இந்தியா என்பது பல மதங்கள், மொழிகள் மற்றும் கலாச்சாரங்கள் இணைந்து வாழும் ஒரு அழகான பூந்தோட்டம். காலங்காலமாக இங்கு நிலவி வந்த சகோதரத்துவமும், ஒருவருக்கொருவர் காட்டிய மரியாதையும் உலகிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்தது. “சலாம் பாய்” என்று ஒரு இசுலாமியர் சொல்ல, “வணக்கம் பாய்” என்று ஒரு இந்து புன்னகையுடன் பதில் சொல்லும் காட்சி நம் வீதிகளின் அடையாளமாக இருந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இந்தச் சமூகக் கட்டமைப்பில் மதவாத நச்சு மெல்ல மெல்லக் கலந்து வருவதைக் காண்பது மிகுந்த கவலையை அளிக்கிறது.
திட்டமிட்ட வெறுப்பு அரசியல்
சமூகத்தில் மதங்களுக்கிடையே பிளவை உண்டாக்கும் நோக்கில் சில சக்திகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, இசுலாமியர்களை விலக்கி வைக்கும் விஷயங்களைக் கொண்டு அவர்களைத் தூண்டுவதும் அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ளது.
இசுலாமிய மார்க்கத்தில் பன்றி என்பது ‘ஹராம்’ (தடை செய்யப்பட்டது) என்றும், அது தூய்மையற்ற விலங்காகவும் கருதப்படுகிறது. இதைத் தெரிந்தே மசூதிகளின் முன் பன்றித் தலைகளைப் போடுவதும், இசுலாமியக் குடியிருப்புகளுக்கு முன்னால் பன்றிகளைக் கொண்டு வந்து வம்பிழுக்கும் கீழ்த்தரமான செயல்களைச் சில மதவாதக் கூட்டங்கள் செய்கின்றன.

அண்மைக்காலமாக, 18 முதல் 20 வயது வரையிலான இளம் பெண்கள் கூட இத்தகைய வெறுப்பு அரசியலில் சிக்கித் தவிப்பது அதிர்ச்சியளிக்கிறது. இசுலாமியக் குடியிருப்பின் முன்னால், அவர்கள் வெறுக்கும் ஒரு விலங்கைக் குளிப்பாட்டுவதும், அதே நேரத்தில் பஜனைப் பாடல்களைப் பாடுவதும் பக்திக்காக அல்ல; அது ஒரு தரப்பினரின் உணர்வுகளைக் காயப்படுத்தும் வன்மமான செயலாகச் செய்கின்றனர். மதத்தைப் பக்திக்கு பயன்படுத்தாமல், மற்றவரை இழிவுபடுத்தும் கருவியாகப் பயன்படுத்துவது ஆரோக்கியமான சமூகத்திற்கு எப்படி நல்லதாகும்?
எதிர்காலம் கேள்விக்குறி
பக்கத்து வீட்டுக்காரருடன் முகம் கொடுத்துப் பேச முடியாத அளவிற்குத் தங்களுக்குள் வெறுப்பை வளர்த்துக்கொள்வது யாருக்கு லாபம்? இந்த இளம்பெண்கள் அங்கேயேதான் வசிக்கப் போகிறார்கள், அந்த இசுலாமியக் குடும்பங்களும் அங்கேயேதான் இருக்கப்போகிறார்கள். நாளை ஒரு அவசர உதவி என்றாலோ அல்லது ஒரு வீட்டு விழாக் காரியம் என்றாலோ மீண்டும் ஒருவரை ஒருவர் சந்தித்துத்தான் ஆக வேண்டும். அன்றாட வாழ்வில் முகம் பார்த்துப் பழக வேண்டியவர்களிடையே இத்தகைய மதவாதச் சுவர்களை எழுப்புவது எதிர்காலத் தலைமுறையின் அமைதியைப் பறிக்கும் செயலாகும்.
அரசியல் லாபங்களுக்காக விதைக்கப்படும் வெறுப்பு விதைகள், தற்போது இளைஞர்களின் உள்ளத்தில் நஞ்சாக முளைத்து வருகின்றன. சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தைப் போற்றிய இந்திய மண்ணில், மீண்டும் அந்தப் பழைய அன்பும் ஒருவருக்கொருவர் மரியாதை செய்வது திரும்ப வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் பலம்; அந்தப் பலத்தைச் சிதைக்க நாம் அனுமதித்தால், அது நமக்கே அழிவைத் தேடித்தரும். இளையோர் நல்வழிப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இன்றும் இந்த நல்லிணக்கம் தமிழ்நாட்டில் அழகுற மிளிர்கிறது
பா.ஜ.க. இங்கே சொற்ப இடங்களைப் பிடித்தால் கூட அவர்கள் வளர்ந்த பகுதிகளில் இந்த மதாவத நச்சைப் பரப்பத் தயங்க மாட்டார்கள் என்பது உண்மை! எச்சரிக்கை! எச்சரிக்கை!!

