மக்களை பிரித்தாளும் பிஜேபியின் கருத்தியலை முறியடிக்க தந்தை பெரியாரின் கொள்கைதான் அடித்தளமாக உள்ளது
”பெரியாரின் தொலைநோக்கும்,கொள்கையும் நம்மை வழிநடத்தட்டும்!”
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
கடித விவரம் வருமாறு:
அன்பார்ந்த திரு.வீரமணி அவர்களுக்கு,
தாங்கள் நலமுடன் இருக்க விழைகிறேன். சென்னை- பெரியார் திடலுக்கு என்னை அழைத் ததற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘இந்தியா’ (I.N.D.I.A.) கூட்டணி மீது தாங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு எனது நன்றியினை தெரிவிக்க விரும்புகிறேன். தங்களது கடிதத்தில் மிகவும் சரியாக விளக்கிக் காட்டியதுபோல இந்தக் கூட்டணி அரசியல் கூட்டணி என்பதைவிட மேம்பட்டது.
சமூகநீதி தேவையின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் அனைவரையும் உள்ளடக்கிய முற்போக்கான செயல்திட்டத்தின் மூலம்தான், மக்களைப் பிரித்தாளும் பாரதிய ஜனதா கட்சியின் கருத்தியலை தோற்கடிக்க முடியும். ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் கண்ணியமாக, சுயமரியாதையுடன் வாழ்க்கை நடத்திட தந்தை பெரியாரின் தொலை நோக்குதான் பாதை அமைத்துத் தந்தது. நாடு தழுவிய சமூகநீதி இயக்கங்களின் கருத்தியல் சார்ந்த பிணைப்பிற்கு, பிற்போக்கு சக்திகளை எதிர்த்து தந்தை பெரியார் தனது வாழ்நாள் முழுவதும் போராடியதுதான் அடித்தளமாக அமைந்துள்ளது. தந்தை பெரியாரின் தொலை நோக்கும், அவரது கொள்கை சார்ந்த உறுதியான நிலைப்பாடும் இன்றைக்கும் தொடர்ந்து நம்மை ஊக்கப்படுத்தி வழிநடத்தட்டும்!
தங்களது வருங்கால செயல்பாடுகள் வெற்றி பெற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
– இவ்வாறு காங்கிரஸ் மூத்த தலைவர் திருமதி சோனியா காந்தி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.