சொன்னதை செய்யாத அணி பா.ஜ.க. கூட்டணி; சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்த அணி தி.மு.க. கூட்டணி!
5 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு ‘‘காலைச் சிற்றுண்டித் திட்டம்!’’
‘திராவிட மாடல்’ ஆட்சி மீண்டும் வந்தவுடன்,
இத்திட்டம் 8 ஆம் வகுப்புவரை விரிவுபடுத்தப்படும்!
விருதுநகர், ஏப்.9 சொன்னதை செய்யாத அணி பா.ஜ.க. கூட்டணி; சொன்னதை செய்த அணி தி.மு.க. கூட்டணி. சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும், அதாவது 5 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு ‘‘காலைச் சிற்றுண்டித் திட்டம்’’ கொண்டு வந்த ‘திராவிட மாடல்’ ஆட்சி மீண்டும் வந்தவுடன், இத்திட்டம் 8 ஆம் வகுப்புவரை விரிவுபடுத்தப்படும்’’ என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
விருதுநகர் சட்டமன்றத் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்துத்
தமிழர் தலைவர் ஆசிரியர் தேர்தல் பரப்புரை
7.4.2026 அன்று மாலை விருதுநகர் சட்டமன்றத் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பரப்புரையாற்றினார்.
அவரது தேர்தல் பரப்புரை வருமாறு:
பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய விருது நகர்வாழ் வாக்காளர் பெருமக்களே! சிறப்பான இந்த விருதுநகர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கக்கூடிய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக – திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஒப்பற்ற தலைவர், ‘திராவிட மாடல்’ ஆட்சியை நமக்கெல்லாம் தந்து, ஒரு வரலாற்றைப் படைத்திருக்கக்கூடிய நம்முடைய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய அவருடைய தலைமையிலே மீண்டும் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகவும், கூட்டணியினுடைய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அருமைத் தோழர் பாரம்பரியம் மிக்க கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய அருமை மகன் விஜயபிரபாகரன் அவர்கள், இந்த மண்ணுக்குரியவர். அவர் வெளியூரில் இருந்தாலும், இந்த மண்ணுக்குரியவர். அப்படிப்பட்ட அவருக்கு ‘முரசு’ சின்னத்திலே வாக்களித்து இந்தக் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான், அருமைத் தாய்மார்களே, பெரியோர்களே, நண்பர்களே உங்கள் மத்தியிலே இந்தப் பிரச்சாரப் பரப்புரைக் கூட்டத்தை நாங்கள் ஏற்று வந்திருக்கிறோம்.
இதற்குத் தலைமை தாங்குகிற திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் இல. திருப்பதி அவர்களே, அதேபோல சிறப்பாக இந்த ஏற்பாடுகளைச் செய்து, இந்தத் தொகுதியிலே வரலாற்றை படைத்த சாதனைக்குரியவரான விருதுநகர் சட்டமன்ற திரா விட முன்னேற்றக் கழக உறுப்பினர் அன்புக்கும், பாராட்டிற்கும் உரிய அருமைச் சகோதரர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழக நகர செயலாளர் எஸ்.ஆர்.எஸ். தனபாலன் அவர்களே. நகர்மன்றத் தலைவர் மாதவன் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய துணைச் செயலாளர் குருசாமி அவர்களே, முன்னிலை ஏற்றிருக்கிற வி.சி.க. மாவட்டத் தலைவர் நல்லதம்பி அவர்களே, மாவட்டச் செயலாளர் ஆதவன் அவர்களே மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வி.சி.க., மனிதநேய மக்கள் மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், மக்கள் நீதிமய்யம், ஆதி தமிழர் பேரவை, ஆதி தமிழர் கட்சி உள்ளிட்ட இன்னும் விடுபட்டிருந்தால் அவர்கள் பொறுத்தருள வேண்டும்; நேரத்தின் நெருக்கடியினாலே வேகமாக சொல்ல வேண்டிய அவசியம் இருக்கக்கூடிய நிலையில், கூட்டணிக் கட்சிப் பொறுப்பாளர்களே, தாய்மார்களே, நண்பர்களே உங்களுக்கெல்லாம் என்னுடைய அன்பார்ந்த வணக்கம்.
‘வாலிபப் பெரியார்’ என்று அழைக்கப்பட்டவர் இந்த மண்ணின் தோழர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி!
இந்த விருதுநகர் மண்ணிலே உங்களை எல்லாம் சந்திப்பதிலே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நமக்கு கல்விக் கண்ணைத் திறந்த காமராசர் பிறந்த மண்ணுக்கு வந்திருக்கிறோம். இந்தப் பெருமையோடு நீங்கள் வாக்களிக்க வேண்டும். காமராசருடைய பிறந்த நாளை கலைஞர் அவர்கள், ‘கல்வி நாளாக’ அரசாங்க சார்பாக அறிவித்து ஒரு தனிச் சட்டத்தையே இயற்றினார். அதுமட்டுமல்ல, இன்னும் கேட்டால் நாங்கள் ஏதோ புதிதாக வந்திருக்கிறோம் என்று நீங்கள் நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்குத் தெளிவாகத் தெரியும், தந்தை பெரியாருடைய மிகப்பெரிய பாராட்டுதலுக்குரிய ஒருவர், ‘வாலிபப் பெரியார்’ என்று அழைக்கப்பட்ட இந்த மண்ணின் தோழர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்கள் ஆவார்கள். அவருடைய நினைவு நாள் இன்றைக்கு. எனவே, இந்த நாளிலே உங்களை எல்லாம் சந்திக்கிற போது மிகப்பெரிய அளவுக்கு ஒரு நல்ல வேண்டுகோளை உங்களிடையே வைக்க விரும்புகிறேன்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தல் என்பது முழுக்க முழுக்க எதற்காக என்று சொன்னால் நண்பர்களே, அய்ந்து ஆண்டுகள் சாதனைகளை செய்த ஒரு கூட்டணி, இங்கே வந்து உங்களை எல்லாம் சந்திக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியில், கடந்த அய்ந்து ஆண்டுகளாக மிகப்பெரிய அளவிற்குச் சாதனைகளை செய்திருக்கிறார்கள். ஏராளமான தாய்மார்கள், சகோதரர்களை இந்தப் பக்கத்திலே பார்க்கிறபோது, எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.
நம்முடைய பெண்கள் மறுபடியும் ஊதாங்குழலைத் தேடக்கூடிய அளவுக்கு செய்திருக்கிறார் பிரதமர் மோடி!
தாய்மார்கள் எல்லாம் மலர்ந்த முகங்களோடு இருக்கிறீர்கள். உங்களுடைய உரிமைகளை மதித்த ஆட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய ஆட்சியாகும். எண்ணிப் பாருங்கள், ஒரு காலத்திலே ‘‘அடுப்பு ஊதுகின்ற பெண்களுக்குப் படிப்பெதற்கு?’’ என்று கேட்டார்கள். ஆனால், கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடனே ‘‘ஊதுகின்ற அடுப்பை’’யே தூக்கி எறிந்துவிட்டு, உங்களுக்கெல்லாம் எரிவாயு அடுப்பு கொடுத்தார்கள். ஆனால், இன்றைக்கு மோடி என்ன செய்தார் என்றால், மீண்டும் அந்தக் கேஸ் அடுப்புகளுக்கு எல்லாம் வேலை இல்லாமல் ஆக்கி, முழுக்க முழுக்க நம்முடைய பெண்கள் மறுபடியும் ஊதாங்குழலைத் தேடக்கூடிய அளவுக்கு செய்திருக்கிறார்.
ஆகவே, அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலே, இன்றைக்கு உங்களுக்கு என்னென்ன வாய்ப்புகளை எல்லாம் உருவாக்கி தந்திருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாகத்தான் நண்பர்களே ஒரு மிகப்பெரிய அற்புதமான ஒரு செய்தி – தாய்மார்கள் இங்கே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதுவரையில், தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், பல திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார். அப்படி செயல்படுத்திவிட்டுத்தான், இந்த ஆட்சி நீடிக்க வேண்டும் என்கிறார். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டங்கள் எல்லாம் உங்களுக்குப் பயன்தர வேண்டும் என்று சொன்னால், இந்த ஆட்சி மீண்டும் வந்தால்தான், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமையில் இருக்கிற ‘திராவிட மாடல்’ ஆட்சி மீண்டும் உரு வானால்தான் அதற்கு வாய்ப்பாக இருக்கும். அதற்குப் பயன்படக்கூடிய வேட்பாளராகத்தான் நம்முடைய அருமைத் தோழர் விஜய பிரபாகரன் அவர்களை, உங்களுடைய வேட்பாளராக இன்றைக்கு அவர்கள் நிறுத்தி இருக்கிறார்கள்.
‘‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை!’’
‘‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’’ என்று ஆரம்பித்து, பல லட்சக்கணக்கான மகளிருக்கு மாதாமாதம் ஆயிரம் ரூபாய் என்று கொடுத்தார். இப்போது அந்தத் திட்டத்தால், நம்முடைய மகளிர் எல்லாம் பயனடைகிறார்கள். இந்தத் திட்டத்தை முதலில் அறிவித்த போது, ‘‘முடியுமா?’’ என்று கேட்டார்கள். ‘‘முடித்துக் காட்டுகிறேன்’’ என்று சொன்னவர்தான் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
அது மட்டுமல்ல, இந்தத் திட்டத்தை எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்று, பா.ஜ.க.,
ஆர்.எஸ்.எஸ். மற்றும் அவர்களிடம் இப்போது விலை போயிருக்கிறார்கள் அல்லவா, அ.தி.மு.க. என்ற பெயரை வைத்துக்கொண்டு, அதிலே அண்ணாவும் இல்லை, திராவிடமும் இல்லை, முன்னேற்றமும் இல்லை என்று சொல்லக்கூடிய வகையில் அந்தக் கட்சியை அவர்கள் ஆக்கி இருக்கிறார்களே, அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து முயற்சி செய்தார்கள்.
நீதிமன்றம் வாயிலாகத் தடுக்கலாம் என்று நினைத்தார்கள்!
என்ன முயற்சி என்று சொன்னால், நண்பர்களே! எப்படியாவது இந்தத் திட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நீதிமன்றங்கள் வாயிலாகச் சென்று, தடுக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்து வழக்குப் போடுவதற்குத் தயாரானார்கள், சூழ்ச்சி செய்தார்கள்.
ஆனால், அவர்களுடைய எல்லா சூழ்ச்சிகளையும் முறியடிக்கும் திறன் எங்கள் ஸ்டாலினுக்கு உண்டு, எங்கள் முதலமைச்சருக்கு உண்டு என்று சொல்லக்கூடிய வகையிலே, முதலமைச்சர் அற்புதமான ஒரு வேலை செய்தார். ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’’ பெற்ற பயனாளிகள் இங்கே ஏராளம் வந்திருக்கிறார்கள்; தாய்மார்கள் மகிழ்ச்சியோடு இருப்பதற்கு என்ன காரணம் என்று சொன்னால் நண்பர்களே, முழுக்க முழுக்க உங்களுக்கு வரவேண்டிய அந்தப் பணம் மாதம் ஒன்றுக்கு 1000 ரூபாய் வரக்கூடிய அந்த பணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும். தேர்தல் நாளை அறிவித்த நேரத்தில், அதைக் காட்டி, ‘‘பார்த்தீர்களா பார்த்தீர்களா, இவர்கள் தொடர்ந்து மகளிர் உரிமைத் தொகை கொடுக்க மாட்டார்கள்’’ என்றெல்லாம் அவர்கள் பிரச்சாரம் செய்து, உங்களை எல்லாம் வஞ்சிக்கலாம் என்று முயற்சித்தார்கள்.
ஒவ்வொரு மகளிர் வங்கிக் கணக்கிலும்
5000 ரூபாயை வரவு வைத்தார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஆனால், அதைப் புரிந்து கொண்ட நம்முடைய முதலமைச்சர் உடனே என்ன செய்தார் என்றால், மூன்று மாதங்களுக்குரிய 3 ஆயிரம் ரூபாயையும், கோடை கால வெயிலின் கொடுமையைச்
சமாளிக்க ரூ.2000–த்தயும் சேர்த்து, ஆக மொத்தம் 5000 ரூபாயை ஒவ்வொரு மகளிர் வங்கிக் கணக்கிலும் வரவு வைத்தார்.
அதே நேரத்தில், இந்த ஆட்சி வரக்கூடாது என்று சொல்லி, டில்லிக்கு சரணம் பாடிக்கொண்டு, மோடியும், வடநாட்டு அமைச்சர்களும் இங்கே வருகிறார்களே, அவர்கள் என்ன செய்தார்கள்? மோடி என்ன செய்தார்?
நாடாளுமன்றத் தேர்தலின்போது பதவிக்கு வரவேண்டும் என்பதற்காக அவர்கள் என்ன சொன்னார்கள்? ‘‘தாய்மார்களே, கிராமத்தில் இருக்கிறவர்களே ஓடோடிப் போய் நீங்கள், உங்கள் பெயரில் வங்கிக் கணக்கைத் திறங்கள். அப்படி திறந்தீர்கள் என்றால், உங்களுடைய வங்கிக் கணக்கில் 15 லட்ச ரூபாய் பொத்தொன்று விழும்’’ என்று சொன்னார்கள்.
சொன்னதை செய்யும் தி.மு.க. கூட்டணி – சொன்னதை செய்யாத அணி பா.ஜ.க. கூட்டணி!
அவர்கள் அப்படிச் சொல்லி எத்தனையோ ஆண்டு கள் ஆகிவிட்டன. ஆனால், வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் வந்ததா, என்றால், இல்லை. சொன்னதை செய்யாத அணி அது. சொன்னதை செய்த அணிதான் திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலே இருக்கக்கூடிய இந்த அணி. அதுமட்டுமல்ல, உங்களுடைய உரிமைத் தொகை 5000 ரூபாயை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அது மட்டுமா? சொன்னதை மட்டுமல்ல, சொல்லாதையும் செய்கிறார் என்பதற்கு அடையாளம், நம்முடைய பிள்ளைகள் காலையிலே வேகமாக, சாப்பிட மறுத்துவிட்டுப் போனதால், வகுப்பில் அவர்கள் மயக்கம் போட்டு விழுந்தார்கள். பசியால் வகுப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காலையில் அவ்வளவு சீக்கிரம் எப்படி உணவைக் கொடுப்பார்கள்? இதை உணர்ந்த நம்முடைய முதலமைச்சர் அவர்கள், காலையிலும், ‘‘காலைச் சிற்றுண்டி’’யை பல லட்சக்கணக்கான பிள்ளைகளுக்குக் கொடுக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
இன்றைக்குப் பள்ளிக்கூடத்தில் காலை உணவு அய்ந்தாவது வகுப்பு வரையில் படிக்கக்கூடிய பள்ளிப் பிள்ளைகளுக்கு, கிராமத்துப் பிள்ளைகளுக்கு வழங்கப்படுகிறது. மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு வந்தவுடன் காலைச் சிற்றுண்டித் திட்டத்தை 8 ஆம் வகுப்பு வரையில் கொடுப்போம் என்று திட்டவட்டமாக அவர்கள் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருக்கிறார்கள்,
என்ன ஜாதி? என்ன மதம்?
இதெல்லாம் கிடையாது
அது மட்டுமல்ல, பெண் குழந்தை பிறந்தால் படிக்க முடியாது; பெண் குழந்தை பிறந்தால் ஏற்க முடியாது என்று ஓர் ஆணாதிக்க மனப்பான்மை இருந்த ஒரு சமுதாயத்திலே, தந்தை பெரியார் அவர்கள் கருத்துப்படி, கலைஞருடைய விருப்பப்படி, அண்ணா அவர்களுடைய ஆசைப்படி, தெளிவாக அவர் என்ன செய்தார் என்று சொன்னால், கல்வி வள்ளல் காமராஜர் பகல் உணவு திட்டத்தைக் கொடுத்தார். ஆனால், தேர்தல் அறிக்கையில் சொல்லாததையும் சேர்த்து, காலை உணவுத் திட்டத்தைக் கொடுத்தது மட்டுமல்ல, அய்ந்தாம் வகுப்பில் இருந்து எட்டாவது வகுப்பு வரையில் கொடுக்கவிருக்கிறார்கள்; இனிமேல் நீங்கள் கவலைப்பட வேண்டாம். அந்த அளவுக்கு பிள்ளைகள் மகிழ்ச்சியோடு பள்ளிக்குப் போகிறார்கள். இன்னும் கேட்டால் வரிசையாக உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். அப்படி சாப்பிடுகிற நேரத்தில், என்ன ஜாதி? என்ன மதம்? இதெல்லாம் கிடையாது. எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து ஒருங்கிணைந்த ஒரு சமுதாயமாக ஒன்றுபட்ட ஒரு சமுதாயமாக அவர்கள் இருக்கிறார்கள்.
‘திராவிட மாடல்’ ஆட்சியின்
சீர்மிகு திட்டங்கள்!
அதுமட்டுமல்ல, ‘புதுமைப்பெண் திட்டம்’ என்று கல்லூரி மாணவிகளுக்கெல்லாம் 1000 ரூபாய். எத்த னைப் பெண் குழந்தைகள் இருந்தாலும், கல்லூரிக்குச் சென்றால் 1000 ரூபாய். பெண்களுக்கு மட்டுமா? ஆண்களுக்குத் தர வேண்டாமா என்று கேட்ட நேரத்தில், ‘தமிழ்ப் புதல்வன் திட்டம்’ என்று சொல்லி, கல்லூரி மாணவர்களுக்கு 1000 ரூபாய். அதுபோலவே, ‘நான் முதல்வன் திட்டம்’ என்று மிகப்பெரிய அளவிற்கு.
ஒன்றிய அரசுக்கு நாம் வரிகட்டுகிறோம். அந்த ஒன்றிய பா.ஜ.க. அரசு, டில்லி அரசு ஒரு ரூபாய் நம்மிடமிருந்து வாங்கினால், அவர்கள் நமக்கு திருப்பிக் கொடுப்பது வெறும் 28 காசு. அந்த 28 காசைக் கூடப் போராடிப் போராடி வாங்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால், இவர்கள்தான் வந்து, ஏதோ பெரிய விஷயங்கள் எல்லாம் சொல்லுகிறேன் என்று சொல்லி ஏமாற்றக்கூடிய அளவிற்கு இருக்கிறார்கள்.
இந்தியாவிலே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத பொருளாதார வளர்ச்சி தமிழ்நாட்டில்தான்!
அப்படி இருந்தும் நண்பர்களே, இதையெல்லாம் தாண்டி நம்முடைய நிதி மேலாண்மை காரணமாக தமிழ்நாடு 11.19 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சி பெற்றிருக்கிறது என்று சொல்லக்கூடிய அளவிற்கு இந்தியாவிலே வேறு எந்த மாநிலத்திலும், பிஜேபி ஆளுகிற மாநிலத்திலும்கூட இப்படி இல்லை.
பிரதமர் மோடி வருகிறார், வடநாட்டில் இருக்கிற ஒன்றிய அமைச்சர்கள் எல்லாம் இங்கே வருகிறார்கள். இங்கே வந்து வெற்று எஞ்ஜினை ‘டபுள் எஞ்ஜின், டபுள் எஞ்ஜின்’ என்று சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கிற ஒற்றை எஞ்ஜினுக்கு முன்னால், அந்த ‘டப்பா டபுள் எஞ்ஜின்’ ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லக்கூடிய அளவிற்கு, டபுள் எஞ்ஜின் என்றால் என்ன அர்த்தம் என்றால், ஒரு எஞ்ஜினால் இழுக்க முடியவில்லை என்று அர்த்தம்.
(தொடரும்)

