தஞ்சாவூர், ஏப்.11- நெல்லுக்கு ஊக்கத் தொகை வழங்கக் கூடாது என ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடிதம் அனுப்பினார். அதைத் கண்டிக்காமல் பச்சைத் துண்டு போட்டு விவசாயிகளுக்கு பச்சைத் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.முக. கூட்டணி வேட்பாளர் களை ஆதரித்து தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
நேற்று (10.4.2026) தஞ்சையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
“மாடுகட்டி போர் அடித்தால் மாளாது என யானைக் கட்டி போரடித்த மண் தஞ்சை மண். காவிரித்தாயின் மண்ணுக்கு கலைஞரின் மகன் வந்திருக்கிறேன்.
தஞ்சை தரணிக்கு வந்தாலே இனம்புரியாத கம்பீரம் பிறக்கிறது. ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் ஆண்ட மண்.
நீங்கள் தஞ்சை மாவட்டத்தில் நூறு சதவிகித வெற்றியை மட்டும் கொடுங்கள். தஞ்சையின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. நம்முடைய சாதனைகளையும் சொல்லும் இந்த நேரத்தில் அதிர்ச்சியான செய்தியும் சொல்ல வேண்டியது ஒன்று இருக்கிறது.
கடலூர், சீர்காழி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய ஊர்களில் பிரசாரத்தை முடித்துவிட்டு, நான் சென்னைக்கு சென்றதும் அதிகாரிகள் என்னிடம் ஒரு கடிதத்தைக் காண்பித்தனர்.
அதில், எடப்பாடி பழனி சாமியின் முதலாளியாக உள்ள ஒன்றிய பாஜக அரசு, தமிழ்நாடு அரசுக்கு அனுப்பிய கடிதம் அது. அதில், தமிழ்நாடு அரசு நெல்லுக்கு வழங்கக்கூடிய ஊக்கத்தொகையால் நெல் உற்பத்தி நிறைய பெருகி வருகிறதாம். அதனால், பல்வேறு பிரச்சினைகள் உருவாகிறதாம்.
பச்சைத் துரோகம்!
அதனால், தமிழ்நாடு அரசு நெல்லுக்கு வழங்குகின்ற ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்கக்கூடாது என்று கூறி ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் நிதியமைச்சகம் இந்தக் கடிதத்தை அனுப்பியிருக்கிறது. உண்மையில் தமிழர் என்ற உணர்வு இருந்தால் இதற்காவது எடப்பாடி பழனிசாமி வாய்திறந்து கண்டிப்பாரா? அல்லது வழக்கம்போல அவதூறு பேசுவதற்கு மட்டும்தான் வாய் திறப்பாரா?
நான்கு ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்த போலி விவசாயி எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், வேளாண் விவசாயிகளுக்கு மாநில அரசு வழங்கும் ஊக்கத்தொகையை ஒரு ரூபாய்கூட அவர் உயர்த்தவில்லை.
பச்சைத் துண்டுப் போட்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. விவசாயிகளுக்கு பழனிசாமி செய்த துரோகம் ஒன்றா.. இரண்டா..
விவசாயிகளுக்கு எடப்பாடி பழனிசாமி செய்த துரோகத்தைச் சொல்வதற்கு ஒருநாள் போதாது. அவர் உண்மையான விவசாயியாக இருந்தால் வேளாண் சட்டத்தை ஆதரித்திருப்பாரா? போராட்டம் செய்த விவசாயிகளை புரோக்கர் என்று விமர்சித்தவர்தான் எடப்பாடி பழனிசாமி.” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

