பெண்கள் இட ஒதுக்கீடு சட்டம்: தொகுதி மறுவரைவு குழப்பத்தில் தடுமாறும் ஒன்றிய அரசு – ‘டெக்கான் கிரானிக்கல்’ தலையங்கம் (20.04.2026)

3 Min Read

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் நாட்டுக்கு ஆற்றிய உரை, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு மக்களவை (லோக்சபா) தொகுதிகளை மறு விநியோகம் செய்து, உறுப்பினர் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்த வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தது. இந்த அறிவிப்பு, ஆட்சியில் உள்ள என்.டி.ஏ. கூட்டணியின் அரசியல் மற்றும் தேர்தல் நோக்கங்களை காட்டிக்கொடுப்பதாகவே தோன்றுகிறது.

எதிர்க்கட்சிகளை குற்றவாளிகளாக சித்தரிக்க முயற்சிப்பதற்கு முன், அரசாங்கம் ஒரு எளிய கேள்விக்கு பதிலளிக்க வேண்டும்: இப்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின் படி, மக்களவை யிலும்,  மாநில சட்டமன்றங்களிலும் பெண்கள் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்துவதற்கு என்ன தடையாக உள்ளது?

மக்களவையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற விவாதம், ஒன்றிய அரசின் அணுகுமுறையின் அலட்சியத்தையும் கவனக்குறைவையும் வெளிப்படுத்தியது. நாட்டின் அரசியலில் மிகவும் விவாதத்துக்குரிய மற்றும் முக்கியமான பிரச்சினையான ‘தொகுதி மறுவரையறை’ (Delimitation) என்ற விஷயத்தை, அனைவராலும் ஆதரிக்கப்படும் ‘பெண்கள் இடஒதுக்கீடு’ என்ற விஷயத்துடன் இணைத்து பேச முயன்றது பல கேள்விகளை எழுப்புகிறது.

தொகுதி மறுவரையறை என்பது இந்தியாவின் சமீபத்திய வரலாற்றில் ஏற்பட்ட பல சமூக-அரசியல் மாற்றங்களை கருத்தில் கொண்டு விரிவான ஆலோசனைகளுடன் மேற்கொள்ள வேண்டிய ஒரு செயல்முறை. ஆனால் பெண்கள் இடஒதுக்கீடு ஏற்ெகனவே அரசியலமைப்பில் இடம் பெற்றுள்ள உரிமை.

இந்த இரு விஷயங்களையும் ஒன்றாக கலப்பது, அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் குறித்து சந்தேகத்தை உருவாக்குகிறது. மொத்தத்தில், அரசின் அணுகுமுறை இந்த சட்டத்தின் நோக்கத்திற்கான அதன் உறுதியின்மையை வெளிப்படுத்துவதாகவே தெரிகிறது. 2023ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தை கடைசி நேரத்தில் அறிவித்தது கூட, இந்தச் சட்டத்தின் எதிர்காலம் குறித்து அரசே தெளிவற்ற எதிர்பார்ப்புடன் இருப்பதை காட்டுகிறது.

அரசாங்கம் முன்வைக்கும் ஒரு வாதத்தில் உண்மை இருக்கிறது. கடந்த அய்ந்து தசாப்தங்களில் ஏற்பட்ட பெரும் மக்கள் தொகை மாற்றங்களை கருத்தில் கொண்டு, 1971 முதல் உறைந்த நிலையில் உள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே அந்த வாதம். 1976ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியிலும், பின்னர் 2001ஆம் ஆண்டு என்டிஏ (NDA) ஆட்சியிலும் இந்த எண்ணிக்கையை நிலைநிறுத்தும் ஒப்பந்தம் உருவானது.

ஆனால், இதை உண்மையாக மாற்ற விரும்பினால், அரசு முதலில் புதிய  நாடு தழுவிய ஒப்புதலை உருவாக்கும் செயல்முறையைத் தொடங்க வேண்டும்.

இதற்கிடையில், ஒன்றிய அரசு குழப்பமான அணுகுமுறையுடன் செயல்படுகிறது. ‘தொகுதி மறுவரையறை’ கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட வேண்டும் என்று சட்டம் கூறும் நிலையில், பிரதமரும் அவரது அமைச்சர்களும் மக்களவைத் தொகுதிகள் குறையாது, மாநிலங்களுக்கும் பாதிப்பு இருக்காது என்று உறுதிபட கூறுவது முரண்பாடாக தெரிகிறது. இது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாத நிலையை உருவாக்குகிறது.

பெண்கள் அதிகாரமடைதலை அரசு உண்மையாக விரும்பினால், நாடாளுமன்றத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் தங்களின் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். அவர்கள் பெண்களை “வணங்குவதற்காக” மட்டுமல்ல, அவர்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்குவதற்காக சட்டத்தை கொண்டு வர வேண்டும்.

மக்களவை மற்றும் மாநிலங்களின் வலிமையை குறைக்காமல், பெண்கள் இட ஒதுக்கீட்டை செயல் படுத்தும் பல மாற்று வழிகள் அரசாங்கத்துக்கு இருக்கின்றன.

இந்த முழு நிகழ்வின் மற்றொரு அரசியல் விளைவு என்னவென்றால், உடைந்த நிலையில் இருந்த ‘இண்டியா கூட்டணி’ மீண்டும் ஒன்றுபடும் வாய்ப்பை இது உருவாக்கியுள்ளது. தனிப்பட்ட முரண்பாடுகளை தாண்டி, எதிரியை எதிர்கொள்ள ஒன்றுபட வேண்டும் என்ற எண்ணத்தை இது அவர்களுக்கு வழங்கக்கூடும்.

இதனால், இந்திய அரசியல் இன்னும் சுவாரசியமான திருப்பத்தை எதிர்நோக்குகிறது.

தமிழாக்கம்: குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *