அ.தி.மு.க.வின் இன்றைய அவல நிலையைச் சுட்டிக்காட்டி கோபி, அந்தியூர் தொகுதிகளில் கழகத் தலைவர் எழுச்சி உரை!

6 Min Read

அ.தி.மு.க.வில் ‘அண்ணா’வும் இல்லை; ‘திராவிடமும்’ இல்லை; முன்னேற்றமும் இல்லை!
‘அம்மா… அம்மா…’ என்றார்கள்; அந்த அம்மையார் ‘‘மோடியா? இந்த லேடியா?’’ என்று கேட்டார்!
இவர்கள் அதையாவது கடைப்பிடித்தார்களா?

கோபி, ஏப்.13 தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் சார்பாக, செய்த சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கின்றனர். ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லாத எதிர்க்கட்சியினர் குறிப்பாக அதிமுக பொய்களையும், அவதூறுகளையும் பேசி வருவதைக் கண்டு, ‘‘அ.தி.மு.க.வில் அண்ணாவும் இல்லை; திராவிடமும் இல்லை; முன்னேற்றமும் இல்லை – அந்த அம்மையாராவது, ‘‘மோடியா? இந்த லேடியா?’’ என்று கேட்டார். அதையும் இவர்கள் கடைபிடிக்கவில்லை’’ என்பதைச் சுட்டிக்காட்டி கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், கோபி மற்றும் அந்தியூர் தொகுதிகளில் உரையாற்றினார்.

கோபிசெட்டிபாளையம் தொகுதியின்
தி.மு.. வேட்பாளர் என்.நல்லசிவம்

கோபிசெட்டிபாளையம் திராவிடர் கழகம் சார்பில், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தி.மு.க. வேட்பாளர் என்.நல்லசிவம் அவர்களை ஆதரித்து, நேற்று (12.4.2026) மாலை 5.30 மணிக்கு,  ஜியோன் திரையரங்கம் அருகில் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சென்னியப்பன் தலைமை ஏற்க, கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன், மாவட்டக் காப்பாளர் சிவலிங்கம், மாவட்டச் செயலாளர் குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் யோகானந்தம், மாவட்ட துணைத் தலைவர் பொன் முகிலன், மாவட்ட துணைச் செயலாளர் ஜி.கே.மூர்த்தி ஆகியோர் முன்னிலை ஏற்று சிறப்பு செய்தனர். முன்னதாக, கிராமப் பிரச்சாரக் குழுவின் மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் தொடக்க உரையாற்றினார். மாலை 6.50 மணிக்குக் கழகத் தலைவர் நிகழ்விடத்துக்கு வருகை தந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட கோபிசெட்டிபாளையம் தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் என்.நல்லசிவம், கழகத் தலைவர் முன்னிலையில் வாகனத்தின் மேல் நின்று, பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து உரையாற்றினார். நிறைவாக கழகத் தலைவர் 7 மணிக்கு உரையாற்றினார்.

பாட்டி முதல் பேத்தி வரை
பயன்பட்டிருக்கிறார்கள்!

அவர் தனது உரையை, ‘‘மக்கள் அளிக்கும் வரவேற்பை பார்க்கும் போது, மே 5 ஆம்‌ தேதி முதலமைச்சராக பதவி ஏற்கப்போவது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தான்’’ என்று, எடுத்த எடுப்பிலேயே மக்களிடையே பலத்த ஆரவாரத்தையும், பலத்த கைதட்டல்களையும் வெளிப்படுத்த செய்து உற்சாகமாகத் தொடர்ந்தார். மேலும் அவர், ‘‘தி.மு.க.வின் 2021 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையைச் சுட்டிக்காட்டி, ‘‘தேர்தல் அறிக்கையில் சொன்னபடி தி.மு.க. தலைமையிலான அரசு செய்திருக்கிறது. அதனால், பாட்டி முதல் பேத்தி வரை பயன்பட்டிருக்கிறார்கள்’’ என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே சொல்லிவிட்டு, ‘‘நமது முதலமைச்சர் ஏற்கெனவே சொன்னது போல், தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்காதவர்கள்கூட  ‘அய்யோ… நாம் இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே’ என்று, இன்றைக்கு வருந்துமளவுக்கு சாதனைகளைச் செய்திருக்கிறார்கள்’’ என்று முதலமைச்சரை நிர்வாகத்திற்குச் சான்றளித்துப் பேசினார்.

சொன்னதை செய்தாரா, மோடி!

தொடர்ந்து, ‘‘ஒன்றிய அரசின் முட்டுக்கட்டையால் சில தேர்தல் வாக்குறுதிகளை செய்ய முடியவில்லை’’ என்பதைத் தெளிவுபடுத்தி, வேறு வழியில்லாமல் விமர்சனம் செய்து வரும் எதிர்க்கட்சியினரைப் பார்த்து, ‘‘2014 தேர்தலில், மோடி 15 லட்சம் தருகிறோம் என்றாரே… தந்தாரா? 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்றாரே… தந்தாரா?’’ என்று கேள்விக்கணைகளைத் தொடுத்தார். மேலும் அவர், ‘‘இப்படி எண்ணற்ற சாதனைகளைச் செய்த, இந்தத் ‘திராவிட மாடல்’ அரசைத்தான் ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்கிறார்கள். இது சரியா? நியாயமா?’’ என்று மக்களிடம் நியாயம் கேட்டார். அது நியாயம் இல்லை என்பதை மக்களின் முக வெளிப்பாடு தெரிவித்தது. தொடர்ந்து, கல்விக்காக – மகளிர் மேம்பாட்டுக்காக, திராவிடர் இயக்கம் செய்த மகத்தான சாதனைகளையும் அடுத்தடுத்து எடுத்துரைத்தார்.‌ அதன்பிறகு, ‘‘இப்படியெல்லாம் சாதனைகளைச் சொல்லி பரப்புரை செய்ய முடியாத அ.தி.மு.க. மற்றும் ஒன்றிய அரசு, தேர்தல் பரப்புரையில் உளறிக் கொண்டிருக்கிறார்கள்’’ என்றும், ‘‘ஹிந்தித் திணிப்பு, கல்வி நிதி மற்றும் பேரிடர் நிதி மறுப்பு’’ என்று தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருவதையும் சுட்டிக்காட்டி, ‘‘அப்படிப்பட்ட பாசிச பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க.வைப் பார்த்து, ‘‘கட்சிப் பெயரில் அண்ணாவும் இல்லை; திராவிடமும் இல்லை; முன்னேற்றமும் இல்லை; அம்மா… அம்மா… என்றார்கள். அந்த அம்மையார், ‘‘மோடியா? இந்த லேடியா?’’ என்றார். அதையும் அவர்கள் கடைபிடிக்கவில்லை. இப்படி கட்சியை அடகு வைத்ததைப் போல், தமிழ்நாட்டையும் அடகு வைத்து விடுவார்கள்‘‘ என்றும் எச்சரித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘‘முத்தமிழ் அறிஞர் கலைஞர், தமிழ்நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும் என்ற கனவுடன் சமத்துவபுரங்களை அமைத்தார். அந்தக் கனவை ‘திராவிட மாடல்’ அரசு நிறைவேற்ற தி.மு.க. வேட்பாளர் என்.நல்லசிவம் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் வாக்களியுங்கள்’’ என்று வேண்டுகோள் விடுத்து தனது உரையை நிறைவு செய்தார்.

கோபிசெட்டிபாளையம் திராவிடர் கழகம் சார்பில், பரப்புரை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்தியூர் தொகுதிக்கு, இரவு 8.30 மணிக்கு கழகத் தலைவர் வருகை தந்தார். கழகத் தலைவருக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், பெரு முரசுகள், பறையிசை முழங்க, அதிரடியான வரவேற்பு வழங்கப்பட்டது. உரிய நேரத்திற்கு வேட்பாளர் எம்.சிவபாலன் வருகை தந்து கழகத் தலைவர் முன்னிலையில், வாகனத்தின் மீதிருந்து, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். நிறைவாக கழகத் தலைவர் உரை
யாற்றினார்.

தமிழர் தலைவர்
ஆசிரியர் உரை

அவர் தமது உரையில், அந்தியூர் எம்.எல்.ஏ. வெங்கடாசலமும் வருகை தந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, இதற்கு முன் எங்களை வெங்கடாசலம் தான் வரவேற்பார். இந்த முறை வேறு ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அவரும் கட்சிக் கட்டுப்பாடு காத்து, இங்கே வந்திருப்பது சிறப்புக்குரியது. திராவிடர் இயக்கத்தை தவிர, இந்த உணர்வை வேறு அமைப்பில் பார்க்க முடியுமா?’’ என்று,  பெருமிதத்துடன் உரத்த குரலில் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு மக்களிடமிருந்து பெருத்த ஆரவாரமும், பலத்த கைதட்டல்களுமே பதிலாக வந்தன. தொடர்ந்து அவர், ‘‘இரண்டு கூட்டணிகளுக்கு இடையில் தான் போட்டி’’ என்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியையும், தேசிய ஜனநாயக கூட்டணியையும் சுட்டிக்காட்டி பேசினார்.

மூன்று புத்தகங்களை கொண்டு வந்திருக்கிறோம்!

முன்னதாக குறைவான நேரமே பேச முடியும் என்பதை சுட்டிக்காட்டி, அதற்காகவே, ‘‘திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும், ஏன்?’’, ‘‘மீண்டும் தி.மு.க. – ஸ்டாலின் ஆட்சி தொடர வேண்டும், ஏன்?, ‘‘அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது, ஏன்?” என்ற மூன்று புத்தகங்களை கொண்டு வந்திருக்கிறோம். அதை நீங்கள் வாங்கிப் படித்து, பயன்பெற வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் பேசிய அவர், ‘‘கடந்த நூறு ஆண்டுகளில் கல்வியில் நாம் வளர்ச்சி பெற்று உள்ளோம். இதை ஒழித்துக் கட்டத்தான் ஒன்றிய அரசு முயல்கிறது. ஆனால், அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. காரணம், மக்களாகிய நீங்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்றிருக்கிறீர்கள்’’ என்று மக்களை பாராட்டி விட்டு, தொடர்ந்து திராவிட மாடல் அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். பின்னர், ‘‘எனக்கு வயது 93 என்றதும்’’ மக்கள் ‘‘ஓ….’’ வியப்பின் வசப்பட்டு, தம்மை மறந்து கைகளைத் தட்டினர். கழகத் தலைவர் தொடர்ந்தார். ‘‘இந்த வயதில் வண்டியில் வருவது; உட்காருவது; மேலே வருவது என்றெல்லாம் நான் சிரமப்படுவது எதற்காக? நாங்கள் ஏதாவது தேர்தலில் நிற்கப் போகிறோமா? ஒரு பஞ்சாயத்து தேர்தலில் கூட நிக்காதவர்கள் நாங்கள்! பிறகு ஏன் ஸ்டாலின் ஆட்சி வரவேண்டும்? என்கிறோம். எங்களுக்காக அல்ல; ஸ்டாலினுக்காக அல்ல; வேட்பாளருக்காக அல்ல; உங்களுக்காக! உங்கள் சந்ததியினருக்காக! ஆகவே, வேட்பாளர் எம்.சிவபாலன் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்’’ என்று வேண்டுகோள் விடுத்து, தனது உரையை நிறைவு செய்தார்.

பங்கேற்றோர்

நிகழ்வில் கோபிசெட்டிபாளையம் தோழர்கள் மாவட்ட மாணவர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சூர்யா, நம்பியூர் ஒன்றியச் செயலாளர் பிரசாந்த், மாவட்ட வழக்குரைஞர் அணித் தலைவர் அஜித் குமார், அறிவு செல்வி, நம்பியூர் ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் தினேஷ் குமார், பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் குப்புசாமி, சின்னசாமி, மாநில மகளிர் பாசறை துணைச் செயலாளர் திலகவதி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வெற்றிவேல், மகளிரணி மாவட்டச் செயலாளர் திவ்யா மற்றும் இதை ஒவ்வொரு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்கள், தோழர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கண்டு சிறப்பித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *