பஞ்சாயத்துத் தேர்தலில் கூட நிற்காத திராவிடர் கழகம், வேட்பாளர்களை விட மிகுந்த அக்கறையுடன் ஏன் இப்படி அலைந்து திரிந்து பிரச்சாரம் செய்கின்றது?
எங்களுக்காக அல்ல; உங்கள் சந்ததிகளுக்காக; அவர்களின் கல்வி உரிமைக்காக; வேலைவாய்ப்பு உரிமைக்காக; அடுத்த தலைமுறையின் சுயமரியாதைக்காக!
கம்பம், ஏப்.9 ‘‘பஞ்சாயத்துத் தேர்தலில் கூட நிற்காத திராவிடர் கழகம், வேட்பாளர்களை விட மிகுந்த அக்கறையுடன் ஏன் இப்படி அலைந்து திரிந்து, பிரச்சாரம் செய்கின்றது? எங்களுக்காக அல்ல! உங்கள் சந்ததிகளுக்காக; அவர்களின் கல்வி உரிமைக்காக; வேலைவாய்ப்பு உரிமைக்காக; அடுத்த தலைமுறையின் சுயமரியாதைக்காக!’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கம்பம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் நா.இராமகிருஷ்ணன்
கம்பம் மாவட்டக் கழகத்தின் சார்பில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் வேட்பாளர் நா.இராமகிருஷ்ணன் அவர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரைக் கூட்டம் 8.4.2026 புதன்கிழமை அன்று, மாலை 5 மணிக்கு, கம்பம் காந்தி சிலை அருகில், வ.உ.சி. திடலில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வில், திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜனார்த்தனன் தலைமை ஏற்க, மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன், மாவட்டச் செயலாளர் செந்தில், கழகக் காப்பாளர் கருப்புச் சட்டை நடராஜன், கம்பம் தொகுதி வேட்பாளர் நா.இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
முன்னதாக சரியாக 5 மணி அளவில் கழகச் சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் தொடக்க உரையாற்றினார். நிறைவாக கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுச்சி உரையாற்றினார்.
மறுபடியும் ‘‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’’ பதவியேற்பது நிச்சயம்
அவர் தமது உரையை, தனது வாகனத்தை சூழ்ந்து நின்ற ஏராளமான மக்களை பார்த்து, ‘‘கம்பம் தொகுதியில் மக்கள் வெள்ளம் போல் திரண்டு இருப்பதைப் பார்த்தால், மறுபடியும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பதவியேற்பது நிச்சயம்’’ என்று பலத்த கைதட்டல்களுடன் உற்சாகமாகத் தொடங்கினார். தொடர்ந்து, தேர்தல் களத்தில் நிற்கும் இரண்டு முக்கிய அணிகளை எடுத்துக்கொண்டு, ‘‘நமது அணி 5 ஆண்டுகளில் செய்த சாதனைகளைச் சுட்டிக்காட்டி மீண்டும் அது தொடர வேண்டாமா என்று கேட்கிறோம்’’ என்றும், ‘‘அடுத்த அணி சாதனைகளைச் சொல்வதற்கு வாய்ப்பு இல்லாமல், அவதூறு பேசுகிறது’’ என்றும் குறிப்பிட்டார். மேலும் அவர், ‘‘இன்றைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய ஆட்சியில் பலன் பெறாத ஒரு குடும்பத்தையாவது தமிழ்நாட்டில் காட்ட முடியுமா?’’ என்றொரு ஆழமான கேள்வியை எழுப்பினார். கழகத் தலைவரின் கேள்விக்கு, மக்கள் ‘இல்லை’ என்பதைப் போன்று தலையை அசைத்து, பதில் அளித்தனர். அடுத்தும் ஒரு பொருத்தமான கருத்தை முன்வைத்தார். அதாவது, ‘‘வாக்களிக்காதவர்களுக்கும் இந்த ஆட்சியை விட்டால் இதுபோன்ற ஒரு பொற்கால ஆட்சியை மறுபடியும் பார்க்க முடியுமா என்றே எண்ணுகின்றனர். அதனால்தான் ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு ஆதரவு பெருகிக் கொண்டிருக்கின்றது’’ என்றார். ஆசிரியர் அவர்களின் கருத்து மக்களுக்கு ஏற்பு என்பதைப் போல கைகளை பலமாகத் தட்டி, அந்தக் கருத்தை ஆதரித்தனர்.
தொடர்ந்து, ‘திராவிட மாடல்’ அரசின் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் எட்டியிருக்கும் சாதனைகளைப் பட்டியலிட்டார். குறிப்பாக மகளிருக்கான திட்டங்களை, நூறாண்டு கால தத்துவ பின்னணியோடு எடுத்துரைத்து, அடுத்த ஆட்சியில் இன்னும் கூடுதலாகக் கிடைக்கும் என்பதையும் தரவுகளோடு எடுத்துரைத்தார். அடுத்து, தமிழ் மொழிக்கு, தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதிக்கு – இழைக்கப்படும் வஞ்சனையை, நம்முடைய முதலமைச்சர் துணிச்சலோடு கேள்விகள் கேட்பதையும் சுட்டிக்காட்டி, ‘‘அதனாலேயே இந்த ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்றும் எண்ணுகிறார்கள்’’ என்பதையும் நினைவுபடுத்தினார்.
திராவிடர் கழகம் தேர்தல் பிரச்சாரம் செய்வது ஏன்?
மேலும் பேசிய அவர், ‘திராவிட மாடல்’’ ஆட்சிக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், தேர்தல் ஆணையத்தை வைத்து சித்து வேலை செய்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்ட, ‘‘நீங்கள் டி.ஜி.பி.யை மாற்ற முடியும்; தலைமைச் செயலாளரை மாற்ற முடியும்; வாக்காளர்களை ஏமாற்ற முடியுமா? ஆகையால் தான் சொல்கிறோம், மறுபடியும் மு.க.ஸ்டாலின் தான் முதலமைச்சர்!’’ என்று உரத்த குரலில் முழங்கினார். அதைக் கண்டு மக்கள் ஆர்ப்பரித்தனர். மேலும் அவர், திராவிடர் கழகத்தின் வேண்டுகோளில் இருக்கும் ஆழத்தை மக்களுக்கு விவரிக்க, ‘‘ஒரு பஞ்சாயத்துத் தேர்தலில் கூட நிற்காத திராவிடர் கழகம் வேட்பாளர்களை விட மிகுந்த அக்கறையுடன் ஏன் இப்படி அலைந்து திரிந்து, பிரச்சாரம் செய்கின்றது? இது எங்களுக்காக அல்ல! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அல்ல! கம்பம் தொகுதியின் வேட்பாளர் இராமகிருஷ்ணனுக்காக அல்ல! உங்களுக்காக; உங்கள் சந்ததிகளுக்காக; அவர்களின் கல்வி உரிமைக்காக; வேலைவாய்ப்பு உரிமைக்காக; அடுத்த தலைமுறையின் சுயமரி யாதைக்காக’’ என்று அடுக்கடுக்காக திராவிடர் கழகத்தின் நிலைப்பாட்டை நிலை நிறுத்தினார். தொடர்ந்து, கம்பம் நா.இராமகிருஷ்ணன் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும் படி கேட்டு, தனது உரையை நிறைவு செய்தார்.
போடிநாயக்கனூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம்
கம்பம் தொகுதியில் பரப்புரையை நிறைவு செய்துவிட்டு போடிநாயக்கனூர் தொகுதிக்கு இரவு 8.10 மணிக்கு கழகத் தலைவர் சென்று சேர்ந்தார். தேனி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கழகத் தலைவருக்கு பேண்டு வாத்தியங்களுடன் உற்சாகமாக வரவேற்பளிக்கப்பட்டது. வாத்திய இசையுடன் ஊர்வலமாக கூட்டம் நடைபெறும் தேவர் சிலை முன்பு அழைத்துவரப்பட்டார். அவர் நிகழ்விடத்திற்கு வந்தவுடன் மழை பெய்யத் தொடங்கிவிட்டது. சிறு தூறலாக தொடங்கி அதிகமானது. மக்கள் கடையோரங்களில் ஒதுங்கி கழகத் தலைவரின் உரையைக் கேட்க ஆவலாக காத்திருந்தனர். அங்கு திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை ஆதரித்து, பரப்புரை செய்யும் விதமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முன்னதாக, கழகச் சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் உரையாற்றியிருந்தார். நிகழ்வில் மாவட்டக் காப்பாளர் ரகுநாதநாதன் தலைமை ஏற்க, மாவட்டச் செயலாளர் மணிகண்டன் வரவேற்பு கூறினார். மாவட்டத் தலைவர் சுருளி ராஜன், போடி நகரத் தலைவர் பெரியார் லெனின், பொதுக்குழு உறுப்பினர் பேபி சாந்தா தேவி, அன்புக்கரசன், ஸ்டார் நாகராசன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். மழை காரணமாக கழகத் தலைவர் வாகனத்தில் உள்ளிருந்தபடியே தனது உரையை தொடங்கினார்.
இன்றைய முதலமைச்சர் மட்டுமல்ல, நாளைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான்!
அவர் தமது உரையில், ‘‘இன்றைய முதலமைச்சர் மட்டுமல்ல, நாளைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான்’’ என்று, மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கி, மக்களையும் எழுச்சி பெற வைத்தார். தொடர்ந்து போடி தொகுதியின் வேட்பாளர், ஓ.பி.எஸ். அவர்களின் சிறப்புகளை பட்டியலிட்டு பாராட்டிப் பேசினார். பேசிக் கொண்டிருக்கும்போதே தொகுதியின் வேட்பாளர் ஓபிஎஸ் அவர்கள் வருகை தந்து கழகத் தலைவரை சந்தித்து மகிழ்ந்தார். மழையும் ஓரளவுக்கு குறைந்து, ஒதுங்கி இருந்த மக்கள் மெதுவாக மீண்டும் அந்தத் திடலில் திரளத் தொடங்கினர். தொடர்ந்து அவர், அ.இ.அ.தி.மு.க.வின் கடந்த கால நிலையை சுட்டிக்காட்டி பேசினார்.
அதாவது, ‘‘அன்றைய முதல மைச்சராக இருந்த அம்மையார் அவர்கள், ‘‘மோடியா? லேடியா?’’ என்று கேட்ட நிலைமைகள் மாறி, இன்றைக்கு டில்லியில் இருந்து அமித்ஷா ‘‘ஓடி வா?’’ என்றால் எடப்பாடியார் ஓடுகிறார் என்கிற அளவுக்கு மாறி இருக்கிறது’’ என்று வேதனையுடன் சுட்டிக் காட்டினார். தமிழ்நாடு அதிகக் கடன் வாங்கி விட்டது என்பதை திரும்பத் திரும்ப எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்து செய்து வருவதை முறியடிக்க, ‘‘ஒன்றிய அரசு கடந்த 12 ஆண்டுகளில் 200 லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறது” என்றும், 13 லட்சம் கோடியை வட்டியாக மட்டுமே ஆண்டு ஒன்றுக்கு செலுத்தப்பட்டு கொண்டிருக்கிறது’’ என்றும், ‘‘இது ஒன்றிய அரசின் மொத்த வருமானத்தில் 34 விழுக்காடு’’ என்பதையும் பதிலடியாகத் தந்தார்.
கடந்த அய்ந்து ஆண்டுகளில் ‘திராவிட மாடல்’ ஆட்சி செய்த சாதனைகள்!
அதேசமயம் தமிழ்நாடு அரசின் கடன் அளவு வரம்புக்குள் இருப்பதையும், அது, கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் முதலீடு செய்யப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும் அவர், பொதுத்துறைகளை தனியார் துறைகள் ஆக்கி வரும் மோடி அரசின் அவ லத்தைச் சுட்டிக்காட்டி, அப்படி ஆக்கப்பட்ட அதானி துறைமுகத்திலிருந்து தான் போதைப் பொருட்கள் ஏராளமாக வருகின்றன என்பதையும் விவரித்து, கடந்த அய்ந்து ஆண்டுகளில் திராவிட மாடல் ஆட்சி செய்த சாதனைகள் தொடரவும் மக்களின் எதிர்காலம் செழிக்கவும் மீண்டும் திராவிட மாடல் ஆட்சிக்கு உங்கள் ஆதரவை வழங்க வேண்டும். நீங்கள் ஏற்கெனவே முடிவு செய்து விட்டீர்கள் மறுபடியும் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் அமையும் என்பதைக் கூறி தமது உரையை நிறைவு செய்தார். நிகழ்ச்சியில், இந்தியா கூட்டணி கட்சிப் பொறுப்பாளர்கள், தோழர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

