மதுரை தெற்கு பா.ஜ.க. வேட்பாளரான ராம சிறீனிவாசன் என்பவர் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்தபிறகு அவருக்குத் துணையாக இருந்த மகாராட்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவீஸ் அளித்த பேட்டியின் போது –
‘‘பா.ஜ.க. இங்கு ஆட்சியில் அமர்ந்தால் தான் மதுரைக்கும் – கோவைக்கும் மெட்ரோ ரயில்கள்வரும் இல்லையென்றால்…?’’ என்று மிரட்டும் பாணியில் பேசியுள்ளார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, ஒரு மாநிலத்தின் முதலமைச்சரோ அல்லது அமைச்சரோ பதவி ஏற்கும் போது, “விருப்பு வெறுப்பின்றி, அனைவருக்கும் பொதுவானவராகச் செயல்படுவேன்” என்றுதான் உறுதிமொழி ஏற்கின்றனர். ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களித்தால் மட்டுமே ஒன்றிய அல்லது மாநில அரசின் திட்டங்கள் ஒரு மாநிலத்துக்குக் கிடைக்கும் என்று பேசுவது, அந்த உறுதிமொழியைப் பகிரங்கமாக (அலட்சியம் செய்து) மீறும் செயலாகும்.
மக்களாட்சியில் ஒரு திட்டத்தைச் செயல்படுத்துவது என்பது அரசின் கடமையே தவிர, அது வாக்காளர்களுக்கு அளிக்கப்படும் சலுகை அல்ல. “வாக்களித்தால் மட்டுமே வளர்ச்சி” என்கிற ரீதியில் பேசுவது, மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களைக் காட்டி அவர்களை மிரட்டுவது எந்த விதத்தில் சரி? “அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் பதவியில் இருப்பவர்கள், அனைத்து குடிமக்களுக்கும் சமமான சேவையை வழங்கக் கடமைப்பட்டவர்கள்.மாறாக சட்டத்தைத் தன்கையில் எடுத்துக் கொண்டு, பாரபட்சமாகப் பேசுவது முழுக்க முழுக்க பச்சைப் பாசிசமாகும்.
இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தின்படி, ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் இணைந்து செயல்பட வேண்டும். ‘ஒரு குறிப்பிட்ட கட்சி’ ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்குத் திட்டங்களைப் பெற்றுத்தர மாட்டோம் என்று மறைமுகமாக உணர்த்துவது, மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் செயலே! இது ஒருவகையான தரமற்ற அதிகார மிரட்டலே!
மதுரை மெட்ரோ போன்ற முக்கியப் போக்குவரத்துத் திட்டங்கள் மக்களின் நீண்ட காலத் தேவையாக இருக்கும் நிலையில், அதை அரசியலாக்குவது முறையாகுமா?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும் இது தொடர்பாக கடும் கண்டனத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்:
‘‘பா.ஜ.க. வேட்பாளரை வெற்றி பெற வைத்து
எம்.எல்.ஏ.–வாக தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், ‘பிளாக்மெயில்’ செய்வதும்தான் மகாராட்டிர முதலமைச்சரின் வேலையா? அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு முதலமைச்சர், எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் வந்து இப்படி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும். நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசின் புறக்கணிப்பை மீறி, தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வரும் சாதனைத் திட்டங்கள் எத்தனை என்று அவருக்குத் தெரியுமா? தெரியாவிட்டால் கேட்டுத் தெரிந்துகொண்டு பேச வேண்டும். ‘டபுள் எஞ்சின்’ என்று நீங்கள் பீற்றும் டப்பா எஞ்சின் மாநிலங்களையும் தாண்டி, திராவிட மாடல் (Dravidian Model) ஆளும் தமிழ்நாடுதான் இரட்டை இலக்கப் (Double Digit) பொருளாதார வளர்ச்சியைச் சாதித்துள்ளது என்பது நினைவில் இருக்கட்டும்’’ என்று பதிவிட்டுள்ளார் – நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்.
‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் மிகச் சரியாக சாட்டை அடிபோல் கருத்தினைப் பதிவு செய்துள்ளார்.
இவ்வளவுக்கும் தேவேந்திர பட்னாவிஸ் இன்னொரு மாநிலத்தின் முதலமைச்சர் அவ்வளவுதான்!
இந்த நிலையில், மட்டுமே உள்ள ஒருவர் சர்வ அதிகாரம் படைத்தவர் போல பேசுவது – ஆணவத்தின் வெளிப்பாடு அல்லது அறியாமையின் வெளிச்சமாகும். பா.ஜ.க.வில் தடி எடுத்தவர் எல்லாம் தண்டல்காரர்கள் போலும்!
மதுரைக்கு வந்து இப்படி கூறியிருப்பது ஒரு வகையில் ‘நல்லது’ தான்!
மதுரை மற்றும் கோவை வாக்காளர்கள் பா.ஜ.க. வேட்பாளர்களுக்குச் சரியான பாடம் கற்பிப்பார்கள்.
‘இவ்வளவு காலம் மதுரை மற்றும் கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வராததற்குக் காரணம் – வஞ்சக மனம் கொண்ட பச்சை பா.ஜ.க. அரசியலே’ என்பது அம்பலமாகி விட்டது.
ஒன்றிய அரசானது அனைத்து மாநில மக்களுக்கும் பொதுவானதல்ல; கெட்ட அரசியல் நோக்கம் கொண்டது என்பதற்கான வாக்குமூலம்தான் மகாராட்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அளித்துள்ள பேட்டி! அதுவே அவர்களின் (பா.ஜ.க.) முகத்திரையை முழுவதுமாகக் கிழித்து விட்டது.
தமிழ்நாடெங்கும் இதே முறையில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பிஜேபியினர் பேசட்டும், பேசட்டும்! அது பிஜேபியின் வீழ்ச்சிக்கு அவர்களே (தனக்கு தானே) குழி வெட்டிக் கொள்ளும் வேலை செய்தவர்களாக அமையும் அல்லவா!
‘நுணலும் தன் வாயால் கெடும் என்பார்களே’ அது இதுதான்!

