ஒரே கட்சியில் இருப்பவர்கள், ஒரே சங்கத்தில் செயல்படுகிறவர்கள், ஒரே நிறுவனத்தில் பணி புரிபவர்கள், லயன்ஸ், ரோட்டரி போன்ற உறுப்பினர் களுக்கும் நாடு முழுவதும் தொடர்புகள் (Network) இருக்கும். ஒரு புதிய இடத்திற்குப் போகும்போது தேவையான நட்பையும், உதவிகளையும் அவர்களால் பெற முடியும். இது உலகம் முழுவதும் இருக்கிற வழமை! அதேபோன்று திராவிடர் கழகத்திலும் இருக்கிறது. ஆனால், அது சற்றே வித்தியாசமானது!
கருநாடக மாநிலத் திராவிடர் கழகச் செயலாளராக இருப்பவர் முல்லைக்கோ. இவர் பிறந்து, வளர்ந்தது, அரசுப் பணி செய்தது எல்லாம் தமிழ்நாட்டில்! பணி ஓய்விற்குப் பிறகு தங்கள் மகன் வீட்டிற்குப் பெங்களூரு செல்கிறார். சில மாதங்கள் அமைதியாய் இருந்தவர், கருப்புச் சட்டைத் தோழர்கள் எங்கே எனத் தேடுகிறார். பிறகு தோழமைக் கொண்டு, கருநாடக மாநிலத் திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறார்.
மேலே கூறியதைப் போல பிற அமைப்புகளின் தொடர்புகள் (Network) என்பது தனிமனித செயல்பாடாக இருக்கும். திராவிடர் கழகத்தில் ஒருவர் தன்னை இணைத்துக் கொண்டால் அதன் தன்மை வேறு! அங்கு இவர்களது நலன்கள் எதுவும் இருக்காது; மாறாக பெங்களூரு நலன், அங்குள்ள தமிழர்கள் நலன், பகுத்தறிவுப் பிரச்சாரங்கள், கலந்துரையாடல்கள், தமிழ்நாட்டில் இருந்து தோழர்களை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்துதல் என முழுக்கவும் பொது வேலைகள்.
அதுவும் அனைவரும் பாராட்டும் பணியா? இல்லை. கருப்புச் சட்டை அணிந்து கடவுள், மதம், ஜாதிக்கு எதிராக வேலை செய்ய வேண்டும், பலரது விமர்சனத்தையும் தாங்கிக் கொள்ள வேண்டும். ஆக, இது ஓர் அறிவியல் பணி; அறிவை வளர்க்கும் பணி! இப்படியாகப் பெங்களூரு சென்று கழகத்தைக் கண்டுபிடித்து, தொண்டராக இணைந்து, இன்றைக்குக் கருநாடக மாநிலத் திராவிடர் கழகச் செயலாளராக உயர்ந்திருக்கிறார்; தலைவர் கி.வீரமணி அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார் என்றால், நம் தோழர்களின் சமுதாயப் பணிதான் அவ்வளவு மகத்தானது!
‘விடுதலை’ ஞாயிறு மலருக்காகப் பெங்களூருவில் உள்ள இல்லத்தில் அவரைச் சந்தித்தோம்.
அய்யா வணக்கம்!
“முல்லைக்கோ” என்பதன் பொருள் என்ன?
1946ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் கிள்ளை பகுதியில் பிறந்தேன். இப்போது 79 வயதாகிறது. பெற்றோர்கள் அழகம்மாள் – இராஜாங்கம். எனது இயற்பெயர் கோவிந்தராஜன். எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும். “முல்லை சிரித்தது” என ஒரு கதை எழுதினேன். அது அரவிந்தம் எனும் பத்திரிகையில் 1968இல் வெளிவந்தது. அப்போது முதல் (முல்லை கோவிந்தராஜன்) முல்லைக்கோ என ஆனது.
திராவிட இயக்க அறிமுகம் எப்படிக் கிடைத்தது?
எங்கள் ஊரான கிள்ளையில் நூலகம் ஒன்று இருந்தது. அங்கு சென்று தொடர்ந்து படித்ததன் மூலம் திராவிட இயக்கச் சிந்தனைகள் ஏற்பட்டது. கும்பகோணம் அருகே உள்ள சோழதரம் எனும் ஊருக்குப் பெரியார் வந்திருந்தார். அங்கு சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டதோடு, பெரியாரிடமும் அறிமுகம் செய்து கொண்டேன். உடனே அவர் சிதம்பரம் கு.கிருஷ்ணசாமி அவர்களைத் தொடர்பு கொள்ள சொன்னார். பிறகு வட்டத் துணைச் செயலாளர் பொறுப்பை எனக்கு வழங்கினார்கள். முன்னதாக எங்கள் ஊரில் நடைபெற்ற திருமணத்திலும் பெரியார் கலந்து கொண்டுள்ளார்.
நீங்கள் எங்கு பணி செய்தீர்கள்?
பேரூராட்சி இளநிலை உதவியாளராக 1977இல் பணி கிடைத்தது. 2004ஆம் ஆண்டு சென்னை, பூவிருந்தவல்லியில் ஓய்வு பெற்றேன். நான் பணியில் இருந்தபோது, சத்துணவுப் பணியாளர் சங்கத்தில் பொருளாளராக இருந்தேன். அப்போது சத்துணவுத் துறையில் பணிபுரிந்த நிர்மலா என்பவர் அறிமுகம் கிடைத்தது. அவரின் குடும்பச் சூழல் அறிந்து, அவரையே திருமணம் செய்து கொண்டேன்.
கு.கிருஷ்ணசாமி தலைமையில் 1977இல் திருமணம் நடைபெற்றது. அப்போதே மாலையில் நடந்த இந்நிகழ்வு, ஜாதி மறுப்புடன் கூடிய சுயமரியாதைத் திருமணம் ஆகும். எங்களுக்கு ஒரே பையன், பெயர் இங்கர்சால். பெங்களூருவில் மருத்துவராக இருக்கிறார்.
அரசுப் பணியில் இருக்கும்போது பிறப்பு, இறப்புச் சான்றிதழ் கொடுக்கும் பொறுப்பில் இருந்தேன். பெற்றோரின் பெயர்களை இணைத்துப் பலருக்கும் பெயர் வைத்துள்ளேன். தவிர இனவுணர்வு, மொழிவுணர்வு சார்ந்து நிறைய பெயர்களைப் பரிந்துரை செய்வேன். ‘தமிழில் பெயரிடுங்கள்’ எனும் புத்தகத்தை எப்போதும் கையில் வைத்திருப்பேன்.
இயக்கப் பணிகளின் ஈடுபாடு எந்தளவு இருந்தது?
என்னுடன், கருப்புச் சட்டையும் எப்போதும் இருக்கும். பணி முடிந்ததும் சுற்று வட்டாரத்தில் எங்கு கூட்டங்கள் நடந்தாலும் போய்விடுவேன். தவிர புதிய தோழர்களை உருவாக்குதல்,
கிளைகள் உருவாக்குதல், நிகழ்ச்சிகள் நடத்துதல் எனப் பல்வேறு செயல்களைச் செய்வேன்.
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் 16 கிளைகளை உருவாக்கினோம். பிறகு கடலூர் மாவட்ட அமைப்பாளர், மாவட்டச் செயலாளர் எனப் பொறுப்புக் கொடுத்தார்கள். அலுவல் நிமித்தமாகச் சென்னை, பூவிருந்தவல்லி பகுதிக்கு மாற்றம் கிடைத்தது. அதன் பிறகு பெரியார் திடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கினேன்.
எழுதுவது பிடிக்கும் எனக் கூறினீர்களே, அதுகுறித்துக் கொஞ்சம் கூறுங்கள்?
விடுதலை, உண்மை இதழுக்குச் செய்திகள், கட்டுரைகள் எழுதுவேன். நிகழ்வும் பதிவும், அண்ணா கண்ட அலையாத்திக் காடுகள், சிலைக்குள் சித்திரங்கள், நாட்டியக் காவியம், வெளிச்சம், நகைச்சுவை 40, தடம் பதித்த தமிழ்ச் சான்றோர்கள், ஆர்ப்பரிக்கும் கடலலைகள், தாய்மொழியின் மேன்மை, மாமன்னன் திப்புசுல்தான், தூக்கு மேடை காவியம், ஆற்றல் பெருநிதி அண்ணா ஆகிய 12 நூல்கள் எழுதியுள்ளேன். சைவச் சித்தாந்த முதுகலை வரலாறும், இதழியல் தொடர்பான பட்டயப் படிப்பும் முடித்துள்ளேன். பெரியார் உயர் சிந்தனைகள் (DPT) வகுப்பும் படித்துள்ளேன்.
பெங்களூரு வாழ்க்கை எப்படிப் போகிறது?
2004இல் பணி ஓய்வு பெற்று, 2005ஆம் ஆண்டே பெங்களூரு வந்துவிட்டேன். இங்கு வந்ததும் பகுத்தறிவாளர் ராஜா அறிமுகம் கிடைத்தது. அவருடன் இணைந்து “கருநாடகத் தமிழ் மக்கள் இயக்கம்” தொடங்கினோம். மொழி, இனவுணர்வை மய்யமாக வைத்து இங்கு நிறைய அமைப்புகள் உள்ளன. அவை அனைத்துமே ஓரளவு சமூகம் சார்ந்து இயங்குபவைதான். திராவிடர் கழகத் தோழர்கள் அறிமுகம் பின்னால் தான் கிடைத்தது. அப்போது மாநிலத் தலைவராக மு.ஜானகிராமன் இருந்தார்.
அதுமுதலே என்னை இயக்கப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டேன். பெங்களூர் தமிழ்ச் சங்கக் கட்டடத்தின் மூன்றாவது மாடியை ரூபாய் 6 இலட்சம் கொடுத்துக் குத்தகைக்குப் பெற்றுள்ளோம். திராவிடர் அகம், பெரியார் மய்யம், தலைவர் ஆசிரியர் அரங்கம், மணியம்மையார் நூலகம் ஆகியன செயல்பட்டு வருகின்றன.
பெங்களூரில் வாழும் பெரியார் பெருந்தொண்டர்கள் மற்றும் சமூக நலன் விரும்பும் 60 பேருக்குப் “பெரியார் தொண்டறச் செம்மல்” விருது வழங்கினோம். அய்யா வீ.மு.வேலு அவர்களின் 100 ஆவது பிறந்தநாளை மிகச் சிறப்பாக ஆசிரியரை அழைத்துக் கொண்டாடினோம். சென்ற பிப்ரவரி மாதம் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது. அப்போது கருநாடக மாநிலத் திராவிடர் கழகத் தலைவராக வழக்குரைஞர் சே.குணவேந்தன் அவர்களை ஆசிரியர் நியமித்தார்கள்.
பல்வேறு விருதுகள் வாங்கி இருப்பதாக அறிந்தோமே?
ஆமாம்! 12 நூல்கள் வெளியாகி, 3 நூல்கள் அச்சில் இருக்கின்றன. தவிர ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளேன். டில்லியில் அம்பேத்கர் பெலோசிப் விருது, பெரியார் பெருந்தொண்டர் விருது, அமெரிக்கா, குளோபல் அமைதி பல்கலைக் கழகத்தின் சார்பில் மதிப்புறு முனைவர் பட்டமும் பெற்றுள்ளேன். மேலும் பெரியார் மணியம்மை கல்லூரியில் 2008ஆம் ஆண்டு உலகப் பெரியார் சான்று உள்ளிட்டு 15 வகையான சான்றுகளும், விருதுகளும் கிடைத்துள்ளது.
இதுதவிர கடலூர் மாவட்ட ஆட்சியர் தமிழ் வளர்ச்சி கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், அண்ணாமலை பல்கலைக் கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஆய்வுக் கட்டுரைகளும் சமர்ப்பித்துள்ளேன் என முல்லைக்கோ தெரிவித்தார்.
இயக்கப் பணிகள் மட்டுமின்றி தமிழ்நாட்டில் இருந்தபோது தம் கிராமத்திற்கு அரசு உயர்நிலைப் பள்ளி, மேம்பாலம் உருவாக்கம், இலவச மழலையர் பள்ளி, மகளிர் தையல் பயிற்சிப் பள்ளி போன்றவைகள் வருவதற்கும் உறுதுணையாக இருந்தவர் தற்போதைய பெங்களூரு பெரியாரிஸ்ட் முல்லைக்கோ அவர்கள்! கருப்புச் சட்டைகள் எங்கிருந்தாலும், கழகத்திற்குப் பெருமைதான்!

