வைக்கம் நூற்றாண்டு விழாவையொட்டி, தந்தை பெரியாருக்குச் சிறப்புச் செய்யும் வகையில் புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் எழுதிய “சிந்திக்கச் சொன்னவர் பெரியார்” என்ற பாடலை, புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா அவர்கள் பாடி, அதன் காணொளியைத் தன் யுடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் பாடலுக்கு எழுத்தாளர் ஆய்வாளர் பழ.அதியமான் அவர்கள் அறிமுக உரையையும் வழங்கியுள்ளார்.
கடந்த 30.03.2023 அன்று மாலை வெளியான அந்தப் பாடலை, சிதம்பரத்தில் நடைபெற்ற சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரைப் பயணப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிமுகப்படுத்தி, மேடையில் ஒலிக்கச் செய்து அனைவ ருடனும் கேட்டு மகிழ்ந்தார்.
பிலகரி ராகத்தில் ஏகத்தாளம் காந்த நடையில் இசைக்கப்பட்டுள்ள அந்தப் பாடலின் வரிகள் பின்வருமாறு:-
சிந்திக்கச் சொன்னவர் பெரியார்
தந்தை பெரியார் தந்தை பெரியார்
சொந்த புத்தியைக் கொண்டே எதையும்
சிந்திக்கச் சொன்னவர் பெரியார்
தந்தை பெரியார் தந்தை பெரியார் (சிந்திக்கச்)
முந்தைய காலத்தின் முறைகளையே
முழுவதும் புரிந்து கொள்வதற்கே
சிந்தையை நன்றாய்த் தெளிவாக்கிச்
சீருடன் பகுத்து ஆராய்ந்து (சிந்திக்கச்)
ஜாதிப் பிரிவினைகள் ஏன்
சாத்திர விதிமுறைகள் ஏன்
ஆதிக்க நடைமுறை ஏன்
அநீதித் தீண்டாமை ஏன்
பாதிக்கப் படுவோர் யார்
பலனடைந்து வாழ்வோர் யார்
ஏது மற்றிருப்போர் யார்
ஏமாற்றிப் பிழைப்பவர் யார்
மோதி உடைத்து முழுதாய் இங்கே
மாற்றம் காண முருகாய் எதையும் (சிந்திக்கச்)
சமூக ஊடகங்களில் இந்தப் பாடல் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. (https://youtu.be/zLpFhcFzZx4)