பாபு ஜெகஜீவன்ராம் பிறந்தநாள் ( ஏப்ரல் -5)
வழக்குரைஞர்
சு.குமாரதேவன்
இந்திய விடுதலை மற்றும் சமுக நீதி வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தவர் “பாபுஜி “என்று ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட பாபுஜெகஜீவன்ராம் ஆவார்.
இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலங்கள் வரிசையில் பீகார் மாநிலம் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. அரசியல் தெளிவின்மை,ஜாதிப் பாகுபாடு, கல்வியறியின்மை போன்றவற்றிலும் முன்னிலையில் இருக்கும் இந்த மாநிலத்தில் தான் போஜ்பூர் மாவட்டத்தில் சந்த்துவா கிராமத்தில் சமார் என்று சொல்லக்கூடிய பட்டியல் சமூகத்தில் பிறந்தவர் பாபு ஜெகஜீவன்ராம்.
இவரது தந்தை சோபிராம் இந்தோ – ஆங்கிலப் படையில் பெஷாவரில் ஒரு சிப்பாயாக பணிபுரிந்தார், தனது ஆறாம் வயதில் தந்தை சோபிராம் எதிர்பாராத விதமாக மறைந்ததிலிருந்து தாயார் வசந்தி தேவியின் நேரடி மேற்பார்வையில் வளர்ந்த பாபு ஜெகஜீவன்ராம் தமது தந்தை இறந்த ஆண்டே துவக்கப் பள்ளியில் சேர்ந்து பின்பு 1927-இல் மெட்ரிக்குலேசன் தேர்வில் தேர்ச்சிப் பெற்றார்.
பள்ளிக்காலத்தில் தீண்டாமையைக் கடைப் பிடிப்பதில் பள்ளிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப் படவில்லை. மாறாக ஆரம்பக் கல்வியுடனே ஜாதியை நிலைநிறுத்தும் சில செயல்களும் ஊக்குவிக்கப்பட்டன. ஆசிரியர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களாக இருந்தனர்.
ஜாதிக்கொரு தண்ணீர்ப் பானையை மாணவர்கள் குடிப்பதற்கென்று வைத்திருந்தனர். இக்கொடுமை கண்டு அமைதியாக இருக்க விரும்பாத பள்ளி மாணவரான ஜெகஜீவன்ராம் அனைவருக்கும் ஒரே பானை வேண்டுமென்று மாணவர்களைத் திரட்டி தீண்டாமைப் பானையை உடைத்துப் போராடி வெற்றி பெற்றார். பானை உடைப்பில் வெற்றிகண்ட ஜெகஜீவன்ராம், ஜாதிக் கட்டுமான உடைப்பில் வெற்றிபெற நீண்ட நெடிய பயணம் மேற்கொண்டார்.
கல்லூரியிலும் ஜாதி வேற்றுமை பாபுஜியை விடாமல் தூரத்தியது. தீவிர சனாதனவாதியான “மண்ணுருண்டை ” மாளவியா தொடங்கிய காசி இந்துப் பல்கலைக்கழத்தில் பல்வேறு ஜாதிய கொடுமைகளை படிக்கும் போது அனுபவித்தார்.உணவு விடுதியில் அவர் சாப்பிட்ட தட்டுக்களை கழுவுவதற்குப் பணியாளர்கள் மறுத்தார்கள்.முடி திருத்துவதற்கு சவரத் தொழிலாளர்கள் மறுத் தார்கள் ஆனாலும் இதை எதிர்த்துக் கொண்டே காசி இந்துப் பல்கலைக்கழத்தில் இளம் அறிவியல் பட்டபடிப்பு படித்து முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றார்.
ஜாதிக் கொடுமைகளை எதிர்த்து அவர் உள்ளத்தில் எரிந்து கொண்டியிருந்த தீ ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தேர்ந்த புலமைப் பெற்று மிகப் பெரிய வாசிப்பாளாராக மாற்ற உதவியது.
படிக்கும் போது காசி இந்துப் பல்கலைக்கழத்தில் ஜாதிக் கொடுமையினை அனுபவித்த பாபுஜி பின்னாளில், இரயில்வே துறை, பாதுகாப்புத் துறை மற்றும் இராணுவத்துறை அமைச்சராக இருந்த போது 1978 ஆம் ஆண்டு மேற்படி பல்கலை கழத்தில் மேனாள் உத்தரப் பிரதேச முதலமைச்சர் சம்பூரணானந்தா சிலையினை திறந்து வைத்தார்.பார்ப்பன மாணவர்கள் அதை எதிர்த்து கூச்ச லிட்டு ஆர்ப்பாட்டம் செய்ததோடல்லாமல் பாபுஜி அங்கிருந்து சென்றவுடன் கங்கை நீரை கொண்டு “தீட்டு” கழித்தார்கள் .
இன்றும் அந்தப் பல்கலைக்கழத்தில் மவுன சாட்சியாக சம்பூரணானந்தா சிலையும், அந்த சிலையின் கீழ் பாபுஜியின் பெயர் பொறித்த கல்வெட்டும் இருக்கிறது.
மேற்படி சம்பவத்தினை மயிலை மங்கொல் லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் வேதனை யோடு பாபுஜி சொன்னார்.
இந்தச் சிலை விவகாரத்தினை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களும், திரா விடர் கழகத் தொண்டர்களும் பல்வேறு மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் மக்களிடம் எடுத்து விளக்கினார்கள். அதிலும் குறிப்பாக ஆசிரியர் கி.வீரமணி சமூகநீதி ஏன் தேவைப் படுகிறது என்பதை வலியுறுத்தி மேற்படி சம்பவத் தினை அவருக்கே உரித்தன பாணியில் சொல்வார்.
பாபுஜி, 1931 ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்பிற்காக காந்தியார் பாடுபடுகிறார் என்ற எண்ணம் கொண்டு காங்கிரசில் இணைந்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் பலமுறை சிறை சென்றுள்ளார்.
பீகார் மாநிலத்தில் உள்ள “சசாரம்” என்ற தொகுதியில் 1952ஆம் ஆண்டு நடந்த முதல் நாடாளுமன்றத் தேர்தல் முதல் அவர் இறுதியாகப் போட்டியிட்ட 1984ஆம் ஆண்டு நடந்த தேர்தல் வரை 8-முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றார்.
1936ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றம் தொடங்கி பாபுஜி மறையும் வரை 50 ஆண்டுகள் சட்டமன்ற. நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து அரசியல் வாழ்வில் பிரகாசித்தார்.
1946-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நேரு தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தில் இளம் வயது அமைச்சராக (38 வயது) தொழிலாளர் துறைக்கு கேபினெட் அமைச்சராக பொறுப் பேற்றார். அது முதல் 1979-ஆம் ஆண்டு வரை ஜவகர்ஹலால் நேரு, இந்திரா, மொரஜிதேசாய், மற்றும் சரண்சிங் ஆகியோர் பிரதமராக இருந்த காலத்தில் தொழிலாளர் துறை, தகவல் தொடர்புத் துறை, போக்குவரத்துத் துறை, இரயில்வே துறை, வேலைவாய்ப்பு,மறுவாழ்வுத் துறை, உணவுத் துறை, வேளாண்மைத் துறை, நீர்பாசனம் துறை ஆகிய துறைகளில் பல்வேறு காலகட்டங்களில் பொறுப்பு வகித்தார்.
பாபுஜி வேளாண் அமைச்சராக இருந்தபோது தான், “பசுமைப் புரட்சி” என்கின்ற திட்டத்தினைக் கொண்டு வந்து வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்.
இரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது பல்வேறு புதிய இரயில்கள் மற்றும் இரயில் பாதைகள் உருவாக்கி, பட்டியலின, பட்டியல் பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்கள் இரயில்வே துறையில் பணியாற்ற பெரிதும் காரணமாக இருந்தார்.
தொலைத்தொடர்பு தொழிலாளர், செய்தித் தொடர்புத் துறை மற்றும் போக்குவரத்துத்துறை ஆகியவற்றில் அமைச்சராக பணிபுரிந்த போது சிறு, சிறு கிராமங்ளுக்கு அஞ்சல் வசதி, ஏற்படுத்திக் கொடுத்தார்.
பாபுஜி இராணுவ அமைச்சராக இருந்த போது 1971-ஆம் ஆண்டு பாகிஸ்தான் – இந்தியா போர் நடந்தது அதனை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்ததில் பெரும் பங்கு ஆற்றினார். வேலைவாய்ப்புக்கான கடுமையான விதிகளைத் தளர்த்தி வாய்ப்பு மறுக்கப்பட்ட பெரும்பான்மை சமூகங்கள் அரசு வேலையில் அமர பெரும் காரணமாக இருந்தார்.
காமராஜர் 1963-ஆம் ஆண்டு கொண்டு வந்த “கே” பிளான் படி நேரு அமைச்சரவையிருந்து பதவி விலகிய பாபுஜி , பின்பு இந்திரா அம்மையார் ஆட்சிக்காலத்தில் அமைச்சராகி பல்வேறு நலத்திட்டங்களை ஆதிக்கச் சிந்தனை கொண்ட அரசு அதிகாரிகள் மூலம் நிறைவேற்றினார்.
நெருக்கடி நிலைக் காலத்தில் சில நிர்ப்பந் தங்களால் இந்திரா அம்மையாரை ஆதரித்த பாபுஜி பின்பு 1977-ஆம் ஆண்டு ஜனதா கட்சியில் இணைந்தார்.
பாதுகாப்பு மற்றும் இராணுவ அமைச்சராக பணியாற்றிய அவர், பின்பு துணைப் பிரதமராக 24.1.1971 முதல் 28.7.1979 வரை பதவி வகித்தார்.
தந்தை பெரியாருடனும், திராவிடர் இயக்கத் தலைவர்களுடனும் குறிப்பாக டாக்டர் கலைஞர் உடன் நெருக்கமான கொள்கை உறவு கொண் டிருந்த பாபுஜி தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச் சிகளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கலந்து கொள்வார்.
சென்னையில் தந்தை பெரியார் இருந்தால் அவரை பார்த்து விட்டுச் செல்வது அவரது வழக்கமாகும்.
தமிழ்நாட்டு மக்கள் டாக்டர்.அம்பேத்கர், காந்தி, நேரு, இந்திரா, நேதாஜி போன்றோர் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்தது போலவே பாபு ஜெகஜீவன்ராம் பெயரையும் சூட்டி மகிழ்ந்தார்கள்.
பல்வேறு சாலைகள், குடியிருப்புகள், ஆகிய வற்றிற்கு பாபு ஜெகஜீவன்ராம் பெயர் சூட்டப் பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சராக டாக்டர் கலைஞர் இருந்தபோது 28.06.1990 அன்று சென்னை கடற் கரை சாலை – உழைப்பாளர் சிலைக்கு எதிரே யுள்ள எழிலகத்தின் முன்பு பாபு ஜெகஜீவன்ராம் சிலையினை அமைத்து ஆ.வெங்கட்ராமன் மூலம் திறக்க வைத்தார். பெல்ஸ் சாலை என்ற சாலைக்கு பாபு ஜெகஜீவன்ராம் சாலையென்று பெயர் சூட்டி பாபுஜிக்குப் பெருமை சேர்த்தார்.
இந்திய அரசியல் வானில் காந்தி, இராஜேந்திர பிரசாத் ஆகியோருக்கு அடுத்தப் படியாக மக்களால் “பாபுஜி” என்று அன்புடன் அழைக்கப் பட்டவர் பாபு ஜெகஜீவன்ராம் ஆவார்.
இடஒதுக்கீட்டில் பொருளாதார அடிப்படை கூடாது என்பதையும், சமுக அடிப்படையை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதையும் மிகத் தெளிவாகத் தீவிரமாக வலியுறுத்திய பாபுஜி அதனை இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற செய்வதற்கு பாடுப்பட்டவர் என்பதை மறக்கலாகாது.
வாழ்க பாபு ஜெகஜீவன்ராம்.