கழகத் தலைவருக்கு குறிஞ்சி மண்ணில் ‘போதி விருட்சம் தேசிய விருது’ இரா.முல்லைக்கோ, பெங்களூரு

7 Min Read

முத்துக்குளிக்கும் வங்கப் பெருங்கடலும், அழகிய மேலைத் தொடர் மலைகளை நித்தம் மேலைக் கடலாய் முத்தமிடும் அரபிக் கடலும், கீழைத் திசையின் இந்தியப் பெருங்கடலும் முத்தமிழ் மணம் பரப்பி திருவள்ளுவரின் அடிப்பாதங்களில் இருந்து கட்டழகுத் தமிழ்நாடு விரிந்து இந்தியத் தீபகற்பம் எழுச்சி பெறுகிறது.

அன்புத் தமிழ் மண்ணை அரவணைக்கும் மலைசூழ் கருநாடகம் இணைந்து, பிணைந்து, நேசக்கரம் கோர்த்து, நித்திலத்தில் காட்சி மழை பொழிகிறது – பாசமிகு காவிரியால்! நயன்மிகு நாத்திக தேகம், புன்னகை பூக்கும் புத்தப் பெருமகனின் பொலிவுடன் விளங்கிடும் பெங்களூரு மரம்சூழ் நெடும்சாலையின் மேற்குத் திசையில் அல்ல சந்திரா மலையில் – சமத்துவ நெறி பரப்பிய சட்டமேதை சமூகநீதி விழுமியங்களை நிலை நிறுத்திய மேதை அண்ணல் அம்பேத்கர் பெயர் தாங்கி “ஸ்பூர்த்திதாமா” (Spoorthi Dhama) எனும் ஓர் அரசு சாரா பேரமைப்பு செயல்பட்டு வருகின்றது. அறிவியல் மேதையின் நூற்றாண்டாம் 1991ஆம் ஆண்டு சுமார் 40 ஏக்கர் மலையும், மலைசார்ந்த குறிஞ்சி நிலப்பரப்பில் நாத்திகப் பெருமகனார் புத்தர் மற்றும் பாபா சாகேப் அம்பேத்கரின் அருஞ் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட “ஸ்பூர்த்தி தாமா”, நமது அரசியலமைப்பின் அடிப்படையில் விழுமியங்களால் வேரூன்றியிருக்கும் சமூக சமுதாய செயல்பாடுகளை முன்நிறுத்தி ஒருங்கே மானுட மேன்மையை குறிக்கோளாய்க் கொண்டு செயல்பட்டு வருகிறது.

“மாணவ குலம் தானொண்டே வளம்” (Manava Kulam Taanonde Valam) கன்னட மொழிக் கவிஞர்களில் ஒருவரான ஆதிகவி பரம்பரின் எக் காலத்திற்குமான பொன் கவி வரிகளாகும். இதன் பொருள்: “மனிதகுலம் அனைத்தும் ஒன்றே” என்பதாகும்.

இதுவே “ஸ்பூர்த்திதாமா”வின் மூல நிலைக் கொள்கையாகும்.

இதனைத் திருவள்ளுவப் பெருந்தகை இரு வரிகளில் எழுச்சி நடையால் பதிவிட்டுள்ளார்.

திராவிடர் கழகம்

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்” (குறள்)

1991இல் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் பெருவிழாவில் அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் அன்புமணி, அறிவுமணி, ஆசிரியர் தலைவர் அய்யா கி.வீரமணி அவர்களை அழைத்து ஸ்பூர்த்தி தாமா அமைப்பினர் சிறப்பு செய்துள்ளனர்.

“என் பாதை!

சுயமரியாதைப் பாதை!

தமிழின நலம் காக்கும் பாதை!

தமிழ் மொழி காக்கும் பாதை!

பெரியார் பாதை!

அண்ணா கண்ட பாதை!

அற வழிப் பாதை!

மக்களின் நெறிப் பாதை!

பாடையே தயார் என்று பயமுறுத்தினாலும்

அந்தப் பாதையிலிருந்து மாற மாட்டேன்”

என பாங்காய் முழக்கமிட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பெருங்குரலை பறைசாற்றும் ஆசிரியர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியாரின் அறிவார்ந்த தத்துவங்களை உலக மயமாக்கிட அனுதினமும் சுற்றிச் சுழன்று வருகின்றார்.

கண்ணியவான்களின் அறிவுக் கோட்டமாய், காலக் கண்ணி வெடியாய் விளங்குகின்ற ஸ்பூர்த்திதாமா நிறுவனத்தின் முகப்பில் அமைந்துள்ள சி.பி.எஸ்.இ. உயர்நிலைப் பள்ளி செம்மாந்த எழுச்சியுடன் அடித்தட்டு மக்களின் 800 மாணவச் செல்வங்கள் கல்வி பயிலுகின்றனர்.

திராவிடர் கழகம்

“உங்களுக்கு மனநிறைவு, தெளிவு, மன அமைதி தரக்கூடியது எது என நீங்கள் கண்டு உணருங்கள். அதுவே நீங்கள் பின்பற்ற வேண்டிய பாதையாகும்” புத்த பெருமகனாரின் அமைதிப் பாதையில் அறிவுப் பள்ளி நடைபெறுகிறது.

அடுத்த தென்புற வாயில் வழியாக நிறுவனத்தின் முகப்பு அமைந்துள்ளது. எளிமையான ஓர் அமைதிக் கூடம் காண முடிகிறது. மய்யப் பகுதியின் அரங்கில் அண்ணல் அம்பேத்கர் தலைமையில் மகாசபை போன்று அசோகச் சக்கரவர்த்தி, பசவன்னர், நல்லாடி கிருஷ்ணசாமி உடையார், நாராயண குரு, இரமாபாய், அம்பேத்கர், சாவித்திரி பாய் பூலே, ஜோதிராவ் பூலே, குகுல் ரெங்காராவ், ஆர்.கோபாலசாமி (அய்யர்) மற்றும் தந்தை பெரியார் போன்ற நாத்திக மணம் பரப்பும் மேதைகளின் வண்ணமிகு ஒளிப்படங்கள் அரங்கை எழுச்சியூட்டுகின்றன.

“மக்களிடம் செல். மக்களோடு மக்களாக சேர்ந்து வாழ். மக்களுக்காகப் பணியாற்று” என்ற அறிஞர் அண்ணாவின் கூற்றுப்படி மக்களுக்கான கூடமாய் வரவேற்பு வசந்த வாசல் வரவேற்கிறது. எதிர் திசையில் ஆய்வுக் கூடமாய் சிற்றரங்கம், அதன் வடதிசையில் எழிலார்ந்த புத்தகங்கள் நிறைந்த அறிவின் தாயகமாம் நூலகம். அருகிலேயே நிர்வாகிகளின் ஆய்வுக் கூடம். வளர்ந்து போகின்றது அலுவலக அமைப்பகம். ஒரு சிறிய உணவகம். மர நிழலில் உணவு அருந்தும் முறை.

“புரியாதவர்களுக்குத் தான் ஆயிரம் விளக்கம் சொல்ல வேண்டும். புரிந்தவர்களுக்கு அழகான ஒரு புன்னகையே போதுமானது” என்று பேரழகு மிக்க புத்தர் பெருமகன் சிலை வழியில் சிறு பாதையின் பள்ளத்தில் வியக்கும் அளவில் காட்சியளிக்கின்றார். மழைக் காலங்களில் சிற்றோடையாய் வெள்ளம் பெருக்கெடுத்து அமைதியையும் அன்பையும் போதிக்கும் புத்தரைக் கடந்துதான் பள்ளத்திற்கு செல்லும் நிலையில் அமைப்பு.

திராவிடர் கழகம்

அன்பின் வெளிப்பாடாய் அன்னோர்கள் 600 பேருக்கு மேல் அமரும் பேரரங்கம் அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே குறிஞ்சி மலர்கள் பூத்த அலுவலக அமைப்பு நிறைந்த கட்டடம். வழி நெடுகிலும் அமர்ந்து ஓய்வு பெற இயற்கை அமைப்பு. இடைஇடையே வளைவு திருப்பங்களில் பதிக்கப்பட்டுக் கண்கவர் கலைச் சிற்பங்கள். குறிஞ்சி மலைப் பரப்பு முழுமைக்கும், தானே வளர்ந்த சிறிய பெரிய மரங்கள் மக்களை வரவேற்கின்றன. வான் பரப்பில் வெண் மேகப் போர்வைப் படலம்.

மாணிக்கப் பரலோடு கலைக்காடு

நின்று நிலைத்துள்ள மரக்காடு

ஆனிப் பொன்முத்து நிறை தேன்கூடு

நன்னாடு, நன்மக்கள் வாழ்நாடு

நாத்திகர் நலம்காக்கும் தாயான நாடு என்றும்

நரம்போடுக் கலந்திருக்கும் புத்த நெறி உணர்வோடு

உறவாடும் புன்னகையின் பூக்காடு

புகழ் மணக்கும் பூக்காட்டின் தென் கிழக்கு மூலையில் பொன் வண்ண மேனிதாங்கி அறிவாலயத்தில் காட்சிப் பீடம் அமைக்கப்பட்டுள்ளது.

மாட்சிமையின் சுடர் ஒளிவிளக்கு

மலர்ந்த மாணிக்க அழகு முகம்

காணக் கண் வேண்டும். என்னே காட்சி! கருங்குயில்களும், பச்சைக்கிளிகளும் செம்மாந்து குரல் எழுப்புகின்றன. என்னே அழகு! பேரழகு!!

ஸநாதனிகள் சதிகளை முறியடிக்கும் சட்டமேதை அண்ணல் அம்பேத்கருக்கு பல கோடி மதிப்பில் எழுச்சி எழிலரங்கம் கட்டிட நிர்வாகம் திட்டமிட்டு வருகின்றது.

சுற்றுச்சூழலுக்கும், விண்ணளாவிய மரங்களுக்கும் எவ்வித சேதமும் இழப்பும் இல்லாமல் வனப்புமிகு தோற்ற அமைப்பு.

திராவிடர் கழகம்

பல ஆண்டுகளாய் வளர்ந்து ஆலாய் தழைத்துள்ள பேரமைப்பினை 1995ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசின் துணைத் தலைவர் மாட்சிமைக்குரிய கே.ஆர்.நாராயணன் அவர்கள் இப்புன்னகை தேசத்தினைத் திறந்து வைத்துப் பெருமை சேர்த்துள்ளார்.

எண்ணிலா மானுட சமத்துவமும், சமநீதியையும் காத்திட அரும்பாடுபடும் அறிஞர் பெருமக்களுக்கும், உழைக்கும் பாட்டாளிப் பெருமக்களுக்கும் அண்ணலின் பிறந்த திருநாளாம் ஏப்ரல் 14இல் பெருமைமிகு விருது வழங்கிப் புரட்சியும் எழுச்சியும் ஒன்று கூட்டி உணர்ச்சிப் பெரு மழையை மண்ணில் விதைக்கின்றது ஸ்பர்த்திதாமா எனும் பேரமைப்பு.

ஸ்பூர்த்திதாமா அமைப்பின் சார்பில் 2009ஆம் ஆண்டு முதல் கீழ்க்காணும் அறிவுப் பெருநிதிகளுக்கு போதி விருட்சம் தேசிய விருதும், ரூ. ஒரு லட்சம் தொகையும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

2009 – ஆச்சார்யா புத்த ராகிஸ்தா தேரோ

2010 – சந்திரபாகன் பிரசாத்

2011 – பகவான்தாஸ்

2012 – வசந்த மூன்

2013 – தேவநூரு மகாதேவா

2014 – மிலான் காம்பிளே

2015 – பேரா. பி.கிருஷ்ணப்பா

2016 – ரோகித் வேமுலா

2017 – காபர் லிகர்யன்

2018 – கே.எஸ்.புதுன்நகி

2019  ஆனந்த் டெல்டும்டே

2020 – (கரோனா நோய்தொற்று காரணமாக நிகழ்ச்சி நடைபெறவில்லை)

2021 – பி.சாய் நாத்

2022 – டாக்டர் ஆர்.எஸ்.பிரவீன்குமார்

2023 – பேரா. இரவிவர்ம குமார்

2024 – எஸ்.ஆர்.ஹரிமதி

2025 – பேரா. வேலையன் லாடின்குசு

ஸ்பூர்த்திதாமா அமைப்பின் நிர்வாகத் தலைவர் மரிசாமி, செயல் தலைவர் இந்துதார் மற்றும் அறிஞர் பெருமக்களின் நன்முயற்சியில் நனிசிறந்து விளங்கிடும் அமைப்பின் சார்பில் ஏப்ரல் 14ஆம் நாளில் கலை மிகுந்த மக்களின் பெரும் கொண்டாட்டங்களுக்கு இடையே நயன்மிகு நாத்திகமாமணி, மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு எனும் பெரியார் பெரும் பிரகடனத்துடன் வலம் வரும் ‘விடுதலை’ இதழ் ஆசிரியர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு உயர் தேசிய போதி விருட்சம் விருதினை வழங்கிச் சிறப்பிக்கவுள்ளனர். தகைசால் தமிழர் விருது பெற்ற பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தருக்கு பொன் மகுடத்தில் வைரக்கல் பதித்து முடிசூட்டும் செயலாகும்.

“மண்ணிலே ஈரமுண்டு

முள் காட்டில் பூவுமுண்டு

நம்பினால் நாளையுண்டு

எங்கே போனாலும் மாந்தர்க்கு

மானமும் அறிவும் தன்னோடு” – என்கிற உன்னதத் தத்துவத்தோடு அறிவுப் பெருநிதி புத்தர், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர்களின் தனித்துவமிக்க மாந்த நேயக் கொள்கையோடு அகிலமெங்கும் அகவை
93-லும் கொண்டு செல்லும் மாவேந்தர், சுற்றி நிற்கும் ஜாதி மதச் சடங்குகளைப் பற்றி எரியும் தீக்குள் போட்டு, அறிவென்னும் நிலத்தை ஆழமாய் உழுது, மாந்தகுல வெற்றியை நோக்கி விரைவாய் நடக்கும், வாழ்நாள் சாதனையாளர், தகைசால் தமிழர் விருது பெற்ற கழகத் தலைவர் “போதி விருட்சம்” என்னும் தேசிய விருது பெரும் திருநாளில் காணக் கழகத் தோழர்களே, மாந்த நேயமிக்கோரே அணி திரண்டு வாரீர்! வாரீர்!!

வரலாறு தெரிய வேண்டும் வரலாறு தெரிந்தால் தான்

வாழ்ந்தது தெரியும். வாழ்ந்தது தெரிந்தால்தான்

இருந்தது தெரியும். இருந்தது தெரிந்தால்தான்

இருப்பது தெரியும். இருப்பது தெரிந்தால்தான்

நம் இனம் இழந்தது தெரியும்

இழந்தது தெரிந்தால்தான்

அதற்கான காரணம் புரியும்

காரணம் புரிந்தால் நம் கடமை புலப்படும்

வாளாண்ட சமுதாயத்தை

புரி நூலாண்ட கதை! நூறு கதை

மீண்ட பெரும் கதை!

காவியம் படைக்கும் கழகத் தலைவருக்கு ‘போதி விருட்சம்’ பெருவிழா காண வாரீர்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *