சென்னை, ஏப்.13- மனிதநேயமற்ற முறையில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க. கூட்டணியை– மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்று மயிலையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தொகுதி வேட்பாளர் மயிலை த.வேலுவை ஆதரித்து பேசுகையில் மார்க்சிஸ்ட் தேசிய பொதுச்செயலர் எம்.ஏ. பேபி குறிப்பிட்டார்
சென்னை மயிலாப்பூர் மந்தைவெளியில் 11.4.2026 அன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மயிலாப்பூர் தொகுதி தி.மு.கழக வேட்பாளர் மயிலை த.வேலுவுக்கு வாக்கு சேகரித்து எம்.ஏ.பேபி பேசியதாவது:
இந்திய மாநிலங்களின் கூட்டமைப்பு என்கிறது அரசியலமைப்புச் சட்டம். ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு மாநில உரிமைகளை பறிக்கிறது. மாநிலங்கள் அற்ற தேசத்தை உருவாக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது.
யூனியன் பிரதேசங்களை மாநிலங்களாக தரம் உயர்த்தும் நிலை மாறி, மாநிலங்களை யூனியன் பிரதேசங்களாக பா.ஜ.க. மாற்றுகிறது. இதே நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் தமிழ்நாட்டைக்கூட மூன்றாகப் பிரிக்க பா.ஜ.க. முயற்சிக்கும்.
ஆளுநர்கள் அராஜகம்!
தற்போதைய ஆளுநர்கள் ஒன்றிய அரசின் முகவர்களாக செயல்பட்டு, மாநிலங்களின் ஜனநாயக உரிமைகளை முடக்குகின்றனர். இங்கிலாந்து கால ஆளுநர்கள் போல அராஜகமாக செயல்படுகின்றனர்.
மயிலாப்பூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடுகிறவர் ஏற்கெனவே ஆளுநராக இருந்தவர். மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு எதிராக செயல்பட்டவர்.
அரசியலமைப்பு சட்டப்பதவி வகித்தவர்கள் மீண்டும் நாடாளு மன்ற, சட்டப் பேரவை உறுப்பினராக போட்டியிடுவதில்லை. இதற்கு மாறாக அவர் போட்டியிடுவது மாண்பற்ற செயல்.
தமிழ்நாடு வெள்ள நிவாரணமாக ரூ.37,000 கோடியை கோரியபோது, நிதியை ஒதுக்காமல் ஒன்றிய அரசு வஞ்சித்தது. இதேபோன்ற நிலைதான் கேரளமும் எதிர்கொள்கிறது.
தமிழ்நாட்டின் கல்வித் துறைக்கு ரூ.3,548 கோடி, ‘ஜல் ஜீவன்’ திட்டத்துக்கு ரூ.3,112 கோடி வழங்காமல் வஞ்சிக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களை நிதி ஒதுக்காமல் மனிதநேயமற்ற வகையில் வஞ்சிப்பது தொடர்கிறது.
தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கிய நிதியை விட சமஸ்கிருதத்துக்கு 23 மடங்கு அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் அண்ணா மாநில உரிமைகளுக்காக போராடியவர். அவர் பெயரை கொண்ட அதிமுக, மாநில உரிமைகளுக்கு எதிரான பா.ஜ.க. உடன் சந்தர்ப்பவாத கூட்டணி வைத்துள்ளது. அ.தி.மு.க. அணியை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில், மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், வேட்பாளர் த.வேலு, மார்க்சிஸ்ட் தென்சென்னை மாவட்டச் செயலர் ஆர்.வேல் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

