திருச்சி மேற்கு தொகுதிக்கான பிரச்சாரத்தில் தமிழர் தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்தார். அமைச்சர் கே.என்.நேரு அருகில் நின்று அனைவரையும் வணங்கி வாக்கு சேகரித்தார். தமிழர் தலைவரின் பிரச்சார வாகனத்தைச் சுற்றி திரளான கூட்டம். ஏறத்தாழ சாலை முழுவதும்! ஊடக வாகனங்களும் நின்று காட்சிப் பதிவு எடுத்துக் கொண்டிருந்தன. அப்போது ஆம்புலன்ஸ் ஒன்று எதிரில் விரைந்து வந்து கொண்டிருந்தது. கூட்டத்தை நெருங்கும்போது அதன் ஒலியைக் கேட்ட தமிழர் தலைவர், உடன் கூட்டத்தை விலக்கி வழிவிடுமாறு தோழர்களுக்கும், பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார். எவ்விதத் தடங்கலும் இன்றி ஆம்புலன்ஸ் விரைந்து செல்ல வழிவகுத்தனர் தோழர்கள். மக்கள் நலனுக்காகத் தான் நாம் வந்திருக்கிறோமே தவிர, அவர்களின் அவசியத் தேவைகளுக்கு நாம் குறுக்கே நிற்கக் கூடாது என்று சொல்லி, வழிவிட்டோருக்கு நன்றி சொன்னபடி பேச்சைத் தொடர்ந்தார் ஆசிரியர். நேற்று முன் தினம் கம்பம் தொகுதியில், கம்பம் ராமகிருஷ்ணன் அவர்களுக்காக வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தபோதும், இதே போல ஆம்புலன்ஸ் வாகனத்தின் ஒலியைக் கேட்டு, வாகனத்தின் பின்புறம் நின்றிருந்தவர்களை ஒதுங்கி வழிவிடச் சொல்லி, பின்னர் கூட்டத்தை ஆசிரியர் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

