சென்னை, ஏப்.10 ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், நாட்டின் முன்னணி பொருளாதார நிபுணர்களில் ஒருவருமான பரகல பிரபாகர், பாஜகவிற்கு எதிராக மிகத்தீவிரமான அரசியல் நிலைப்பாட்டை எடுத்துள்ளது இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது..
இதுகுறித்த பிரத்யேக தகவல். அதை பற்றிய விவரம்:
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பரகல பிரபாகர் “ஜீரோ பிஜேபி மூவ்மெண்ட்” (Zero BJP Movement) என்ற இயக்கத்தின் அவசியத்தை மிகவும் ஆணித்தரமாக விளக்கினார்.. வரும் 2026 தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக்கூடாது என்பதே இந்த இயக்கத்தின் பிரதான நோக்கம் என்று அவர் அறிவித்துள்ளார்..
நிர்மலா சீதாராமன் கணவர்
ஜீரோ பிஜேபி மூவ்மெண்ட் என்ற இயக்கத்தின் சார்பில் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணருமான பரகல பிரபாகர் ஜீரோ பிஜேபி முயற்சி என்பது வெறும் அரசியல் ரீதியான போர் மட்டுமல்ல. இது தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும் நடத்தப்படும் ஒரு போர் என தெரிவித்துள்ளார்.
மேலும் பாஜகவிற்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் நமது அரசியலமைப்புச் சட்டம் போற்றி பாதுகாக்கும் மத நல்லிணக்கம் , மொழி நல்லிணக்கம், பிராந்திய நல்லிணக்கம், சுதந்திரம், மொழி சார்ந்த பன்முகத்தன்மை மற்றும் கலாச்சார தனித்துவத்தின் மேல் விழும் மரண அடியாகும் என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் எச்சரித்தார்..
ஜீரோ பிஜேபி மூவ்மெண்ட்
இது வெறும் அரசியல் ரீதியான போட்டி மட்டுமல்ல, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நடத்தப்படும் ஓர் அறப்போர் என்றும் வர்ணித்தார்.. வாக்காளர் பட்டியலில் இருந்து திட்டமிட்டு பெயர்கள் நீக்கப்படுவது போன்ற விவகாரங்களை சுட்டிக்காட்டிய அவர், ஜனநாயகத்தை காக்க மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.. குறிப்பாக, தமிழ்நாட்டில் 27 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களில் ஒருவரை கூட மக்கள் வெற்றி பெற வைக்கக் கூடாது என்று அவர் பகிரங்கமாகவே வேண்டுகோள் விடுத்தார்..
இதன் செயல்பாடு என்ன?
ஒன்றிய நிதியமைச்சர் கணவரின் இந்த பேச்சுதான் அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறது.. இந்த ‘ஜீரோ பிஜேபி மூவ்மெண்ட்’ என்பது என்ன?
இது ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அல்ல.. இது சமூக ஆர்வலர்கள், ஜனநாயகப் பற்றாளர்கள் மற்றும் அறிவு ஜீவிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய ஒரு பிரச்சார தளமாகும்..
இதன் பின்னணியில் எந்த ஒரு பெரிய அரசியல் கட்சியும் நேரடியாக இல்லை என்றாலும், இது தரைமட்டத்தில் சமூக ஊடகங்கள் மற்றும் சிறு கூட்டங்கள் வாயிலாக ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்கும் பணியை செய்கிறது..
நிதியமைச்சரின்
கணவரே?
குறிப்பாக, பாஜகவின் சித்தாந்தத்தை எதிர்க்கும் நடுநிலையாளர்களை சென்றடைவதே இதன் பலம்.. மத்தியில் மிக உயரிய பதவியான நிதியமைச்சர் பொறுப்பில் இருக்கும் நிர்மலா சீதாராமனின் கணவரே, ஆளுங்கட்சியின் அதிகார பலத்தையும், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளின் செயல்பாடுகளையும் விமர்சித்து வீதியில் இறங்கி பிரச்சாரம் செய்வது அரசியல் வட்டாரங்களில் பெருமளவில் புருவங்களை உயர்த்த வைத்துள்ளதாம்.
குறிப்பாக, பாஜகவின் கொள்கைகள் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிராக இருப்பதாக அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள், அக்கட்சியின் தேர்தல் வியூகத்திற்கு பெரும் முட்டுக்கட்டையாக அமையக்கூடும்.. வெறும் அரசியல் விமர்சனமாக மட்டுமல்லாமல், ஒரு பொருளாதார நிபுணராக நாட்டின் இப்போதைய சூழலை அவர் அணுகும் விதம் சாதாரண பொதுமக்களையும் சிந்திக்க தூண்டியுள்ளது.. இந்த தீவிர பிரச்சாரம் 2026 தேர்தல் முடிவுகளில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை அறிய அரசியல் நோக்கர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்களாம்…!!!

