23 வயதில் மிசாவில் கைது செய்யப்பட்டு சிறைக் கொடுமைக்கு ஆளானவன் – ஓராண்டு காலம் நெஞ்சுரத்தோடு சிறையில் இருந்தவன்!
கொடுஞ்சிறையின் கொடுமைக்கே பயப்படாதவன் நான் – ‘இந்தக் கரோனாகளுக்காப் பயப்படப் போகிறேன்?
மரணத்தைப் பார்த்து கலங்கக் கூடியவனோ, பயப்படுகிறவனோ அல்ல, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!
விழுப்புரம், ஏப். 9– 23 வயதில் மிசாவில் கைது செய்யப்பட்டு சிறைக் கொடுமைக்கு ஆளானவன் – ஓராண்டு காலம் நெஞ்சுரத்தோடு சிறையில் இருந்தவன்! கொடுஞ்சிறையின் கொடுமைக்கே பயப்படாதவன் நான் – இந்தக் கரோனா களுக்காப் பயப்படப் போகிறேன்? மரணத்தைப் பார்த்து கலங்கக் கூடியவனோ, பயப்படுகிறவனோ அல்ல, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! என்று எடப்படி பழனிசாமியின் கீழ்த்தரமான பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
தி.மு.கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (8.4.2026) விழுப்புரத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரை வருமாறு:
தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் காக்க – தனித்தன்மையைப் பாதுகாக்க, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு, உங்களின் ஆதரவைக் கேட்டு – வாக்குகளைக் கேட்டு, வந்திருக்கிறேன்.
முதலில், விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் மாவட்டப் பொறுப்பாளர் டாக்டர் லட்சுமணன் அவர்கள். விழுப்புரம் தொகுதியில் ஏற்கெனவே மக்கள் பணியாற்றி வரும் இவருக்கு, மீண்டும் தொகுதி மக்கள் உதயசூரியன் சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும்.

அடுத்து, திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் டாக்டர் பொன். கவுதம சிகாமணி அவர்கள்.. அப்பாவுக்கு தப்பாத பிள்ளையாக இந்தப் பகுதி மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் அவருக்கு, திருக்கோயிலூர் தொகுதி மக்கள் உதயசூரியன் சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும்.
அடுத்து, செஞ்சி சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் செஞ்சி மஸ்தான் அவர்கள். திராவிட மாடல் ஆட்சியில் சிறுபான்மை மற்றும் வெளிநாடுவாழ் நலத்துறை அமைச்சராக இருந்தவர். விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக சிறப்பாக கழகப் பணியாற்றி வருபவர். என்னு டைய பேரன்புக்குரிய அன்பு உடன்பிறப்பு பெயரே செஞ்சி மஸ்தான்தான். மூன்றாவது முறையாக செஞ்சி மக்கள் உங்கள் செஞ்சி மஸ்தானை, உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் எல்லாம் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும்.
அடுத்து, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் அன்னியூர் சிவா அவர்கள். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, இந்த இருபது மாத காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் இந்தத் தொகுதிக்கு கொண்டு வந்து சாதித்துக் காட்டிய ஆற்றலாளர் அன்னியூர் சிவா. மாநில விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக இருந்து, அந்தப் பகுதி மக்கள் அனைவரின் செல்வாக்கையும் பெற்றிருக்கிறார். அன்னியூர் சிவா அவர்களுக்கு விக்கிரவாண்டி தொகுதி மக்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்து, மயிலம் சட்டமன்றத் தொகுதி. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சேர்ந்த நமது வெல்லும் வேட்பாளர் எல்.வெங்கடேசன் அவர்களுக்கு, மயிலம் தொகுதி மக்கள் ‘முரசு’ சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்து, வானூர் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் கவுதம் திராவிட மணி அவர்களுக்கு, வானூர் தொகுதி மக்கள் உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்.
நிறைவாக, திண்டிவனம் சட்டமன்றத் தொகுதி. நமது தோழமைக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வெல்லும் வேட்பாளர் வன்னி அரசு அவர்களுக்குப் ‘பானை’ சின்னத்தில் நீங்கள் உங்கள் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும் என்று அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்.
அறிமுகப்படுத்திய வேட்பாளர்களை
அமோக வெற்றி பெறச் செய்வீர்!
இப்போது நான் அறிமுகப்படுத்திய, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் இந்த ஏழு வேட்பாளர்களையும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். அதற்கு நீங்கள் எல்லாம் தயாரா? (தயார் என மக்கள் முழக்கம்). வெற்றி உறுதியா? (உறுதி என மக்கள் முழக்கம்). வெற்றி உறுதியாகிவிட்டது. வேட்பாளர்கள் இப்போது உட்காரலாம். சீட் கிடைத்துவிட்டது!
பல முறை நான் இந்த விழுப்புரத்திற்கு வந்திருந்தாலும், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வந்ததை என்னால் மறக்கவே முடியாது! என்னால் மட்டுமல்ல. உங்களாலும் மறக்க முடியாத அளவுக்கு, வரலாற்றில் முத்திரை பதித்த நாள், அந்த நாள்! நம்முடைய நெஞ்சங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் திராவிட இயக்கத் தீரர், ஏ.ஜி. என்று அன்போடு அழைக்கப்படும் அய்யா ஏ. கோவிந்தசாமி அவர்களின் நினைவரங்கத்தையும்; அதுமட்டுமல்ல, இடஒதுக்கீட்டிற்கான போராட்டத்தில் உயிரிழந்த 21 சமூகநீதிப் போராளிகளுக்கான மணிமண்டபத்தையும் நான் திறந்து வைத்தேன். இதை வாழ்நாளில் எனக்கு கிடைத்த பெருமையாக நான் கருதுகிறேன்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல… இந்தியா முழுவதும், சமூகநீதி என்றால், தி.மு.க.! தி.மு.க. என்றால், சமூகநீதி! சமூகநீதிக்காக இந்த மண்ணில் நடந்த மிக முக்கியமான – 1987 போராட்டம்! மறக்க முடியுமா?
இதுதான் – N.D.A. கூட்டணி.
துரோகங்களால், தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் கெடுக்க நினைக்கும் N.D.A… N.D.A. என்றால், உங்களுக்கு புரிவது போன்று ஈசியாக சொல்கிறேன். No Development Alliance–தான்… N – No; D–Development. A – Alliance. அதுதான் தற்போது N.D.A.
இவர்களின் சதித் திட்டத்தை முறியடித்து, தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்றுதான், நாம் சூப்பர்ஸ்டாரை களத்தில் இறக்கியிருக்கிறோம்! 2026 தேர்தலின் சூப்பர்ஸ்டார் யார்? தேர்தல் அறிக்கை… சூப்பர்ஸ்டார் யார்? “சூப்பர்ஸ்டார் யாருனு கேட்டா… சின்னக் குழந்தையும் சொல்லும்” தேர்தல் அறிக்கை என்று சொல்லும், அதுதான்..! நான் பிரச்சாரத்திற்குக் கிளம்புவதற்கு முன்பே, நம்முடைய சூப்பர்ஸ்டார் நமக்காகப் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார்.
பழனிசாமி அவர்களே… சாதனைக்கு மட்டுமல்ல; உங்களுடைய ஒவ்வொரு பொய்க்கும் என்னால் புள்ளி விவரங்களோடு பதிலடி தர முடியும்.
23 வயதில் மிசாவில் கைது செய்யப்பட்டு
சிறைக் கொடுமைக்கு ஆளானவன் நான்
தோல்வி பயத்தில் பழனிசாமி தினம் தராதரம் இல்லாமல் தரங்கெட்டு பேசுகிறார். இன்றைக்கு மாலை சென்னையில் என்னைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? தி.மு.க. ஆட்சியில் கரோனா வந்திருந்தால், இவரே போயிருப்பார் என்று என்னை பேசியிருக்கிறார். பழனிசாமி அவர்களே… என் மரணத்தை பற்றி பேசுகிறீர்களே… மரணத்தைப் பார்த்து கலங்கக் கூடியவனோ, பயப்படுகிறவனோ நான் அல்ல. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், 1976 இல் நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, 23 வயதில் மிசாவில் கைது செய்யப்பட்டு சிறைக் கொடுமைக்கு ஆளானவன் நான். ஓராண்டு காலம் நெஞ்சுரத்தோடு சிறையில் இருந்தவன் நான். பொதுவாழ்க்கையில் எல்லாவற்றையும் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்று என்னை சிறைக்கு அனுப்பி வைத்தவர் என்னுடைய ஆருயிர் தலைவர் என்னுடைய தந்தை கலைஞர் அவர்கள். கொடுஞ்சிறையின் கொடுமைக்கே பயப்படாதவன் நான், இந்தக் கரோனாவுக்கா பயப்படப் போகிறேன்?
PPE உடை அணிந்து கொண்டு
கரோனா வார்டுக்குள் சென்றவன்!
கரோனா மேல் அனைவரும் பெரும் அச்சத்தில் இருந்தபோதே, அதற்கான PPE உடை அணிந்து கொண்டு கரோனா வார்டுக்குள் சென்றவன்தான் இந்த ஸ்டாலின். இந்த ‘அரசியல் கரோனாகளுக்கா பயப்படப் போகிறேன்.’ இதுவரை யாருக்கும் சொல்லாததை இப்போது சொல்கிறேன்… இவ்வாறு நான் கரோனா வார்டுக்குள் செல்லப் போகிறேன் என்று யாரிடமும் நான் சொல்லவில்லை. மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், என் உதவியாளர்கள் என்று அனைவரும் இருந்தார்கள். ஆனால், யாரிடமும் நான் சொல்லவில்லை. இப்படி நான் சொல்லாமல் சென்ற காரணத்தினால், என் மனைவி துர்காவதி என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசாமல் இருந்தார். இது சத்தியம்… மக்களைக் காக்க எந்தளவுக்கும் துளணிச்சலாக செல்லக்கூடியவன். அதற்கெல்லாம் பயந்து அரசியல் தலைவராக நான் இல்லை.
பழனிசாமியின் கீழ்த்தரமான பேச்சைக் கேட்ட பிறகு, என்னுடைய வருத்தம் எல்லாம் என்ன தெரியுமா? தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., இனமானப் பேராசிரியர் என்று எத்தனையோ பண்பாடுமிக்க பெருந்தலைவர்களிடம் நேரில் பழகக்கூடிய நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட நான், இன்று இவருக்கெல்லாம் பதில் சொல்லும் நிலை இருக்கிறதே என்று உண்மையிலேயே வருத்தப்படுகிறேன்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரான பின்பு பழனிசாமி வென்றதே இல்லை. தி.மு.க. தலைவரான பின் உங்கள் ஆதரவால் நான் தோற்றதே இல்லை.
பா.ஜ.க. எனும் பேரழிவை தமிழ்நாட்டிற்குள் கொண்டுவர நினைக்கும் அடிமை பழனிசாமிக்கு, தமிழ்நாட்டு மக்கள் கடுமையான தண்டனையை இந்தத் தேர்தலில் கொடுக்க வேண்டும்.
டில்லியின் ரிமோட் கண்ட்ரோலுக்கு ஆடும் அடிமைகள் தமிழ்நாட்டை ஆளக் கூடாது!
உண்மையில், நடக்கும் தேர்தல் என்பது, டில்லிக்கும் – தமிழ்நாட்டுக்கும் நடக்கும் தேர்தல். தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் பத்து தோல்வி பழனிசாமிக்கு, பதினோராவது தோல்வியை கொடுத்து விரட்ட வேண்டும். டபுள் எஞ்சின், டப்பா எஞ்சின் என்று சொல்லிக் கொண்டு, டில்லியின் ரிமோட் கண்ட்ரோலுக்கு ஆடும் அடிமைகள் தமிழ்நாட்டை ஆளக் கூடாது! தமிழ்நாட்டை நாசப்படுத்த நினைக்கும் ஆணவ பா.ஜ.க.வும், அடிமை அ.தி.மு.க.வும் வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட வேண்டும். அதற்கு, திராவிட முன்னேற்றக் கழகம்தான் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும்.
சாதனைகளால் சிறக்கும் தமிழ்நாடு!
தலைநிமிர்ந்த தமிழ்நாடு உருவாகும்!
தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த விருப்பமாக அமையவுள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சியில் சாதனைகளால் சிறக்கும் தமிழ்நாடு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு உருவாகும்! அதற்கு உங்களுடைய இந்த ஸ்டாலின் கேரண்டி!
தமிழ்நாடு மென்மேலும் வளர்ந்திட, திராவிட மாடல் நல்லாட்சி தொடர்ந்திட, ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை!
வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக!
இவ்வாறு தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

