“2031-இல் தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பாருங்கள்“
தனது பிரச்சாரம் குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
“வேதனையை மட்டும் தரும் பா.ஜ.க மற்றும் துரோகங்களை மட்டுமே செய்யும் அ.தி.மு.க-வை வீழ்த்தி, மண்ணையும் மக்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதே திராவிட மாடல் ஆட்சி. தொடர்ந்து பத்து ஆண்டுகள் திமுக ஆட்சி செய்தால், 2031-க்குள் தமிழ்நாடு அடைந்திருக்கும் அபரிமிதமான வளர்ச்சியை உலகிற்கு காட்டுவோம்.”
இவ்வாறு அவர் தனது பதிவில் குறிப்பிட் டுள்ளார். இந்தத் தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் புதுக்கோட்டை மாவட்ட திமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
அரசியல்னா பேசனும்
விஜய்–க்கு அரசியல் அனுபவம் கிடையாது
– ப. சிதம்பரம்
சென்னை, ஏப்.12 விஜய்க்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆதரவு இருக்கிறது. நான் வாழ்த்துகிறேன். ஆனால் ஆட்சி செய்ய வேண்டுமல்லவா?. ஆட்சி செய்வது வேற. சினிமாவில் நடிப்பது வேற. எந்த திட்டத்தை செயல்படுத்தினால் மக்களுக்கு பயன் கிடைக்கும். எந்த வகையில் பணத்தை செலவழித்தால் மக்களுக்கு பலன் கிடைக்கும். மக்களுக்கு வளர்ச்சி கிடைக்கும். சாலை திட்டம், பள்ளிக் கூடம் திட்டம், மருத்துவமனை திட்டம் அனைத்தையும் நுணுக்கமாக பார்த்துதான் ஆட்சி செய்யனும்.
ஆட்சி செய்வது எளிது அல்லதான். நான் 20 ஆண்டுகளாக ஆட்சி செய்திருக்கிறேன். அது எளிதான காரியம் அல்ல. ஆட்சி செய்வதில் ரீ-டேக் என்பதெல்லாம் கிடையாது. சினிமாவில் நடிக்கும் ஒரு காட்சி சரியில்லை என்றால், டைரக்டர் இன்னொரு முறை நடிக்க சொல்வாரு. ஆட்சியில் அவ்வாறு செய்ய முடியாது. ஒரு முடிவு எடுத்தா, முடிவுதான். அந்த அனுபவம் மு.க. ஸ்டாலினுக்கு வந்திருக்கிறது. மேயராக இருந்தாரு, அமைச்சராக இருந்தாரு, துணை முதலமைச்சர் இருந்தாரு. அய்ந்து ஆண்டுகள் சிறப்பான ஆட்சி நடத்தியிருக்காரு.
இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.
நானா துரோகி..?
ரூ.5000 கோடி மதிப்பில் 2 தொழிற்சாலை கட்டி வருகிறார் எடப்பாடி!
செங்கோட்டையன் தாக்கு
ஈரோடு, ஏப். 12 ஈரோட்டில் பிரசாரத்தில் ஈடுபட்ட செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறார்.
ஈரோடு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட த.வெ.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், “நடிகர் விஜய்யின் ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராகி, சுமார் ரூ.5,000 கோடி சம்பாதிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார். அந்த முயற்சியை நான் முறியடித்ததால் என் மீது அவருக்கு கோபம் உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் பதவியையும், கட்சியின் பொதுச்செயலாளர் பதவியையும் விட்டுக் கொடுத்ததே நான்தான். எனக்குப் பின் கட்சிக்கு வந்து பதவிகளை அனுபவித்துவிட்டு, உழைத்தவர்களையே இப்போது நீக்கி வருகிறார்.
எனது வேட்புமனுவைத் தள்ளுபடி செய்யச் சொல்லும் அளவுக்கு அவர் இறங்கிச் சென்றிருப்பது, அவரது தோல்வி பயத்தைக் காட்டுகிறது. ஏற்கெனவே 10 முறை தோல்வியைக் கண்ட பழனிசாமி என்பார்கள் அவரை. எடப்பாடி பழனிசாமி நாட்டை ஒரு கம்பெனி போல நடத்தப் பார்க்கிறார். அவரின் மகனும், மச்சானும் பதவிக்கு வரத் துடிக்கிறார்கள். இது மக்கள் நலனுக்கான இயக்கம் அல்ல, ஒரு குடும்ப கம்பெனி.
பவானி ஆற்றின் அருகே ரூ.2,000 கோடியிலும், மேட்டூர் அருகே ரூ.3,000 கோடியிலும் தொழிற்சாலை கட்டி வருகிறார். இதனால் ஆற்றுத் தண்ணீர் மாசடைந்து விவசாயிகளும் மக்களும் பாதிக்கப்படப் போகிறார்கள். முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்த எனக்கா துரோகி பட்டம்? அவருக்கு அரசியல் களம் தெரியவில்லை என்றார்.
சிறுமி திருமணம்
வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
திருநெல்வேலி, ஏப்.11 15 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி ‘போக்சோ’ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருநெல்வேலி அருகே சிவந்திபட்டியைச் சேர்ந்தவர் ஆனந்த் 25. இவர் 2021இல் 11ஆம் வகுப்பு படித்த 15 வயது சிறுமியை காதலித்தார். அவரை கடத்தி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சிறுமிக்கு தாலி கட்டிய ஒளிப்படத்தை சமூக வலைதளங்களில் ஆனந்த் வெளியிட்டார். ஆனந்தின் தந்தை அந்தோணி 65, தாய் மாரியம்மாள் 55, உறவினர் பால்ராஜ் 25, இதற்கு உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. ஆனந்த்க்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.20,000 அபராதம் விதித்து நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பளித்தார். அந்தோணி, மாரியம்மாள், பால்ராஜை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

