தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்களிலும் ‘நோட்டா’வை சேர்க்க நடவடிக்கை! தேர்தல் ஆணையம் தகவல்!

1 Min Read

மதுரை, ஏப்.13- தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தல்களிலும் ‘நோட்டா’ (வாக்களிக்க விருப்பமில்லை) முறையைக் கொண்டுவர மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான வழக்கில், தமிழ்நாடு அரசு 6 மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல்களில் நோட்டா

தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களைப் போலவே, உள்ளாட்சித் தேர்தல்களிலும் வாக்காளர்களுக்கு ‘நோட்டா’ விருப்பத்தைப் பயன்படுத்தும் அடிப்படை உரிமையை வழங்க வேண்டும். இது குறித்து மாநில அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இதற்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறப்பட்டதாவது:

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள், 2023இல் உள்ளதைப் போலவே, ஊரக உள்ளாட்சித் தேர்தல்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குச் சீட்டுகளில் ‘நோட்டா’வைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக தமிழ்நாடு ஊராட்சிகள் விதிகள் (1995)இல் திருத்தங்களை மேற்கொள்ளக் கோரி, கடந்த 2024 ஜூன் 7ஆம் தேதி தமிழ்நாடு அரசுக்குப் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அரசு இந்தத் திருத்தங்களை மேற்கொண்டவுடன், ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் நோட்டா முறை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும்.

தேர்தல் ஆணையத்தின் இந்தப் பதிலைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இந்த விவகாரத்தை 6 மாத காலத்திற்குள் பரிசீலித்து, உரிய அரசாணையைப் பிறப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இந்த முடிவின் மூலம், இனி வரும் காலங்களில் கிராமப்புற ஊராட்சித் தேர்தல்களிலும் வேட்பாளர்கள் எவரையும் பிடிக்கவில்லை என்றால், வாக்காளர்கள் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்யும் ‘நோட்டா’ வசதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *