‘வாரிசுகளை வளர்ப்பதா?’
‘பா.ஜ.,வில் வாரிசுகளுக்கு இடமில்லை என, அந்த கட்சியின் மேலிட தலைவர்கள் கூறினாலும், மெல்ல மெல்ல வாரிசுகள் அங்கு தலைதூக்கி வருகின்றனர்…’ என குமுறுகின்றனர், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர்.
பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய அரசில், வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்தவர், சுஷ்மா சுவராஜ். பா.ஜ.,வின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர். உடல் நலக்குறைவு காரணமாக, 2019ல் காலமானார்.
இந்நிலையில் தான், புதுடில்லியில் சமீப காலமாக நடக்கும், பா.ஜ., நிகழ்ச்சிகளில், சுஷ்மாவின் மகள் பன்சுரி சுவராஜ் பங்கேற்க துவங்கி உள்ளார்.
விசாரித்த போது, பா.ஜ., சட்டப் பிரிவின் இணை ஒருங்கிணைப் பாளராக, பன்சுரி நியமிக்கப்பட்டுள்ளதும், ஹரியானா மாநில அரசு கூடுதல் வழக்கறிஞர் பதவி, அவருக்கு அளிக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்தது.
‘பன்சுரி, பிரிட்டனில் உள்ள கல்லூரியில் சட்டம் படித்தவர். ஒப்பந்தம், ரியல் எஸ்டேட் தொடர்பான வழக்குகளில் ஆஜராகி வாதாடி வருகிறார். இதனால், அவருக்கு பா.ஜ.,வின் சட்டப் பிரிவில் இடம் அளிக்கப் பட்டுள்ளது…’ என்கிறது, பா.ஜ., மேலிடம்.
எதிர்க்கட்சியினரோ, ‘இப்போது இப்படித் தான் சொல்வர். வரும் லோக்சபா தேர்தலில், அவருக்கு, ‘சீட்’ கொடுத்து எம்.பி.,யாக்கி விடுவர். வாரிசுகளை அவர்களே வளர்த்து விட்டு, எங்களை குடும்ப கட்சி என விமர்சிக்கின்றனர்…’ என, புலம்புகின்றனர்.