சென்னை, ஏப். 5- பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கு ஆழமான மூளைத் தூண்டுதல் கருவி பதித்தல் அறுவை சிகிச்சையை புகழ்பெற்ற நரம்பியல் நிபுணரும், மூத்த மருத்துவ ஆலோசகருமான டாக்டர் யு. மீனாட்சிசுந்தரம் தலைமையில், வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் குழு, வெற்றிகரமாக மேற்கொண்டது. இந்த சிகிச்சை 63, 40 மற்றும் 9 வயது கொண்ட நோயாளிகளுக்கு புதிய வாழ்க்கையை அளித்துள்ளது.
இது குறித்த வடபழனி, சிம்ஸ் மருத்துவமனையின் தலைவர் ரவி பச்சமுத்து கூறியதாவது:
“டாக்டர் மீனாட்சிசுந்தரம் போன்ற நிபுணத்துவம் நிறைந்த நரம்பியல் நிபுணர், எங்கள் உயர் தகுதி வாய்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை குழுவை வழிநடத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். நரம்பியல் கோளாறுகள் கொண்ட நோயாளிகளுக்கு சிறந்த நரம்பியல் பராமரிப்பு சேவை களை வழங்க, கோவிட் தொற்றுநோய் பரவலின்போதுகூட, அவரது குழு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், சிகிச்சையை வெற்றிகரமாக வழங்கியது. ஒரே இடத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பரிசோதனைகள், மருத்துவ வசதிகளை உள்ளடக்கிய சிம்ஸ் மருத்துவ மனையில் பன்னாட்டு நரம்பியல் பராமரிப்பு தரங்களையும் கடைபிடிக்கிறோம்.
நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், நரம்பியல் மயக்கவியல் நிபுணர்கள், நரம்பியல் மருத்துவர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள், மறுவாழ்வு நிபுணர்கள் ஆகியோரின் ஒருங்கிணைந்த குழு எங்கள் நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத் திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது” என்றார்.