கோவையில் கழகத் தலைவர் ஆசிரியர் பேட்டி!

4 Min Read

தமிழ்நாடெங்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியே வெல்லும்!
அரசியல் ஆருடங்கள், ஆலமரத்து ஜோதிடங்கள் தோற்கும்!
பிரதமர் மோடி தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் இரகசியம் இதுதான்!

கோவை, ஏப்.12  தமிழ்நாடெங்கும் பிரச்சாரம் செய்து வருகிறேன்; எங்கெங்கும் உதயசூரியனே ஒளி வீசுகிறது. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி உறுதி! தேர்தல் ஆருடங்கள், ஆலமரத்து ஜோதிடங்கள் தோற்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

செய்தியாளர்களிடையே
தமிழர் தலைவர் ஆசிரியர்

நேற்று (11.4.2026) தேர்தல் பரப்புரைக்காக கோயம்புத்தூருக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

தமிழ்நாட்டில் தேர்தல் நிலவரம்
எப்படி இருக்கிறது?

செய்தியாளர்: தமிழ்நாடு சட்டப்பேரவைப்பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள்?

தமிழர் தலைவர்: திருநெல்வேலியிலிருந்து தொடங்கி, தென்பகுதி முடித்து, மேற்குப் பகுதிகள், கேரள எல்லை வரை சென்று, திருச்சி மற்ற எல்லாப் பகுதிகளுக்கும் சென்று, இன்று (11.4.2026) கோவைப் பகுதிக்கு வந்திருக்கின்றோம்.

எல்லா இடங்களிலும் அடுத்து வரப் போவது, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான், ஸ்டாலின் ஆட்சிதான் என்று மக்கள் தெளிவாக திட்டமிட்டு இருக்கிறார்கள்.

எத்தனைவிதமான கயிறு திரிப்புகள் நடந்தாலும், எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும், எப்படிப்பட்ட வியூகங்களை அமைத்தாலும், நிச்சயம் மே 4 ஆம் தேதிக்குப் பிறகு, மீண்டும் ஸ்டாலின் அவர்கள், இரண்டாம் முறையாக முதலமைச்சராகப் பதவியேற்பார்.

தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும்
பிரதமர் மோடி!

ஜோதிடங்களைப் பொய்யாக்குவார்; அரசியல் ஆருடமாக இருந்தாலும், ஆலமரத்து ஜோதிடங்களாக இருந்தாலும், அந்தக் கணிப்புகளைப் பொய்யாக்கிக் காட்டுவார்.

ஆகவே, ஸ்டாலின் அவர்களுடைய வெற்றி உறுதி. இடையில் அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். எதிரணியினர், தோல்விதான் என்பதை உறுதியாகத் தெரிந்துகொண்டனர். ஆகவேதான், மோடி அவர்கள், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மிகுந்த அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.

அதுமட்டுமல்ல, இப்போது தங்களுக்கு வேறு வழியில்லை என்பதற்காக பா.ஜ.க. சார்பில் போட்டியிடுவதற்கு இடம் கொடுக்காத அண்ணா மலையை, தொகுதி கொடுக்கப்படவில்லை என்றாலும் பரவாயில்லை, ெஹலிகாப்டராவது வந்தது என்ற அளவில் வைத்திருக்கிறார்கள்.

செய்தியாளர்: உதயநிதி ஸ்டாலினை முதலமைச்ச ராக்குவதற்காகத்தான் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார். இந்த ‘டைனாசிட்டி ரூலுக்கு’ ஒரு முடிவு கட்டவேண்டும் என்பதற்காகத்தான் என்.டி.ஏ. கூட்டணியில் ஒன்றிய அமைச்சர்கள், அண்ணாமலை போன்றவர்கள் பிரச்சாரம் செய்யும்போது விமர்சனம் செய்கிறார்களே?

தமிழ்நாட்டின் நிலவரங்கள்
ஒன்றிய அமைச்சர்களுக்கு விளங்காது!

தமிழர் தலைவர்: அந்த ஒன்றிய அமைச்சர்களுக்கு, தமிழ்நாட்டு நிலவரமே தெரியாது. அங்கே இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இதுபோன்று சொல்கிறார்களே தவிர, வேறொன்றுமில்லை. அவர்களுக்குத் தமிழ்நாடும் தெரியாது; தமிழ்நாட்டினுடைய உணர்வும் புரியாது.

இவர்களுடைய ஆட்டமெல்லாம் ஏப்ரல் 23 ஆம் தேதிவரையில் இருக்கும். அதற்குப் பிறகு அவர்களு டைய கதை என்ன என்பது தெளிவாகத் தெரியும்.

இவர்களுக்கு அவர்களைத் தெரியாது; அவர்களுக்கு  இவர்களைத் தெரியாது. இவர்கள் யாரையும் மக்களுக்குத் தெரியாது.

பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உண்மையிலேயே கொண்டு வருமா, ஒன்றிய அரசு?

செய்தியாளர்: பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறாரே, அதுகுறித்து உங்களுடைய கருத்து என்ன?

தமிழர் தலைவர்: பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு, 2029 ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் வரும் என்று சொன்னவர்கள், சில மாநில தேர்தல் நெருங்குகிற காரணத்தினால் இதுபோன்று செய்கிறார்கள். இத்தேர்தல்களில், பெண்கள் வாக்குகள் அதிகமாக இருக்கிறது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டதால், இதுபோன்ற திட்டங்களையெல்லாம் பிரதமர் மோடி அறிவிப்பார். அது அறிவிப்போடு சரி.

ஏற்கெனவே எல்லோருக்கும் தெரியும், ‘‘வாயாலே வடை சுடுபவர் பிரதமர்’’ என்று.

இதுவும் அப்படித்தான் இருக்குமே தவிர, நடைமுறைக்கு அது ஒத்துவராது.

அதில், பாலியல் நீதி இருக்கிறதா? என்பது சிந்திக்க வேண்டிய ஓர் அம்சமாகும்.

இதை எப்போது செய்கிறார்கள் என்றால், மாநிலங்களில் தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போது, நாடாளுமன்ற நடைமுறைக்கு விரோதமாக இதைச் செய்வது என்பது ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும்.

செய்தியாளர்: விஜய் பின்னால் போகக்கூடிய இளைஞர்களுக்கு நீங்கள் சொல்லக்கூடிய அறிவுரை என்ன?

தமிழர் தலைவர்: மின்சாரத்தை நம்பிப் போகவேண்டுமே தவிர, மின்மினிப் பூச்சிகளை நம்பிப் போகக்கூடாது. மின்மினிப் பூச்சிகளால், இருட்டைத் தடுக்க முடியாது. மின்சாரம்தான் இருட்டைத் தடுக்க முடியும்.

ஜனநாயகன்’ திரைப்படம் வெளியில் வந்த பின்னணி என்ன?

செய்தியாளர்: ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறதே, அது குறித்து உங்கள் கருத்து என்ன?

தமிழர் தலைவர்: தெளிவாகப் பல செய்திகள் வருகின்றன. ஒரு படம் வெளியாகவில்லை என்று சொன்னவுடன், அந்தப் படத்தின் கதாநாயகன், நியாயமாக ஆத்திரப்பட வேண்டியவர். ஆனால், எந்த வகையிலும் அவர் தன்னுடைய கோபத்தையோ, கண்டனத்தையோ தெரிவிக்கவில்லை.

அவருக்காக மற்றவர்கள்தான், தணிக்கைக் குழுவினரை எதிர்த்து அறிக்கைகளை வெளியிட்டனர். அதற்குப் பிறகு, தேர்தல் முடிகின்ற வரையில், அந்தத் திரைப்படம் வெளிவராது என்று சொல்லக்கூடிய நிலையில், இப்போது அவர்களே அதை வெளிப்படுத்தி விட்டார்கள் என்ற செய்தி பரவலாக இருக்கிறது.

மக்களுக்கு அது தெளிவாகத் தெரியும். இவர்களுடைய ஆதிக்கத்தில் முழுக்க முழுக்க பெட்டிக்குள் இருக்கின்ற ஒரு படம், எப்படி அவர்களைத் தவிர, மற்றவர்கள் கைக்குச் சிக்கியிருக்க முடியும்?

நிச்சயமாக, அங்கே இருப்பவர்களின் எண்ணப்படி, அந்தப் படம் வெளி வந்திருக்கிறது என்றுதான் அதற்குப் பொருளே தவிர, இதில் ஒரு வித்தையைக் காட்டப் போகிறோம் என்று முன்பே  முக்கியமான ஒருவர் சொல்லியிருப்பதையும் கவனிக்கவேண்டும்.

எனவேதான், அன்றைய கரூர் பிரச்சினையில் சி.பி.அய். விசாரணை வேண்டும் என்று கேட்டவர்கள், இதற்கும் சி.பி.அய். விசாரணையைக் கேட்கவேண்டும்.

– இவ்வாறு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *