எங்களப்பன் குதிருக்குள் இல்லை’

5 Min Read

அ.இ.அ.தி.மு.க.வை பிஜேபிக்கு அடமானப் பொருளாக வைத்துவிட்ட அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எந்த அளவுக்குச் சென்று இருக்கிறார் தெரியுமா?

தமிழ்நாட்டு அரசின் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.) உள்ளிட்ட அதிகாரிகளை தேர்தல் ஆணையம் திடீரென்று மாற்றியதற்கு வக்காலத்து வாங்கிப் பேசும் அளவுக்குத் தடுமாறி விட்டார் பழனிசாமி.

செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: ‘‘துணை முதலமைச்சர் உதயநிதி பேசுவதற்கு வேறு ஒன்றும் இல்லை, அரசியல் ரீதியாகப் பேசினால் பதில் சொல்லலாம்; திட்டமிட்டு தனிப்பட்ட முறையில் விமர்சித்தால் அதற்கு தகுந்த பதிலடி நாங்களும் கொடுப்போம். சென்னை, தி.மு.க.வின் கோட்டை என்கிறார்கள்; இனி சென்னை அ.தி.மு.க.வின் கோட்டையாக மாறும்.

‘தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டதற்கு முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அவர்கள் அதிகாரிகளை நம்பித்தான் இருக்கிறார்கள். மக்களை நம்பி இல்லை. ‘நேர்மையாக தேர்தல் நடத்த வேண்டும்!’ என்று தேர்தல் அதிகாரிகள் விரும்புகிறார்கள். அதனடிப்படையில் மாற்றுகிறார்கள். அதில் இவர்களுக்கு என்ன கஷ்டம்? தி.மு.க. ஆட்சியில் இருந்தது அந்த அதிகாரிகள் தானே? அவர்கள் தி.மு.க. அரசுக்கு ஆதரவாக இருந்தார்கள். மக்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் புகார்கள் தேர்தல் அதிகாரிகளுக்குப் போய் இருக்கிறது. அந்த அடிப்படையில் நடுநிலையோடு தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காக இந்த மாற்றம் நடந்திருக்கிறது’’. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழர் தலைவர் – திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நேற்றைய ‘விடுதலை’யில் ஒன்றிய பிஜேபி அரசு அதன் ஏவல் கணையாகிய தேர்தல் ஆணையத்தை நோக்கிச் திக்குமுக்காடும் அளவுக்கு  சரமாரியான வினாக்களை எழுப்பியுள்ளார்.

இதே கால கட்டத்தில் அசாம் மாநிலத்திலும் தேர்தல் நடக்கிறது; அங்கெல்லாம் ஒரு சிறு அதி்காரியைக்கூட இடமாற்றம் செய்யவில்லை.

அதே நேரத்தில், பிஜேபி ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மட்டும் தேர்தல் அதிகாரிகளை மாற்றுவது ஏன்? என்ற மென்னியைப் பிடுக்கும் வினாக் கணைகளைத் தொடுத்துள்ளார்.

இந்த வினாக்களுக்குப் பிஜேபிக்காரர்கள் பதில் சொல்லவில்லை – தேர்தல் ஆணையம் மூச்சு விடவில்லை.

மாறாக ‘எங்களப்பன் குதிருக்குள் இல்லை’ என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர், ‘முந்திரிக்கொட்டை’த் தனமாக முந்திக் கொண்டு பதில்(?) சொல்லியிருக்கிறார்.

‘நேர்மையாக தேர்தல் நடத்த வேண்டும்’ என்று தேர்தல் அதிகாரிகள் விரும்புகிறார்களாம். அதன் அடிப்படையில் தான் அரசு அதிகாரிகள் மாற்றப்படுகிறார்களாம்!

இதன் மூலம் தன்னையறியாமலேயே ‘பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டது’.

பி.ஜே.பி – அ.இ.அ.தி.மு.க உடன் கூட்டு எண்ணத்தோடு தான் இது நடந்திருக்கிறதோ என்ற அய்யப்பாட்டைத்தான் இது ஏற்படுத்துகிறது.

நாணயம் இருந்தால் தமிழ்நாட்டுத் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இன்னின்ன தவறுகளைச் செய்திருக்கிறார்கள்; ஒரு சார்பாக நடந்திருக்கிறார்கள் என்று குற்றப்பத்திரிகை வாசித்திருக்க வேண்டியதுதானே! அதைச் செய்யத் துப்பில்லை. ‘எடுத்தேன் – கவிழ்த்தேன்’ என்று திடுத் திப்பென்று  முக்கிய அதிகாரிகளை ஒரே நள்ளிரவில் மாற்றுகிறார்கள் என்றால், அதன் காரணம் என்ன? நோக்கம் என்ன?

அரசியலையும் கடந்து பொது மக்களுக்கு அய்யப்பாடு சந்தேகம் ஏற்படாதா? ‘சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்’ என்ற பழமொழி மெத்தப் படித்த தேர்தல் அதிகார வட்டாரத்திற்குத் தெரியாது போலும்!

‘144 ஆணை’ பிறப்பித்து பட்டுவாடா செய்த கட்சிக்குச் சொந்தக்காரரான எடப்பாடிக்கு இவை எல்லாம் மறந்து போய் விட்டதா?

வாக்கு எண்ணிக்கையின்போது ராதாபுரம் தொகுதியில் வேட்பாளர் அப்பாவு அவர்களை (இன்றைய தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர்) வெளியில் விரட்டியவர்கள்  யார் என்பதும் அப்படியே மறந்து போய்விட்டதா?

‘தோல்வி பயம்’ தோளைப் பிடித்து உலுக்குகிறது. கருத்துக் கணிப்புகளை எல்லாம் ஒரே மாதிரியாக ‘‘தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்’’ என்று அணி வகுத்து நிற்கின்றன.

என்ன செய்வார்கள்? இழக்கக் கூடாததை இழந்து விட்டதாக இப்பொழுதே படபடத்துப் போயிருக்கிறார்கள்! கட்சியைக் காப்பாற்றவே படாதபாடுபட்ட கூவத்தூர்க்காரர்கள், வரும் தேர்தலிலும் பெரும் தோல்வி துரத்துகிறது என்று தெரிந்தவுடன், திசை தடுமாறி நிற்கிறார்கள். ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்?’ என்ற பதற்றத்தில் எதை எதையோ பேசுகிறார்கள்!

நேர்மைக்குப் பேர் போனவர்கள் தமிழ்நாட்டு அதிகாரிகள். தேவையில்லாமல் தேன் கூட்டில் கை வைக்க வேண்டாம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர்களின் கடும் அதிருப்தியை விலை கொடுத்து வாங்குகிறார்கள்.

அச்சுறுத்தலாலோ, வேறு எந்தக் காரணத்தாலோ ஒரு காரியத்தைச் செய்யும்போது என்ன செய்கிறோம்? என்பதை அறியாமலேயே மனக்கிலேசத்தில் ஒன்றைச் செய்து விடலாம். அதன் பின்விளைவு என்ன என்று யோசிக்க வேண்டாமா?

இலட்சோப லட்ச அரசுப் பணியாளர்கள் – அவர்களின் குடும்பத்தவர் மத்தியில் – எத்தகைய எதிர் அலைகளை இது எழுப்பும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மாற்றப்பட்டது குறித்து பிரச்சினையை எழுப்பி இருக்கிறார்.

ஒரு முதலமைச்சர் ஒரு பிரச்சினையை எழுப்பும் போது – அதன் ‘பார தூர’ விளைவுகள் எத்தனை மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது முக்கியமானதாகும்!

என்ன செய்வது…! ‘பந்தயம் கட்டி தோற்றுப்போகிறேன்!’ என்று ஒருவர் முண்டாசைக் கட்டிக் கொண்டு முறுக்கிக் கிளம்பினால், நாம் ஏன் எதிர் பந்தயம் கட்ட வேண்டும்.

தமக்குத்தாமே வெகு மக்களின் வெறுப்புக்கு ஆளாகும் வேலையைச் செய்தால், ஒரு வகையில் தங்களின் எதிர் அணியினருக்கான வெற்றிப் பூமாலையைத் தொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று பொருள்!

‘உப்புத் தின்பவன் அதற்குரிய அளவுக்குத் தண்ணீரைக் குடித்துத்தான் தீர வேண்டும்’. தேர்தல் முடிந்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவரவர் மாநிலங்களுக்குச் சொகுசாக சென்று விடுவார்கள் – பிரச்சினை இல்லை.

ஆனால், அதிகப் பிரசங்கித்தனமாக ‘ஆப்பதனை அசைத்து விட்ட…’ கதை போல,  ஆற்றில் அடித்துச் செல்வோர் துரும்பு கிடைத்தால் அதைத் தூணாகக் கருதி, பாய்ந்து பிடித்தால் அதனால் பயன் என்ன? அதுதான் எடப்பாடியாரின் இன்றைய பரிதாப நிலை!

‘எதிர்க்கட்சித் தலைவர்’ என்ற முறையில் ஆளும் கட்சியின்மீது குற்றச்சாட்டுகளை வைக்கலாம் – அது நியாயமான எதிர்க்கட்சித் தலைவரின் கடமையும்கூட!

சட்டமன்றத்திலும் ‘எதிர்க்கட்சித் தலைவர்’ என்ற முறையில் பிரகாசிக்கவில்லை; தேர்தல் மேடையிலும் இந்த வகையில் ‘கெட்ட கனவின்போது எதை எதையோ சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறுவதுபோல’, பேசி வரும் மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர்  எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நமது அனுதாபத்தைத் தெரிவிக்க வாக்காளர்கள் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார்கள் என்பது நினைவிருக்கட்டும்! தேர்தல் பிரச்சாரத்துக்குக் கிடைத்திருக்கும் மிச்ச – சொக்க நாட்களிலாவது நிதானமாகப் பேசுவதும், நாகரிகமாகப் பேசுவதும் நல்லது!

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *