திண்டுக்கல்லில் எதிர்க்கட்சியினரின் அவதூறு பிரச்சாரங்களைக் கண்டித்து கழகத் தலைவர் ஆசிரியர் பதிலடி!

5 Min Read

இது பெரியார் மண்! அண்ணா ஆண்ட மண்! கலைஞர் ஆண்ட மண்!
மு.க.ஸ்டாலின் ஆண்ட மண், ஆளப்போகிற மண்!

திண்டுக்கல்,  ஏப்.10 ‘‘கடந்த 5 ஆண்டுகளில் திராவிட மாடல் அரசு மகத்தான சாதனைகளை படைத்து வந்திருக்கிறது. ஆகவே, அவர்கள் தங்கள் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கிறார்கள். ஆனால், எதிர்க்கட்சிகள் அவர்கள் செய்த சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க இயலாமல் அவதூறுகளையும், பொய்களையும் அவிழ்த்து விடுகிறார்கள். அது ஒரு நாளும் பயன் தராது. காரணம், இது பெரியார் மண்! அண்ணா ஆண்ட மண்! கலைஞர் ஆண்ட மண்! மு.க.ஸ்டாலின் ஆண்ட மண்! ஆளப்போகிற மண்!’’ என்று திண்டுக்கல் தொகுதியில் மக்களின் பலத்த ஆரவாரத்திற்கிடையே, கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

திண்டுக்கல் தொகுதி திமுக வேட்பாளர்
அய்.பி.செந்தில்குமார்

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் திண்டுக்கல் தொகுதி திமுக வேட்பாளரான அய்.பி.செந்தில்குமார் அவர்களை ஆதரித்து, நேற்று (9.4.2026) காலை 10 மணிக்கு திண்டுக்கல் மாவட்டம் மேற்கு மரியநாதபுரம் – மக்கள் மன்றம் அருகில் பரப்புரைக் கூட்டம், திண்டுக்கல் மாவட்டக் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வேட்பாளர் அய்.பி.செந்தில் குமார் அவர்கள் தெருத்தெருவாக பிரச்சாரம் செய்து கொண்டு, நிகழ்விடத்துக்கு 10.20 மணிக்கு வருகை தந்தார்.‌ முன்னதாகவே திராவிடர் கழகத் தலைவர் நிகழ்விடத்துக்கு வருகை தந்திருந்தார்.

திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேரு, திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற தி.மு.க. வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திண்டுக்கல் தொகுதி சட்டமன்ற தி.மு.க. வேட்பாளர் அய்.பி.செந்தில்குமார் ஆகியோருக்கு வாக்குச் சேகரித்து, தேர்தல் பரப்புரையாற்றினார் தமிழர் தலைவர் ஆசிரியர் (9.4.2026).

இந்நிகழ்வில், திண்டுக்கல் மாவட்ட கழகத் தலைவர் வீரபாண்டியன் தலைமையேற்க, மாவட்ட கழகச் செயலாளர் வழக்குரைஞர் ஆனந்த முனிராசன், தொழிலாளர் பேரவைச் செயலாளர் நாகராஜன், பழனி மாவட்ட கழகச் செயலாளர் அருண்குமார், மாவட்டத் துணைச் செயலாளர் ஜெயப்பிரகாஷ், நகரத் தலைவர் மாணிக்கம், நகரச் செயலாளர் செல்வம், மாவட்டத் துணைத் தலைவர் கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறைவாக கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

அவர் தனது உரையில், உற்சாகத்துடன் இருந்த திண்டுக்கல் பகுதி மக்களைப் பார்த்து, ‘‘நான் உங்களிடம் வாக்கு கேட்க வரவில்லை. நீங்கள் ஏற்கெனவே யாரைத் தேர்வு செய்வது என்பதை முடிவு செய்து விட்டீர்கள். அதை மலர்ந்து இருக்கும் உங்கள் முகமே காட்டிக் கொடுக்கிறது’’ என்று உற்சாகத்துடன் தொடங்கினார். ‘‘நமது எண்ணங்களை அப்படியே பிரதிபலித்து விட்டாரே’’ என்று கூடியிருந்த மக்கள் அதே உற்சாகத்துடன் கைதட்டி, கழகத் தலைவரின் கருத்துக்கு தங்களது ஒப்புதலை தெரிவித்தனர்.

தொடர்ந்து, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் வேறொரு பரிமாணத்தை விவரித்தார். அதாவது, ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய் என்பது மிக முக்கியமானது தான். ஆனால், ஆண்டாண்டு காலமாய் பெண்கள் வீட்டில் தங்களின் உழைப்புக்கு அங்கீகாரம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த நிலையில், ‘திராவிட மாடல்’ அரசு அந்த உழைப்புக்கு அங்கீகாரம் தந்திருக்கிறது என்பதுதான் மிக மிக முக்கியமானது’’ என்றார். இந்தக் கோணத்தில் பெரிதாகப் பேசப்படுவதில்லை என்பதால், பெண்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கைதட்டி தங்கள் உணர்வுகளுக்கு வடிகால் அமைத்துக் கொண்டனர்.

திராவிடர் கழகம்

எதிர்க்கட்சிகள் நம்மை நோக்கி சவால் விடவில்லை; சவடால் விடுகின்றனர்!

ஆசிரியர் அவர்கள், மேலும் ஒரு முக்கியமான அவதானிப்பை வெளியிட்டார். அதாவது, ‘திராவிட மாடல்’ அரசின் மக்கள் நலத் திட்டங்களை எதிர்க்க முடியாமல், எதிர்க்கட்சியினர் முன்னுக்குப் பின் முரணாக மாறி மாறி பேசி வருவதைச் சுட்டிக்காட்டி, ‘‘எதிர்க்கட்சிகள் நம்மை நோக்கி சவால் விடவில்லை. சவடால் விடுகின்றனர்’’ என்று அலட்சியப்படுத்தினார். மேலும், புதுமைப்பெண் திட்டத்தைப் பற்றி விரிவாகப் பேசிய கழகத் தலைவர், ‘‘இப்போது மாணவர்களும் எங்களுக்கு மட்டும் கிடையாதா?’’ என்று கேட்டு, ‘‘அவர்களுக்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் வந்திருக்கிறது’’ என்பதை நினைவூட்டி, ‘‘ஆண்களுக்கு நிகராக பெண்கள் வரவேண்டும் என்பதையும் தாண்டி, பெண்களுக்கு நிகராக ஆண்கள் வரவேண்டும் என்ற நிலையை திராவிட இயக்கம் உருவாக்கி இருக்கிறது’’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டதும், நிறைந்த கைதட்டல்களால் அந்த இடமே அதிர்ந்தது. அதில் பெண்களின் பங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, ‘தாயுமானவர்’, ‘முதியோர் ஓய்வூதியம்’ என்று திராவிட மாடல் அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு, ‘‘சாதனைகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், சொல்லிக் கொண்டே… இருக்கலாம். அவ்…வளவு இருக்கிறது’’ என்றார்.

திராவிடர் கழகம்

வியாபாரிகள் சங்கப் பொறுப்பாளர்களே நன்றி உணர்ச்சியோடு வெளிப்படுத்தி இருக்கின்றனர்!

அடுத்து, தொழில்துறையில் ‘திராவிட மாடல்’ அரசு இந்தியாவிலேயே முதன்மை இடத்தைப் பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டி, அதை மேலும் விரிவு படுத்துவதற்காக அடுத்து வரும் ‘திராவிட மாடல்’ அரசில் ஒரு குடும்பத்துக்கு 8000 ரூபாய் மதிப்புள்ள கூப்பன் தரப்படும் என்ற தேர்தல் அறிக்கையைச் சுட்டிக்காட்டி, ‘‘இந்தத் திட்டத்தை பெண்களுக்கான திட்டம் என்பதோடு மட்டும் சுருக்காமல், வியாபாரிகளுக்கும் மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்கும் என்பதையும், அதையும் வியாபாரிகள் சங்கப் பொறுப்பாளர்களே நன்றி உணர்ச்சியோடு வெளிப்படுத்தி இருக்கின்றனர்’’ என்பதையும் எடுத்துரைத்து, ‘திராவிட மாடல்’ அரசின் ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்ற கோட்பாட்டை உறுதிப்படுத்தினார்.‌

அரியமங்கலத்தில் தமிழர் தலைவரின் தேர்தல் பிரச்சாரம் (9.4.2026)

மக்களின் மனநிலை என்ன என்பதை
அறிந்தவன் நான்!

மேலும் அவர், திராவிடர் கழகத்தின் தேர்தல் பற்றிய நிலைப்பாட்டை விவரிக்க முனைந்தார். அதாவது, ‘‘நாங்கள் தேர்தலை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது என்பதாக மேலோட்டமாக பார்க்காமல்,  அடுத்து வரும் தலைமுறையினரின் நல் வாழ்வுக்கு உத்திரவாதம் தருகின்ற ஒரு தேர்தலாகத்தான் நாங்கள் அணுகுகின்றோம்’’ என்றார். தொடர்ந்து அவர், ‘‘தனக்கு 93 வயதாகிறது’’ என்றதும், அடுத்துத் தொடர்வதற்கு முன்பே, 93 வயதுக்காரரா இப்படி எல்லாம் பேசுகிறார் என்று வியந்த வண்ணம் கவனித்தனர். கழகத் தலைவர் தொடர்ந்தார். ‘‘நான் 17+1, 18 தேர்தல்களை சந்தித்து இருக்கிறேன். ஒவ்வொரு தேர்தலிலும் மக்களின் மனநிலை என்ன என்பதையும் அறிந்திருக்கிறேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன் மீண்டும் ‘திராவிட மாடல்’ அரசு தான் அமையப்போகிறது’’ என்று எதிர்பார்த்திருந்த கருத்தை வெளியிட்டதும், பலத்த கைதட்டல் செய்து மக்கள் அதை வரவேற்றனர்.  அடுத்து, ‘‘ஒன்றிய அரசு தேர்தல் ஆணையத்தின் மூலம் தனது ‘சித்து’ விளையாட்டை நடத்தத் தொடங்கி விட்டது’’ என்பதையும் சுட்டிக்காட்டி, ‘‘ஆனாலும் திராவிட மாடல் அரசுதான் மறுபடியும் வெற்றி பெறும்’’ என்று அழுத்தம் திருத்தமாகக் கூறி, தனது உரையை நிறைவு செய்தார்.

அரியமங்கலத்தில்
தமிழர் தலைவரின்
தேர்தல் பிரச்சாரம் (9.4.2026)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *