சென்னை, பிப்.10 ‘ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும். 3 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் நிரப்பப்படும்’ என்பது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை தமிழ்நாடு காங்கிரஸ் அறிவித்திருக்கிறது.
பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அக்கட்சியின் 2026-ஆம் ஆண்டுக்கான தேர்தல் அறிக்கையை கருநாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் நேற்று (9.4.2026) மாலை சத்தியமூர்த்தி பவனில் வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கையில், ‘குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.2,000 நேரடியாகப் பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். அடுத்த 300 நாட்களுக்குள் அரசுத் துறைகளில் காலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்கள் அதிரடியாக நிரப்பப்படும்’ என்பது உள்ளிட்ட பல வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி சிதம்பரம், “அடுத்த அய்ந்து ஆண்டுகளில் நாம் முன்னெடுக்க வேண்டிய மக்கள் நலத் திட்டங்களையே அறிக்கையாகத் தந்துள் ளோம். இதில் உள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் முழு விவரங்களையும் மக்கள் அறியலாம்” என்றார்.
மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், “மக்கள் கருத்துகளைக் கேட்டுத் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை பாராட்டுக்குரியது” என்றார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை, “இந்த அறிக்கை சிறப்பாக அமைந்துள்ளது,” என்று கூறினார்.
இறுதியாகப் பேசிய டி.கே.சிவக்குமார், “நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என பாஜகவினர் கருநாடகாவில் கூறினார்கள். ஆனால், ஆறு மாதங்களிலேயே அனைத்தையும் செய்து முடித்துக் காட்டினோம். அதேபோல்தான் தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் – திமுக கூட்டணி வெற்றி பெற்று, மக்கள் நலன் காக்கும் திட்டங்களைச் செயல்படுத்தும்” என்றார்.
முன்னதாக டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “விஜய் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி. அவர் தன்னுடன் தமிழ் மாநில காங்கிரஸை வைத்திருப்பார் என்று நினைக்கிறேன். இந்திய தேசிய காங்கிரஸ் அவருடன் இல்லை. இந்திய தேசிய காங்கிரஸ் திமுக-வுடன் மட்டுமே இருக்கிறது. எங்களது இடங்களைக் குறைக்க திமுக நினைத்தாலும், காங்கிரஸ் கட்சியும் திமுக-வும் அனைத்து மாநிலக் கட்சிகளும் வலுவாக இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றன” என்றார்.
இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் நிவேதித் ஆல்வா, மூத்த தலைவர்கள் கே.வி. தங்கபாலு, திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா, ஜே.எம். ஆரூண்,இதயத்துல்லா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

