பியூஷ் ராய் என்பவர் பகிர்ந்த காணொலியில், நர்மதா நதிக்கரையில் ஒரு பெரிய டேங்கர் லாரியில் இருந்து சுமார் 11 ஆயிரம் லிட்டர் பால் நேரடியாக ஆற்றில் கொட்டப்படுகிறது. ஒருபுறம் பூசாரிகள் மந்திரங்கள் ஓத, மறுபுறம் பக்தர்கள் அந்தப் பால் ஆற்றில் கலப்பதைப் பக்தியுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்தச் சடங்கிற்காகப் பயன்படுத்தப்பட்ட பாலின் சந்தை மதிப்பு சுமார் ரூ. 5.5 லட்சம் முதல் ரூ. 7.7 லட்சம் வரை இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்த சிறப்பு புஷ்கர நிகழ்வை நடத்திய சாமியார் கூறியது: “பாலுக்கான பணம் பக்தர்களால் கொடுக்கப்பட்டது. அவர்களின் உழைப்பில் வந்த பணம். அதை அவர்கள் இறைவனுக்கு அர்ப்பணிக்கிறார்கள். மண்ணில் இருந்து அனைத்தும் வருகிறது, அதை நன்றியாக இந்த மண்ணிற்கே அர்ப்பணிக்கிறோம்” என்றார்.
நர்மதா தேவிக்கு பால் அபிஷேகம் செய்வது என்பது பல நூற்றாண்டுகளாகத் தொடரும் ஒரு ஆன்மிக நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு தான் நம்பிக்கை என்ற பெயரில் எதையும் செய்வதை நீதிமன்றம் வேடிக்கைப் பார்க்காது என்று கருத்து கூறியது. இந்த நிலையில் லாரி லாரியாக பசுமாட்டுப்பாலை ஆற்றில் கொட்டிய நிகழ்வு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

பால் கொட்டுவதால் நீர்நிலைகள் பாதிப்பு – அதிர்ச்சியூட்டும் தகவல்!
பொதுவாக பால் என்பது சத்தான உணவுப் பொருளாகவே நமக்குத் தெரியும். ஆனால், அதுவே அளவுக்கு அதிகமாக நீர்நிலைகளில் கலக்கும்போது, அது ஒரு ஆபத்தான மாசுக் காரணியாக மாறுகிறது என்பது பலரும் அறியாத உண்மை. இது குறித்த முக்கியத் தகவல்கள் இதோ:
நீர்நிலை மாசுபாடும்.
ஆக்சிஜன் பற்றாக்குறையும்!
ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் பால் கலப்பது கடுமையான மாசுபாட்டை உருவாக்குகிறது. பாலில் உள்ள அதிகப்படியான கரிமப் பொருட்கள் (Organic content) காரணமாக, அதன் உயிரியல் ஆக்சிஜன் தேவை (Biological Oxygen Demand – BOD) மிக அதிகமாக இருக்கும்.
இதன் விளைவாக, பால் தண்ணீரில் சிதைவடையும் போது, அங்கிருக்கும் ஆக்சிஜனை பெருமளவில் உறிஞ்சிக் கொள்கிறது. இது நீரில் வாழும் மீன்கள் மற்றும் பிற உயிரினங்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்தி, அவை மூச்சுத்திணறி இறக்க வழிவகுக்கிறது.
பாலின் சுற்றுச்சூழல் பாதிப்புகள்:
மீன்களின் இறப்பு மற்றும் ஆக்சிஜன் குறைபாடு:
சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை விட, பால் 400 மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இது நீர்வாழ் உயிரினங்களுக்குத் தேவையான ஆக்சிஜனை மிக வேகமாக வற்றச் செய்கிறது.
பாசிப் பெருக்கு
பாலில் நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை நீர்நிலைகளில் கலக்கும் போது, தீங்கு விளைவிக்கும் பாசிகள் அதிகப் படியாக வளர (Eutrophication) காரணமாகின்றன. இது நீரின் தரத்தை முழுமையாகப் பாதிக்கிறது.
சாக்கடைக் காளான்
தொடர்ச்சியாக நீர்நிலைகளில் பால் அல்லது பால் கழிவுகள் கலக்கும்போது, அங்கு ஒருவிதமான பூஞ்சை அல்லது காளான் படலங்கள் உருவாகி, நீர்நிலை மண்டலத்தையே சீர்குலைக்கிறது. இந்த நர்மதா புஷ்கரம் தேவைதானா?

