சென்னை, ஏப்.9 கல்பாக்கத்தில் அமைக்க உள்ள ஈனுலைத் திட் டத்தைக் கைவிட வேண்டும் என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அவர் நேற்று (18.4.2026) வெளியிட்ட அறிக்கை: கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட மாதிரி வேக ஈனுலை, ஏப்-6ஆம் தேதி முதலாவது அணுப்பிளவு செயல்பாட்டு நிலையை எட்டியதாக பிரதமர் மோடி சமூக ஊடகங்களின் வாயிலாக வெளியிட்டார்.
ஒன்றிய அணுசக்தித் துறை, கல்பாக்கம் அணுவுலை வளாகத்தில் 500 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட மாதிரி அதிவேக ஈனுலையை 20 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டத் தொடங்கியது. 2004-ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, இத்திட்டம் 2010-ஆம் ஆண்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தது.
ஈனுலை தொழில் நுட்பம் பாதுகாப்பற்றது, தேவையற்றது, அதிக பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால் அமெ ரிக்கா, ஜப்பான் மற்றும் அய்ரோப்பிய நாடுகள் அதை கைவிட்டன.
இவ்வகை உலைகளில் குளிர் விப்பானாக பயன்படுத்தப்படும் திரவ சோடியம் கசிந்த காரணத்தால் ஜப்பானில் மாஞ்சூ ஈனுலையில் தீ விபத்து ஏற்பட்டு அவ்வுலை மூடப்பட்டது.
பிரான்சில் செயல்பட்டு வந்த சூப்பர் பீனிக் ஈனுலையும் அதிக பொருளாதாராச் சுமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மை, பொதுமக்கள் போராட்டம் உள்ளிட்ட காரணங் களால் மூடப்பட்டது.
இவ்வுலைகளில் இருந்து வெளியாகும் கழிவுகள் அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படலாம் என்கிற சந்தேகத்தையும், பல அணுசக்தித் துறை நிபுணர்கள் எழுப்பி யுள்ளனர்.
ஏற்கனவே, கூடங்குளத் தில் 6 அணுவுலைகளும், அணுக்கழிவு மய்யங்களும் ஒன்றிய அரசு அமைத் திருக்கிறது. இப்போது, ஆபத்துமிக்க ஈனுலைகளைச் செயல்படுத்தி தமிழ்நாட்டுமக்களை கதிரியக்க அபாயத்தில் தள்ளுகிறது மோடி அரசு.
தமிழ்நாட்டு மக்களை சோதனை எலிகளாக்கி ஈனுலையை செயல் படுத்த முயலும் பாஜக அரசை வன்மையாகக் கண்டிப்பதோடு, இத்திட்டத்தை உடனடியாக கை விட வேண்டும். இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

