தமிழ்நாட்டில் தேர்தலுக்கு முன்பே மதக் கலவரத்தைத் தூண்டும் முயற்சி முறியடிப்பு! அமைதிப் பூங்காவைக் காக்க உறுதியெடுப்போம்!

5 Min Read

மதக் கலவரங்களுக்கு உயர்நீதித்துறை துணை போகாமல் காப்பாற்றியுள்ளனர் நீதிபதிகள் இருவரும்!

திருப்பரங்குன்றம் தீபம் பிரச்சினையை முன்வைத்து –

மதக் கலவரங்களுக்கு உயர்நீதித்துறை துணை போகாமல் காப்பாற்றியுள்ளனர் நீதிபதிகள் இருவரும்! திருப்பரங்குன்றம் தீபம் பிரச்சினையை முன்வைத்து – தமிழ்நாட்டில் தேர்தலுக்கு முன்பே மதக் கலவரத்தைத் தூண்டும் முயற்சி முறியடிப்பு! அமைதிப் பூங்காவைக் காக்க உறுதியெடுப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் எப்படியாவது மதக் கலவரத்தைத் தூண்டிவிட வேண்டும் என்னும் கெடு நோக்கோடு ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரத்தின் தொங்கு சதைகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின்

அதீத அவசர தீர்ப்பு!

அந்த முயற்சிகளுள் ஒன்று தான் திருப்பரங்குன்றம் மலை விவகாரம். தொடர்ந்து பல ஆண்டுகள் இதற்கான அடித்தளங்களை மெல்ல மெல்ல போட்டுக் கொண்டிருந்தவர்கள், தேர்தல் நெருங்கியதையொட்டி, கடந்த ஆண்டு வேகமாகக் காய்களை நகர்த்தினர். அதன் விளைவாக ஒரு பதற்ற நிலை மதுரையைத் தொற்றிக் கொண்டது. திருப்பரங்குன்றத்தில் வழக்கமாகத் தீபம் ஏற்றப்படும் இடத்திற்குப் பதிலாக, தர்காவுக்கு அருகில் உள்ள சர்வே கல்லின் மீது தீபம் ஏற்றப்பட வேண்டுமென்று சில ஹிந்துத்துவவாதிகள் வழக்குத் தொடுத்தனர். ஹிந்துத்துவாவினருக்குச் சாதகமாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தனி நீதிபதி ஜஸ்டிஸ் திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின் அதீத அவசர தீர்ப்பும் வழங்கப்பட்டதால், ஒரு நெடுங்கால ஆபத்துக்கான அறிகுறி தென்பட்டது.

ஆனால், இவ் விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கை யோடும், சமூக நல்லிணக்கம், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு, சமூக அமைதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும் சட்டப்படியான அனைத்து முயற்சிகளையும் செய்து, நிலைமையைக் கவனமாகக் கையாண்டது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசு. அதன் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தின் கூறு 25 கூறுவதை முறையாகப் பின்பற்றியதுடன், சட்டம் – ஒழுங்கையும், அமைதியையும் காப்பாற்றுவதற்காக எந்த பின்விளைவையும் சந்திக்கத் தயார் என்ற துணிச்சலுடன் செயல்பட்டுப் பாராட்டுப் பெற்றது தமிழ்நாடு அரசு.

பொது அமைதியைச் சவாலாக்கும் வகையில் சூழ்நிலை உருவானது!

இவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்ளாமல், தனி நீதிபதியின் ஆணைகளைச் செயல்படுத்தவில்லை என்று கூறி ஹிந்த்துத்துவாவினர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்தனர். அவ்வழக்கு அதே நீதிபதியால் விசாரிக்கப்பட்டது. அரசு அதிகாரிகளை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகச் சொல்லியும், தான் கொடுத்த ஆணை களை செயல்படுத்தினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்படும் என்றும் மீண்டும் மீண்டும் இப் பிரச்சினைக்கு உயிரூட்டப்பட்டுக் கொண்டே இருந்தது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மேலும் சில ஆணைகளை அடுக்கிக் கொண்டே இருந்தார் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தனி நீதிபதி ஜஸ்டிஸ் திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன். அவை சட்டத்தின்பாற் பட்டதாகவோ, பிரச்சினையை முடித்து வைப்பதாகவோ இல்லாமல், மேலும் பிரச்சினைகளை வளர்த்துச் சிக்கலாக்கும் விதமாகவே இருந்தன. பொது அமைதியைச் சவாலாக்கும் வகையில் சூழ்நிலை உருவானது.

இதனால் அந்த உத்தரவுகளின் மீது தமிழ்நாடு அரசின் சார்பிலும், தர்கா தரப்பு சார்பிலும் உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வின் முன் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் தனி நீதிபதி கொடுத்த ஆணைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது..

அதைக் குறித்து, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது, வழக்கில் தனி நீதிபதி (தான்) கொடுத்த உத்தரவுகளுக்கு மட்டுமே இருநீதிபதிகள் அமர்வு தடைவிதித்துள்ளதே தவிர, வழக்கை விசாரிக்கத் தடையில்லை என்று சொல்லி, பிடிவாதமாக வழக்கு விசாரணையைத் தொடர்ந்து வந்தார்.

திருப்பரங்குன்றம் தொடர்பான எந்த வழக்கையும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிக்கக் கூடாது!

இது தொடர்பாகத் தெளிவுபடுத்தக் கோரி உரிமைப் பட்டய மேன்முறையீடு (Letters Patent Appeal-LPA) மூலம் மீண்டும் முறையிடப்பட்டபோது, கடந்த மூன்று நாள்களுக்கு முன் (ஏப்ரல் 8 அன்று) அதனை விசாரித்த  இரு நீதிபதிகள் (ஜஸ்டிஸ் திரு.சதீஷ்குமார், ஜஸ்டிஸ் திரு.ஜோதிராமன்) அமர்வு, திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதியால் வழங்கப்பட்ட உத்தரவுகள் எல்லாம் நிறுத்தி வைக்கப்படுகின்றன என்று உறுதிப்படுத்தியதுடன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்பட திருப்பரங்குன்றம் தொடர்பான எந்த வழக்கையும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிக்கக் கூடாது என்று  இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தனி நீதிபதி விசாரிப்பதா, இரு நீதிபதிகள் அமர்வு விசாரிப்பதா என்று முடிவு செய்யப்படும்வரை இந்த நிலை நீடிக்கும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

வழக்குத் தள்ளுபடி – அபராதம் விதிப்பு!

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சிக்குச் சென்று ஹிந்துக்கள் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று கூறி மற்றொரு ‘பொதுநல’ வழக்கை ஹிந்து தர்ம பர்ஷத் மேலாண்மை அறங்காவலர் கே.கே.ரமேஷ் என்பவர் தொடுத்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதிகள் “திருப்பரங்குன்றம் தவிர வேறு பிரச்சினையே இல்லையா? திருப்பரங்குன்றம் தொடர்பாக எத்தனை மனுக்களைத் தாக்கல் செய்வீர்கள்? நீதிமன்றத்துக்கு இதை விட்டால் வேறு வேலை இல்லையா?” என்று காட்டமாகக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கைத் தள்ளுபடி செய்ததுடன், வழக்கு தொடுத்தவருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தனர். (இந்த நபருக்குப் பொழுது விடிந்தால் ‘பொது நல வழக்கு’ என்ற பெயரில் இதுவே வேலை! இதே பெயரில் மற்றொரு சிறீரங்கத்துப் பார்ப்பனரும் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உள்ளிட்ட பிரச்சினைகளில் வழக்கு தொடுத்து சமூக அமைதியையும், சமூக நீதியையும் குலைக்க முயற்சிப்பார்.)

பின்னர் வாழ்நாள் முழுக்க இப்படி வழக்குத் தொடுக்க மாட்டேன் என்று உறுதிமொழி வழங்கியதன் பேரில், அந்த நபருக்கு ரூ.50,000 ஆக அபராதம் விதித்து முடித்து வைத்துள்ளனர்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திர உரிமை என்பது லகான் இல்லாத குதிரையல்ல. அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 25-இன் படி, “Subject to Public order, health and morality and to the other provisions of this part” தெளிவாக அதன் எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது.

அதை மனதில் கொண்டு தீர்ப்பு வழங்கியுள்ள இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவுகள் வரவேற்கத்தக்கவையாகும்.

மதக்கலவரங்களுக்கு உயர்நீதித் துறை துணைப் போகாமல் காப்பாற்றிய பெருமை நீதிபதிகள் ஜஸ்டிஸ் திரு.சதீஷ்குமார், ஜஸ்டிஸ் திரு.ஜோதிராமன் ஆகியோருக்கு உண்டு.

ஆர்.எஸ்.எஸ்.-ஹிந்துத்துவ கும்பலின் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டுள்ளது

இதன் மூலம் தேர்தல் நடைபெறுவதற்குள் மத மோதலைத் தூண்டிவிட்டு, அரசியல் குளிர்காய நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்.-ஹிந்துத்துவ கும்பலின் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்வதை உறுதிப்படுத்த இந்தத் தேர்தல் எவ்வளவு முக்கியம் என்பதை ஒவ்வொரு நொடியும் தமிழர்கள் உணர வேண்டியது அவசியம்!

கி.வீரமணி

 தலைவர்,

திராவிடர் கழகம்

 

11.4.2026   

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *