மு.இராமநாதன்
(பொறியாளர் – எழுத்தாளர்)
இந்த மூன்று செய்திகளும் கடந்த இரண்டு மாதங்களில் வெளியானவை.
ஜனவரி மாத இறுதியில் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலின் குடமுழுக்கு நடந்தது. பத்து நாட்களுக்குப் பிறகு அரசியலர் வானதி சீனிவாசன் ஓர் அறிக்கை வெளியிட்டார். தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவும் சில அறநிலையத் துறை அதிகாரிகளும் கருவறைக்குள் (அர்த்த மண்டபத்திற்குள்?) நுழைந்து விட்டனர் என்றும், அதற்காக ஒரு பிராயச்சித்த குடமுழுக்கு நடத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் சொல்லியிருந்தார். ஏன்? அமைச்சரும் அதிகாரிகளும் சூத்திரர்கள். ஆகம விதிகளின்படி அங்கு பார்ப்பன அர்ச்சகர்கள் மட்டுமே நுழைய முடியும்.
அடுத்த செய்தி, உயர் நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு. கடந்த ஆண்டு வயலூர் முருகன் திருக்கோவிலில் தமிழ்நாடு அரசு பிராமணரல்லாத இரண்டு அர்ச்சகர்களை நியமித்தது. இதை எதிர்த்தும், இவர்களுக்குப் பதிலாகத் தங்களை நியமிக்கக் கோரியும் இரண்டு பிராமண இளைஞர்கள் வழக்குத் தொடுத்தனர். அவர்கள் அந்தக் கோவிலில் பணி யாற்றுகிற அர்ச்சகர்களின் பிள்ளைகள். நீதிமன்றம் அரசின் நியமனத்தை ரத்துசெய்தது. வாதிகளை நியமிக்கச் சொல்லியும் ஆணை பிறப்பித்தது. காரணம்: வயலூர் கோவில் ஆகம விதிகளின் கீழ் வரும். அங்கே பார்ப்பன அர்ச்சகர்கள்தான் பணியாற்ற முடியும்.
மூன்றாவது சம்பவம் நெல்லையில் நடந்தது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து ஒரு கருத்துக் கேட்புக் கூட்டம் மார்ச் 7ஆம் நாள் நடந்தது. இந்துத்துவர்களுக்கு இது உவப்பாக இல்லை. கூட்டம் அமளியில் முடிந்தது. ஏன்? குடமுழுக்கு சம்ஸ்கிருதத்தில்தான் நடத்தப்பட வேண்டும். அப்படித்தான் சொல்கிறது ஆகம விதி.
ஆகமம் ஆகி நின்று…
இந்த மூன்று செய்திகளுக்கும் உள்ள ஒற்றுமை இவை ஆகம விதிகளைப் பற்றியவை. இன்னும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைப் பின்னால் பார்க்கலாம்.
நமது அரசமைப்புச் சட்டம் குடிமக்கள் அனை வரும் சமம் என்கிறது. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட சமூகங்களுக்கு ஒதுக்கீடு வழங்குகிறது. நிய மனங்கள் தகுதி அடிப்படையில்தான் மேற்கொள்ளப் பட வேண்டும், வாரிசு அடிப்படையில் அல்ல என்றும் சொல்கிறது. ஆனால், மேற்கூறிய செய்திகள் குறிப் பிடும் ஆகம விதிகள் அரசமைப்பு விதிகளோடு ஒத்துப்போகவில்லை.
இந்த ஆகம விதிகளின்படி, சூத்திரர்கள் அர்ச்சகர்கள் ஆக முடியாது, அவர்கள் கருவறைக்குள் நுழையக் கூடாது, தமிழில் குடமுழுக்கு நடத்தக் கூடாது. மேலதிகமாக, இந்த விதிகளை மீறினால் இந்துக்களின் மனம் புண்பட்டுவிடும். அப்படித்தான் இந்துத்துவர்கள் சொல்கிறார்கள்.
இந்து மதத்தின் கதை
இந்து மதம் ஒரு குடையின் கீழ் வந்தது வெள்ளையர்களின் ஆட்சியில்தான். 1790இல் வில்லியம் ஜோன்ஸ் என்கிற ஆங்கிலேயர் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முதலான நிர்வாகக் காரணங்களுக்காக இந்துக்களை உருவாக்கினார். அதாவது கிறிஸ்துவர்களாக, இஸ்லாமியர்களாக, சீக்கியர்களாக, சமணர்களாக அல்லாதவர்களை இந்து மதத்தவர் என்று குறித்தார். இந்து என்கிற சொல் சிந்து என்கிற இடப்பெயரிலிருந்து வந்தது. சிந்துவில் வசித்தவர்கள் இந்துவானார்கள். இடவாகு பெயர். மதவாகு பெயர் என்றும் சொல்லலாம்!
சனாதனத்தையும் வர்ணாசிரமத்தையும் பின்பற்றிய வேத மரபினர் புதிய இந்து மதத்தின் தலைமைப் பீடத்தைக் கைப்பற்றிக்கொண்டனர். சைவ, வைணவ சித்தாந்தங்கள் வைதீக மரபின் பகவத் கீதையிலிருந்து பெரிதும் மாறுபட்டவை. எனினும் சைவமும் வைணவமும் இந்து மதத்தில் மெல்லக் கரைந்தன. முக்கியமான காரணம், அவை பெருந்தெய்வ வழிபாட்டை முன்னிறுத்தியவை.
சிறுதெய்வமும் பெருந்தெய்வமும்
ஆனால், சிறுதெய்வங்களையும் காலப்போக்கில் இந்து மதம் செரித்துக்கொண்டது. சிறுதெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாட்டு முறையில் வரும். இது பெருந்தெய்வ வழிபாடுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. தங்கள் வயல் வரப்பை, கால்நடையை, நீர்நிலையை, வீடு வாசலை, கடை கண்ணியை, விளைபொருளை, பெண்டு பிள்ளைகளைக் காப்பாற் றுவதற்கு மக்கள் குலதெய்வங்களை வழிபட்டார்கள்.
சண்டைகளில் உயிர் நீத்தவர்கள் ஆண் தெய் வங்களாயினர். விபத்தில் இறந்த கன்னிப் பெண்களும், பாலியில் வன்முறையிலிருந்து தங்களைப் பாதுகாக்கத் தற்கொலை செய்துகொண்டவர்களும் பெண் தெய்வங்களாயினர். இந்த இருபால் தெய்வங்களும் உக்கிரமானவர்கள். சினம் மிகுந்தவர்கள். தமிழர்கள் வீரத்தை வழிபட்டார்கள். ஆகவே, அவர்தம் குல தெய்வங்களும் வீரம் செறிந்தவர்களாய் இருந்தனர்.
எங்கள் பகுதியில் அய்யனார், கறுப்பர், காளி யம்மன், செல்லாயி அம்மன் என குல தெய்வங்கள் பலர். இங்கே பூசை செய்வோருக்கு வேளார் என்று பெயர். தமிழில்தான் அர்ச்சனை செய்வார்கள். இப்போது குடிகள் பலரின் கைகளில் கொஞ்சம் காசு பணம் சேர்ந்துவிட்டது. ஆகவே, அவர்கள் தங்கள் குலதெய்வக் கோயில்களை எடுத்துக் கட்டினார்கள். இப்போது சுடலைமாடனோடும் மாரியம்மனோடும் முன்னொட்டாக சிறீ சேர்ந்துகொண்டது. குடமுழுக் குகள் விமரிசையாக நடந்தன. அதற்குப் பார்ப்பன அர்ச்சகர்கள் வந்தனர். சம்ஸ்கிருத மந்திரங்களை ஓதினார்கள். பெருந்தெய்வங்களுக்கு சம்ஸ்கிருதம் தெரிந்திருக்கும். ஆனால், சிறு தெய்வங்கள் இந்த மண்ணின் பூர்வகுடிகள். அவர்கள் சம்ஸ்கிருதம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இப்போது குடமுழுக்கு நடத்தும் அவர்களது வழித்தோன்றல்களும் அறிய மாட்டார்கள். ஆனால், சமஸ்கிருத மந்திரம் மேலானது, பிராமண அர்ச்சகர் மேலானவர் என்று அவர்களில் பலர் நம்புகிறார்கள். இதைத்தான் சமூக ஆய்வாளர்கள் சம்ஸ்கிருதமய மாக்கல் (Sanskritization) என்கிறார்கள். இந்தத் தொடரை 1950வாக்கில் அறிமுகப்படுத்தியவர் எம்.என்.சிறீனிவாஸ் எனும் சமூகவியலாளர். இது மொழியியல் தொடர்பானதில்லை. சமூகவியல் தொடர்பானது.
சம்ஸ்கிருதமயமாக்கம்
ஜாதிப் படிநிலையில் கீழ் அடுக்குகளில் இருக்கும் பிரிவினர் வசதியும் வாய்ப்பும் பெறுகிறபோது, அதிகாரமும் செல்வாக்கும் மிக்க வைதீக மரபின் நடைமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். இதன் மூலம் தங்கள் சமூக நிலையை மேல் அடுக்குகளில் உள்ளவர்களுக்கு இணையாக நிறுத்திக்கொள்ள முயற்சிக்கிறார்கள். அதேவேளையில் மேல் அடுக்கில் உள்ளவர்கள் கீழ் அடுக்கில் உள்ளவர்களின் அடையாளங்களைத் தன்வயப்படுத்துகிறார்கள். இவைதான் சம்ஸ்கிருதமயமாக்கல்.
நமது ஆலயங்கள் பலவும் சம்ஸ்கிருதமயமாகி விட்டன. ஓர் எடுத்துக்காட்டைப் பார்க்கலாம். சமீ பத்தில் ராமேஸ்வரம் போயிருந்தேன். மூன்றாவது பிரகாரத்தின், அதாவது ஆயிரங்கால் மண்டபத்தின் வடக்குப் பகுதியில் ஆலயத்தின் ஸ்தல புராணம் ஓவியங்களாக வைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரு படம் என் கவனத்தை ஈர்த்தது. வானர சேனை ராமர் பாலம் கட்டுகிறது. அந்தப் படத்தில் மூன்று அம்சங் களைக் குறிப்பிட்டாக வேண்டும். முதலாவதாக, படத்தில் இடம்பெறும் ராமன், நமது கம்பனின் ‘கரிய செம்மல்’ அல்லன். அமர் சித்திரக் கதைகளில் வரும் நீல நிறத்தவன். அடுத்து, ராமர் பாலம் கட்டும் வானர சேனை பூணூல் தரித்திருக்கிறது. மூன்றாவதாக, ராமர் பாலத்தின் ஒவ்வொரு கல்லிலும் ‘ராம்’ என்று எழுதி யிருக்கிறது – தேவநாகரி லிபியில்.
இன்னொரு எடுத்துக்காட்டு. சில மாதங்களுக்கு முன்பு ஒரு புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் தமிழ் இலக்கியம் என்பதே பக்தி இலக்கியம்தான் என்று பேசினார். தமிழ் இலக்கியத்தில் அறமும், வீரமும், காதலும் நிரம்பி வழிவதை அவர் அறிந்திருப்பார். என்றாலும் “தமிழுக்கு பக்தி என்று பேர்” என்று பேசினார்.
இதேபோல, இப்போது திருக்குறள் ஓர் ஆன்மீக நூல் என்கிறார்கள். திருவள்ளுவர் எழுதியது தர்ம சாஸ்திரம் என்கிறார்கள். தமிழ்ப் பெருமிதங்களையும் தமிழ் அடையாளங்களையும் இந்துத்துவம் களவாட முயற்சிக்கிறது. இதுதான் சம்ஸ்கிருதமயமாக்கல்.
சிறீரங்கம் கோவிலுக்கு இளையராஜா திருப்பணி செய்தார். பல நடுத்தர வர்க்கத்தினர் தம் பிள்ளை களுக்கு சம்ஸ்கிருதப் பெயர்களைச் சூட்டுகிறார்கள். குலதெய்வக் கோயில்களில் சம்ஸ்கிருத மந்திரங்கள் ஓதப்படுகின்றன. இவையெல்லாம் சம்ஸ்கிருத மயமாக்கலின் விளைவுகள்தாம்.
எல்லா ஜாதியினரும் அர்ச்சகராகலாம், சட்டம் இருக்கிறது. தமிழில் அர்ச்சனை செய்யலாம், சட்டம் இருக்கிறது. ஆனால், கணிசமான பக்தர்கள் பார்ப்பன அர்ச்சகர் செய்விக்கும் சம்ஸ்கிருத அர்ச்சனையே மேலானது என்று நம்புகின்றனர். கடந்த பல தலைமுறைகளாக அந்த நம்பிக்கை நம்மவர்கள் தலையில் திருகி ஏற்றப்பட்டிருக்கிறது. அதனால்தான் வானதி சீனிவாசன் போன்றவர்களால் பிராயச்சித்த குடமுழுக்கு வேண்டும் என்று கேட்க முடிகிறது. இந்துத்துவர்களால் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் தங்கள் கருத்தைச் சொல்லாமல் குழப்பம் விளைவிக்க முடிகிறது.
ஊடகங்களின் எதிர்வினை
இப்போது கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்ட மூன்று செய்திகளுக்குமிடையில் நிலவும் இரண் டாவது ஒற்றுமையைப் பார்க்கலாம். அது ஊட கங்களின் எதிர்வினை. இந்தச் செய்திகள் ஊட கங்களில் வெளியாகின. ஆனால், அச்சு ஊடகங்களோ தொலைக்காட்சி அலைவரிசைகளோ இது தொடர்பாக பெரிய விவாதம் எதையும் முன்னெ டுக்கவில்லை. சம்ஸ்கிருதமயம் ஆகிவரும் ஒரு சமூகத்தில் நீரோட்டத்தின் போக்கிற்கு எதிராக அவர்கள் ஒரு துரும்பையும் கிள்ளிப்போடத் தயாரில்லை.
எனினும் சமூக வலைதளங்களில் சிலர் இந்தச் செய்திகளை விவாதித்தனர். அவர்களில் ஒரு சாரார் தமிழ்நாடு அரசின் அறநிலையத் துறை சட்டரீதியாக இந்தப் பிரச்சினைகளை நேரிட்டு அரசமைப்பு விதி களை நிலைநாட்ட வேண்டும் என்றனர். அவர்கள் ஒரு விடயத்தைக் கவனத்தில் கொள்ளவில்லை. இதுபோன்று ஆகமங்களிலோ அல்லது ஸ்மிருதி களிலோ சொல்லப்பட்டுவந்த பல பழக்க வழக்கங்கள் கடந்த காலங்களில் மாறியிருக்கின்றன.
இப்போது பெண்கள் வேலைக்குப் போகிறார்கள், மறுமணம் செய்துகொள்கிறார்கள். பார்ப்பனர்களும் பனியாக்களும் திரைக் கடலோடுகிறார்கள். குழந் தைத் திருமணங்கள் அருகிவிட்டன. உடன்கட்டை ஏறுதல் பழங்கதையாகிவிட்டது. இந்தச் சீர்திருத் தங்களுக்கு இன்று சட்டத்தின் பாதுகாப்பும் இருக் கிறது. ஆனால், முன்னெடுக்கப்பட்ட காலத்தில் இவை பெரும் எதிர்ப்புகளை நேரிட்டன. மக்களை வென்றெடுத்ததன் மூலமே அவற்றின் நியாயங்கள் நிலை நாட்டப்பட்டன. இதைச் சமூக ஊடகர்களில் பலர் கருத்தில் கொள்ளவில்லை.
என்ன செய்யலாம்?
முதற்கட்டமாக சம்ஸ்கிருதமயம் ஆகிவரும் தமிழ்ச் சமூகத்திடம் அது தன் தமிழ்ப் பராம்பரியத்தை இழக்கிறது என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின் மாட்சிமையையும் சமூக நீதியையும் தமிழ் வழிபாட்டையும் நிலைநிறுத்த விரும்பும் இயக்கங்களும் அறிவாளர்களும் மக்கள் மன்றத்தில் தொடர்ந்து உரையாட வேண்டும்.
பொழுதெல்லாம் தமிழர் பண்பாடும் பராம் பரியமும் கொள்ளை போய்க்கொண்டிருக்கின்றன என்பதைக் கவனப்படுத்த வேண்டும். வாய்ப்புள்ள எல்லா வழிகளிலும் இந்தப் பரப்புரைகள் நிகழ வேண்டும். சமூக மாற்றங்களை சட்டத்தின் துணை கொண்டோ ஆட்சி அதிகாரத்தின் துணை கொண்டோ மட்டும் சாதித்துவிட முடியாது. பரந்துபட்ட மக்களின் பங்களிப்பின்றி அது சாத்தியமாகாது.
நன்றி: ‘அருஞ்சொல்’ இணையம், 28.3.2023
குறிப்பு: ‘அருஞ்சொல்’ இணையதளத்தில் ‘பிராமணர்’ என்று குறிப்பிட்டிருந்த இடங்களை நாம் ‘பார்ப்பனர்’ என்று குறிப்பிட்டிருக்கிறோம்.