சென்னை, ஏப்.13- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது தேர்தல் பிரசாரங்களைத் தொடர்ந்து ரத்து செய்து வருவது கட்சி நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போன்ற முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் கூட விஜய் பிரசாரம் செய்ய வராதது தொண்டர்களை கவலையடையச் செய்துள்ளது.
சொத்துகளை விற்றும், கடன் வாங்கியும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், விஜய்யின் நேரடி பிரசாரம் இல்லாததால் வாக்காளர்களைச் சந்திப்பதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாகக் குமுறி வருகின்றனர்.
விஜய் தான் போட்டியிடும் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் கூட இதுவரை ஒருமுறை மட்டுமே பிரசாரம் செய்துள்ளார். மற்ற கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாகத் தளம் இறங்கி வேலை செய்யும் நிலையில், விஜய்யின் இந்த அலட்சியப் போக்கு தவெக வேட்பாளர்களைக் கடும் நெருக்கடியில் தள்ளியுள்ளது.
தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையின் அனுமதி இருந்தும், பல இடங்களில் திட்டமிடப்பட்ட பிரசாரங்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுவது கட்சியின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் என்று நிர்வாகிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

