மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு காப்பாற்றும் நடவடிக்கைகளில் இது குறுக்கிடுவது ஆகாதா?
குற்றவாளிகளைத் தப்பிக்கவிட உபாயமா?
தமிழ்நாடு அரசு இதில் தனி கவனம் செலுத்தவேண்டும்!
கலாஷேத்ரா மாணவிகள்மீது பாலியல் வன்முறை: குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைதாகும் நிலையில், கலாஷேத்ரா நிறுவனத்தை நடத்தும் அமைப்பே தனி விசாரணைக் குழுவை அமைப்பதா? மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு காப்பாற்றும் நடவடிக்கைகளில் இது குறுக்கிடுவது ஆகாதா? குற்றவாளிகளைத் தப்பிக்கவிட உபாயமா? தமிழ்நாடு அரசு இதில் தனி கவனம் செலுத்தவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சென்னையில், ஒன்றிய அரசின் ஆளுமையின்கீழ் கலாஷேத்ரா நிறுவனம் நடைபெற்று வருகிறது. ஆசிரியர்கள் சிலர் நடத்தியதாகக் கூறப்படும் பாலியல் குற்றச்சாற்றுகளுக்காக அங்கு பயிலும் மாணவிகள், போராட்டம் நடத்தினர். புகார்மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் உறுதி கூறி, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சில பேராசிரியர்களை காவல்துறையினர் தேடி, தலைமறைவானவரை கைது செய்து, விசாரணை நடத்தத் தொடங்கிய நிலையில், திடீரென்று கலாஷேத்ரா அறக்கட்டளை வாரியம் சார்பில், ஒரு விசாரணைக் கமிட்டியை அவசர அவசரமாக அறிவித்துள்ளனர்.
எந்த நிர்வாகத்தின்மீது குற்றச்சாட்டோ, அந்த நிர் வாகமே தனக்குத்தானே விசாரணை கமிட்டி அமைத்துக் கொள்வது எதற்காக?
– புரியவில்லையா?
விசாரணைக் கமிட்டி உறுப்பினர்கள்
யார், யார்?
அக்கமிட்டியில் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி கண்ணன் என்பவரைத் தலைவராக நியமித்து சில உறுப்பினர்களை மேனாள் காவல்துறை இயக்குநர் லத்திகாசரண், மருத்துவர் ஷோபா வர்தமான் உள்பட விசாரணைக் கமிஷன் அமைத்துள்ளது கலாஷேத்ரா அறக்கட்டளை வாரியம்.
இந்த ஓய்வு பெற்ற பஞ்சாப் உயர்நீதிமன்ற நீதிபதி, சென்னையில் வழக்குரைஞராக இருந்து, அரைக்கால் சட்டையுடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும், ‘ஷாகா’ விலும் கலந்துகொண்டவர் ஆவார்!
அதன் காரணமாகத் தமிழ்நாட்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்க பலத்த எதிர்ப்பு இருந்தபடியால், பிறகு பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டார். அங்கிருந்து ஓய்வு பெற்று இங்கு திரும்பி சில ஆண்டுகள் ஆன நிலையில், இப்படி ஒருவர் தலைமையில், விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது சரியா?
சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட
கமிட்டி அல்ல!
தமிழ்நாடு அரசின் காவல்துறை, அதன் விசாரணை நடவடிக்கையை முழு வீச்சில் நடத்தி, தலைமறைவு குற்றவாளிகளைக்கூட கண்டுபிடித்து சிறையில் அடைத் துள்ள நிலையில், இப்படி ஒரு விசாரணை கமிஷன், அதுவும் ஓர் ஆர்.எஸ்.எஸ். ஈடுபாடு கொண்ட ஒருவர் தலைமையில் நியமித்து அறிவித்திருப்பது (அறிவிப்பு ஆணை தனியே காண்க) பல வகையிலும் பெருத்த சந்தேகத்தை அல்லவா பொதுமக்களுக்கும், பாதிக்கப் பட்ட மாணவிகளுக்கும், பெற்றோர்களுக்கும் உருவாக் குகிறது?
தமிழ்நாடு அரசின் மகளிர் ஆணையத் தலைவர் குமாரியின் தலைமையில், இதுகுறித்த விசாரணையை நடத்தி முடித்து, அறிக்கையையும் அரசுக்குக் கொடுத் துள்ளது.
சட்டம் ஒழுங்கு என்பது
மாநில அரசுக்கு உட்பட்டது
சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசுக்கு உரியது; தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்புப்படி, திட்டவட்ட மாக காவல்துறை குற்றவாளிகளைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கைகளை முடுக்கிவிடும் நேரத்தில், அதனை நீர்த்துப் போகவோ அல்லது தண்டனைகளிலிருந்து குற்றமிழைத்தோரை காப்பாற்றிடவோ இப்படிப்பட்ட நடவடிக்கை என்பதாகவும் ஒரு பலத்த கேள்வியும், சந்தேகமும் எழுகின்றன!
பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்; படிக்கும் மாணவிகளின் எதிர்காலம்பற்றிய வாழ்வுரிமை பாதுகாப்புப் பிரச்சினை இதில் அடங்கி யுள்ளது.
மறைமுகமாக ‘ஒரு போட்டி அரசினை நடத்திடுவது’ போன்ற நடவடிக்கையாக, தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்குப் பிரச்சினையை திசை திருப்பி – அந்தப் புகாரினை ஒன்றுமில்லாததாக்கி, ‘‘வெள்ளையடிக்க மறைமுக ஏற்பாடா?” இக்கமிட்டி திடீரென்று முளைத்தது முக்கிய கேள்வியாக இருந்து வருகிறது!
ஒன்றிய அரசின் பிரச்சினைகள் தமிழ்நாட்டில் சில மத்திய பல்கலைக் கழகங்களில் ஏற்பட்டபோது, காட்டப்படாத அவசரம் இப்போது இதற்கு மட்டும் ஏன் என்பதே, பொதுவெளியில் எழும் சந்தேகங்களும், கேள்விகளும் ஆகும்.
குற்றவாளிகளைத் தப்பிக்கவிட உபாயமா?
இந்தத் திடீர் ‘மூவர்’ கமிட்டி நியமனம் என்பது பிரச்சினையைத் திசை திருப்பி, குற்றவாளிகளைத் தப்பிக்கவிட ஓர் உபாயமோ என்பதே பரவலாக எழுந்துள்ள சந்தேகம் ஆகும்!
தமிழ்நாடு அரசு இதில் தனி கவனம் செலுத்தட்டும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
4.4.2023