தேர்தல் ஆணையம் யாரையும் மாற்றலாம்; மக்களை ஏமாற்ற முடியாது! ஏப்.23 ஆம் தேதி மக்கள் தீர்ப்பளிப்பார்கள்!

2 Min Read

தேர்தல் ஆணையம், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரையும்,
டி.ஜி.பி.க்களில் மற்றொருவரையும் மாற்றி இருக்கிறது!

தேர்தல் ஆணையம் நேற்று (8.4.2026) தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரையும், டி.ஜி.பி.க்களில் ஒருவரையும் மாற்றி இருக்கிறது. தேர்தல் ஆணையம் யாரையும் மாற்றலாம்; மக்களை ஏமாற்ற முடியாது! ஏப்ரல் 23ஆம் தேதி மக்கள் தீர்ப்பளிப்பார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பாரதிய ஜனதா கட்சியைத் தமிழ்நாட்டுத் தேர்தல் தோல்வி பயம் பிடித்து ஆட்டத் தொடங்கிவிட்டது. தேர்தல் ஆணையம் தன்னுடைய அதிகார எல்லைகளை மீறி பல்வேறு அதீத நடவடிக்கைகளை மேற்கொண்டி ருக்கிறது. முதலில் மாவட்ட அளவில் ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் போன்றவர்களைத் திட்டமிட்டே மாற்றினார்கள். தமிழ்நாட்டின்  டி.ஜி.பி.யை மாற்றினார்கள். நேற்று (8.4.2026) தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரையும் டி.ஜி.பி.க்களில் மற்றொருவரையும் மாற்றி இருக்கிறார்கள்.

தேர்தல் ஆணையம் தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது!

தலைமைச் செயலாளராக இருந்த திரு. முருகானந்தம் அவர்கள் அரசியல் சார்பற்றவர்; தன்னுடைய கட மைகளைத் திறம்பட ஆற்றியவர். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து தன்னுடைய உழைப்பால் உயர்ந்து, தலைமைச் செயலாளர் எனும் பொறுப்பை எட்டியவர். அவருடைய நடவடிக்கைகளில் சார்பு இருந்தாலோ, குற்றம் இருந்தாலோ இத்தகைய பணி மாறுதல்கள் நடைபெறுவதைச் சரியென்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், தேர்தல் நடைபெறும் அய்ந்து மாநிலங்களில், குறிப்பாக கேரளம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மட்டும் தேர்தல் ஆணையம் தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பாரதிய ஜனதா கட்சிக்கு ஏதுவான சூழல் இருக்கும் வகையில் தேர்தல் ஆணைய நடவடிக்கைகள்!

அசாம் மாநிலத்திலும் சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது என்றாலும் அங்கு எஸ்.அய்.ஆர் இல்லை; அதிகாரிகள் பணி மாறுதல் இல்லை; பாரதிய ஜனதா கட்சிக்கு ஏதுவான சூழல் இருக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பார்த்துக் கொள்கிறது.

இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் தான் தேர்தல் ஆணையத்தின் மீது இந்திய மக்கள் ஏற்கெனவே  நம்பிக்கை இழந்து விட்டார்கள். வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்ப்பு – நீக்கம் ஆகியவற்றில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாகத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இருப்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய பின்னும் அதற்குரிய விளக்கங்க ளையோ, நியாயமான பதில்களையோ தேர்தல் ஆணையம் இதுவரை வழங்கவில்லை. உச்சநீதிமன்றமே கடுமையாகக் கேள்வி எழுப்பியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்நிலையில் இத்தகைய அதிகார மாற்றங்களின் மூலமாக யாரைப் பதவியில் அமர்த்துகிறார்கள் என்பதும் கேள்விக்குறியாகும்.

முன்பு அதிகாரத்தில் இருந்தவர்கள் யாரு டனும் பணியாற்றியவர் இருக்கக் கூடாது என்று சொல்லப்படுமேயானால், தற்போது நியமிக்கப்பட்டி ருக்கும் தலைமைச் செயலாளர் கடந்த அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர் என்பது மறுக்க முடியாதது.

 வருமுன் காக்கும் நடவடிக்கை!

தேர்தல் ஆணையத்தால் அதிகாரிகளை மாற்ற முடியும்; காவல்துறையினரை மாற்ற முடியும். ஆனால், வாக்களிக்கும் வாக்காளர்களை ஒருபோதும் மாற்ற முடியாது. அதற்கான முயற்சியை எஸ்.அய்.ஆர். (சிறப்பு வாக்காளர் பட்டியல் சீராய்வு) மூலம் மேற்கொள்ள முயற்சித்த போதும், உரிய வகையில் வருமுன் காக்கும் நடவடிக்கையை திராவிட முன்னேற்ற கழகம் தனது கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து மேற்கொண்டுள்ளது.

தேர்தல் ஆணையம் யாரையும் மாற்றலாம். மக்களை ஏமாற்ற முடியாது.

ஏப்ரல் 23ஆம் தேதி மக்கள் தீர்ப்பளிப்பார்கள்.

கி.வீரமணி

     தலைவர்,

திராவிடர் கழகம்

 

9.4.2026

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *