கச்சத்தீவு, ஏப். 3- கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். மேலும் ரோந்து கப்பலால் மோதி மீனவர்களின் படகை சேதப் படுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு துறைமுக பகுதியில் இருந்து நேற்று முன்தினம் (1.4.2023) 300-க்கும் அதிகமான விசைப்படகுகளில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மண்டபத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கு சொந்த மான விசைப்படகு ஒன்றில் சுப்பிரமணி, மனோகரன், வெள்ளைச்சாமி, மலைக்கல்லன் ஆகிய 4 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.
கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது ரோந்து கப்பல் ஒன்றில் வந்த இலங்கை கடற்படையினர் கப்பலை வைத்து இந்த படகின் மீது மோதினர். இதில் படகு சேதம் அடைந்தது. மேலும் படகில் ஏறி மீனவர்கள் பிடித்து வைத்திருந்த பலவகை மீன்களை அள்ளி சென்றதுடன் மீனவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
சேதம் அடைந்த படகுடன் 4 மீனவர்களும் நேற்று (2.4.2023) காலை மண்டபம் பகுதிக்கு கரை திரும்பினார்கள். சேதமடைந்த மீன்பிடி விசைப்படகை ஒன்றிய, மாநில உளவு பிரிவு மற்றும் கடலோர காவல் துறையினரும் பார்வையிட்டனர். மேலும் 4 மீனவர்களிடமும் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
மகத்தான மனிதநேயம்
மூளைச்சாவு: உடல் உறுப்புகள் கொடை
மதுரை, ஏப். 3- மூளைச் சாவு அடைந்த மதுரை பெண்ணின் உடல் உறுப்புகள் கொடையாக வழங்கப்பட் டது. அதில் ஒரு சிறுநீரகம், நெல்லைக்கு ஆம்புலன்சு மூலம் காவல்துறையினர் உத வியுடன் அனுப்பி வைக்கப் பட்டது. மதுரை மாவட்டம் தேனூர் பகுதியை சேர்ந்தவர் செபஸ்டின். இவருடைய மனைவி கார்த்திகா(வயது 47). இவர் கடந்த மார்ச் 30ஆம் தேதி மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். தேனூர் பேருந்து நிலையம் அருகே அவர்கள் வந்தபோது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் மோதிய விபத்தில், கார்த்திகா பலத்த காயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவர், சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த அவர் நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனைதொடர்ந்து, மூளைச்சாவு அடைந்த கார்த்தி காவின் உடல் உறுப்புகளை கொடை செய்வது குறித்து மருத்துவர்கள், அவரின் மகள் மற்றும் மகன்களிடம் எடுத் துரைத்தனர். அதன்பின்னர், அவர்களும் உடல் உறுப்பு களை கொடை செய்ய ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல் ஆலோசனையின் பேரில் மருத்துவக் குழுவினர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன்படி, கல்லீரல் மதுரை தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் நெல்லை அரசு மருத்துவமனைக்கும், கருவிழி, தோல் மற்றும் எலும்பு ஆகியவை மதுரை அரசு மருத்துவமனைக்கும் கொடை யாக வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்பின்னர், அந்த உடல் உறுப்புகள் சாலை மார்க்கமாக கொண்டு செல்வதற் கான ஏற்பாடுகள் குறித்து காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவலர்களும் ஆம்புலன்சுகள் இடையூறு இன்றி செல்லும் வகையில், வழிவகை செய்து கொடுத்தனர்.
தரமற்ற மருந்துகள் 59 பட்டியல் ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு
சென்னை, ஏப். 3- காய்ச்சல், சளி உள்ளிட்ட பிரச்சினை களுக்கான 59 மருந்துகள் தரமற்றவை என்று ஒன்றிய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் விற்பனைசெய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் ஒன்றிய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. ஆய்வின்போது போலி மற்றும் தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப் பட்ட நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் 1,251 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், காய்ச்சல், சளி, கால்சியம், இரும்புச்சத்து, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 59 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. பெரும்பாலானவை இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை ஆகும்.
தரமற்ற அந்த மருந்துகளின் விவரங்கள், ஒன்றிய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் cdsco.gov.in என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விவகா ரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.