையுடன் பெரியார் விடுதலை செய்யப் பட்டார். ஆக, வைக்கம் போராட்டம் 20 மாதங்கள் தொடர்ந்து நடைபெற்றதில் 5 மாதங்கள் சிறைத் தண்டனையைப் பெரியார் அனுபவித்து இருக்கிறார்.
நிலுவை வழக்கின் மீது
பெரியாருக்குச் சிறை!
பெரியார், வைக்கம் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் விடுதலையாகி ஈரோட் டிற்கு வந்தார். அங்கே ஒரு வழக்கு அவருக்காக ஆயத்தமாக இருந்தது. இந்த வழக்கின் காரணமாகவே அவர் ஈரோட்டிற்கு வந்தார். பெரியார் ஈரோட்டிற்கு வந்ததும் 11.9.1924இல் கைது செய்து, சென்னைக்குக் கொண்டு சென்று சிறையில் வைத்து இருந்தனர். பின் னர் அவருக்காக நிலுவையில் இருந்த வழக்கு நடை பெற்றது. இதையொட்டிய இன்னொரு செய்தியையும் இங்கே பதிவு செய்ய விரும்புகின்றோம்.
பெரியார். வைக்கம் செல்வதற்கு முன்பு 8.3.1924இல் சென்னை மயிலாப்பூர் மந்தைவெளியில் ஒரு சொற் பொழிவாற்றினார். அதற்காக அவர் மீது வகுப்பு வெறுப்பு குற்றம் சாட்டப்பட்டு 124ஏ, 153ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை மாகாண அரசு வழக்குத் தொடர்ந்தது. இதுகுறித்து சாமி.சிதம்பரனார் எழுது கிறபோது, ‘இவர் மறுபடி யும் திருவாங்கூருக்குச் சென்று அங்குத் தொல் லைக் கொடுக்காமல் இருப்ப தற்காகவே சென்னை அரசாங்கத்தார், திருவாங்கூர் அரசாங்கத்திற்குச் செய்யும் உதவியென்று சொல்லிக் கொள்ளப்பட்டது. ஏனெனில் அச்சமயம் திருவாங்கூர் திவானாக இருந்தவர் ராகவய்யா. சென்னை மாகாணத் திற்கு சட்ட மந்திரியாக இருந்தவர் சர் சி.பி.இராமசாமி அய்யர். இவ்வழக்கில் ஈ.வெ.ராமசாமியார் வழக் காடவில்லை என்றாலும் நியாயமற்ற வழக்கு அது என்பதனால் அரசாங்கத்தாலேயே திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது. இவ்வழக்கு முடிவதற்குள் வைக்கத் தில் கோவில் தெருக்களை எல்லோருக் கும் திறந்துவிட வேண்டுமென்று அரசே தீர்மானித்து அதற்குண்டான வேலைகளைச் செய்யத் தொடங்கி விட்டார்கள்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
அன்னை நாகம்மையார் அறிக்கை
சாமி. சிதம்பரனாரின் கூற்றிலிருந்து வைக்கம் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டதினால் பெரியார் மீண்டும் வைக்கம் செல்ல வேண்டிய அவசிய மில்லை. பெரியாருக்கு ‘வைக்கம் வீரர்’ எனத் தலைப்பிட்டு திரு.வி.க. எழுதிய தலையங்கத்தின் வழி அது பெரியாருக்கு அப்போராட்டத்தில் ஈடுபட்டதினால் சூட்டப்பட்ட பட்டமாகும். பெரியார் வைக்கம் களத்தில் இறங்கியபோது அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர். ஆனால் இப்போராட்டத்திற்குக் காங்கிரசின் ஆதரவோ காந்தியாரின் ஆதரவோ கிடைக்கவில்லை. உள் ளூர் ஏடுகளின் ஆதரவு இல்லை, காந்தியார் இப் போராட்டத்தைப் பற்றி அவரது ‘இந்தியன் ஒப்பீனி யன்’ ஏட்டில் எதுவும் எழுதவில்லை. ‘யங் இந்தியா’ வில் மட்டும் இதனை அகில இந்தியப் பிரச்சினை யாக்க விரும்பவில்லை என்று எழுதினார். பெரியார் இப்போராட்டத்தில் பங்கேற்ற விவரத்தைக் காந்தியா ரும் குறிப்பிடவில்லை. இதை காந்தியார் ஒரு வட்டாரப் பிரச்சினையாகவே கருதினார். மேலும் இது குறித்து நாகம்மையார் ஓர் அறிக்கையை 12.09.1924 ‘நவசக்தி’ இதழில் வெளியிட்டு இருக்கிறார்.
காந்தியார் இறுதிக் கட்டத்தில் திருவாங்கூர் மகா ராணியாரிடம் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு சாலைகளில் நடக்க அனுமதி பெற்றபோது உள்ளூர் தலைவர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. பெரியா ரையும் அழைக்கவில்லை. ஆனால், பெரியாரிடம் அபிப்பிராயத்தைக் கேட்டுப் பெற்றுப் பேச்சுவார்த் தையை முடித்தார் – காந்தியார்! வைக்கம் போராட்டம் பற்றி பெரியார் 1959இல் கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகளில் அனைத்துச் செய்தி களையும் மிக விரிவாகத் தெரிவித்து இருக்கிறார். 06.12.1925 தேதியிட்ட குடிஅரசு ஏடு வைக்கம் போராட் டம் குறித்துப் பதிவு செய்து இருக்கிறது. வைக்கம் போராட்ட ஆய்வாளர் ரவீந்திரன் பெரியார் கூற்றுகள் அனைத்தும் உண்மை என்று தெரிவித்து இருக்கிறார்.
வைக்கம் பொன்விழா
1975இல் வைக்கம் போராட்ட பொன் விழா ஆண்டு கொண்டாடப்பட்டது. அதில் மணியம்மையாரும், ஆசிரியர் கி.வீரமணியும் கலந்து கொண்டனர். எதிர் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேரள அரசின் அழைப்பின் பேரில் தொடங்கி வைக்கச் செல்கிறார். அத்தருணத்தில் அந்தப் போராட்டத்தைப் பற்றி நினைவுகூரவே இக் கட்டுரையை நிகழ்வுகளின் சுருக்கமாக தந்து இருக்கின் றோம்.
– நன்றி: ‘முரசொலி‘, 29.3.2023