ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பேச்சை நம்பிய இஸ்லாமியர்கள் ஏமாந்ததுதான் மிச்சம் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
“சிறுபான்மையினர் மீதான வெறுப்புப் பேச்சுகள் மற்றும் ஒருங்கிணைந்த தாக்குதல்கள் குறித்து நாங்கள் தெரிவித்த கவலைகள் பெரும்பாலும் சங்பரிவார் தலைமையால் புறக் கணிக்கப்பட்டுள்ளன” என்று இஸ்லாமிய கூட்டமைப்பினர் வேதனையோடு அறிக்கை வெளியிட்டுள்ளனர்
இந்தியாவில் உள்ள முக்கிய இஸ்லாமிய அமைப்புகள் திடீரென கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆர்.எஸ்.எஸ். அமைப்போடு இணைந்து நல்லிணக்கத்தை உருவாக்குவோம் என்று கூறி நாக்பூர் சென்று மோகன் பாகவத்தோடு நிழற்படம் எடுத்து பெருமைப்பட்டுக் கொண்டனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெற மோடியின் அடுத்த நகர்வு என்றுகூட நாளிதழ்கள் தலையங்கம் எழுதின.
இந்த நிலையில் மோகன் பாகவத்தைச் சந்தித்த இஸ்லாமிய கல்வி மற்றும் பொருளாதார உரிமைகளுக்கான அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தாவது, ”மகாராட்டிராவில் லவ் ஜிஹாத் பேரணிகள் நடை பெறுவதைக் குறிப்பிட்டு, வெறுப்புப் பேச்சுகளும், முஸ்லிம் களுக்கு எதிரான கூட்டங்களும் தொடர்ந்து நடைபெறுவதாக, சங்பரிவார் தலைவர் மோகன் பாகவத்துக்கு, இஸ்லாமிய கூட்டமைப்பினர் “வேதனை” கலந்த கடிதம் எழுதியிருந்தனர். ஆனால், இவற்றைத் தடுப்பதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு சிறிதளவும் அக்கறை இல்லை
மார்ச் 23 அன்று பாகவத்துக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், டில்லியின் மேனாள் லெப்டினன்ட் கவர்னர் நஜீப் ஜங், மேனாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரைஷி, மேனாள் மாநிலங் களவை உறுப்பினர் ஷாகித் சித்திக், லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) இசட்.யு. ஷா மற்றும் சயீத் ஷெர்வானி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்
இவர்கள் பின்தங்கியவர்களின் பொருளாதாரம் மற்றும் கல்வி அதிகாரமளிப்பதற்கான கூட்டணியின் (AEEDU) நிறுவன உறுப்பினர்கள். இவர்கள் மூலமாக ஒன்றிய பா.ஜ.க. அரசு ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு இணக்கமாக இஸ்லாமியர்கள் இருப்பதைப் போன்று காட்டிக் கொண்டது. இந்த நிலையில் AEEDU உறுப்பினர்கள் அனுப்பிய கடிதத்தில், “இனப்படு கொலைக்கான அழைப்புகள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் செயல்கள் உள்பட வெறுப்பு பேச்சுக்களை ஆர்.எஸ்.எஸ். இன்னும் கைவிடவில்லை, மகாராட்டிரா மற்றும் சத்தீஸ்கரில் சமீபத்தில் நடைபெற்ற முஸ்லீம் எதிர்ப்பு அணி வகுப்புகள் வெறுப்பு நிறைந்தவை, மேலும் முஸ்லீம் வணிகங்களை புறக்கணிப்பதற்கான அழைப்புகளை உள் ளடக்கியது. உண்மையில், மகாராட்டிராவில் வெறுப்பு அணிவகுப்புகள் (தேசிய பத்திரிகைகளில் முறையாகப் பதிவாகியுள்ளன) பல மாதங்களாக நீடித்தன.
இதில் பெரும்பாலானவை காவல்துறை முன்னிலையில், எந்த நடவடிக்கையும் இல்லாமல், ஒருவேளை நடவடிக்கை இருந்தாலும், அது செயலற்றதாக இருந்தது, இது முஸ்லீம்கள் மத்தியில் வேதனையையும், பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. சில நாள்களுக்கு முன்பு மகாராட்டிராவில் உள்ள அவுரங்காபாத் நகரில் இருக்கும் 300 ஆண்டுகள் பழைமையான இஸ்லாமிய வழிபாட்டுத்தலத்தின் நுழைவு வாயிலை நாட்டு வெடிகுண்டுகளை ஏவுகணைகள் போல் செய்து ஏவிவிட்டு சேதப்படுத்தி உள்ளனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாங்கள் உங்களை சந்தித்த பிறகு, இஸ்லாமியர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க ஏராளமான இஸ்லாமிய மதம் மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்தோம். அவர்கள் ஒரே குரலில் எங்கள் முயற்சியை ஆதரித்தனர், ஆனால் இன்று அச்ச உணர்வு மேலோங்கி, எமது முயற்சியின் பலன் வீணாகிப் போனது; எங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
இருப்பினும் நாங்கள் கலங்காமல் மோகன் பாகவத்தைத் தொடர்பு கொள்ள முயற்சித்தோம் இந்த நிலையில் தலைவரின் அலுவலகத்திலிருந்து பதில் கடிதம் வந்தது. அதில் அவர் இன்னும் பல மாதங்கள் ‘பிஸியாக’ இருப்பார் என்று அக்கடிதம் கூறுகிறது. AEEDU கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் முறையாக பாகவத்தை சந்தித்தது, அதன் தொடர்ச்சியாக ஜனவரி கூட்டத்தில், ஜமியத் உலமா-அய்-ஹிந்த் அதன் பிரதிநிதிகளை அனுப்பியது. AEEDU மற்ற முஸ்லீம் குழுக்களையும் பேச்சுவார்த்தை செயல்முறைக்குள் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எவ்வாறாயினும், சிறு பான்மையினர் மீதான வெறுப்புப் பேச்சுகள் மற்றும் ஒருங் கிணைந்த தாக்குதல்கள் குறித்து நாங்கள் தெரிவித்த கவலைகள் பெரும்பாலும் சங்கத் தலைமையால் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சுகள், வன்முறை, சட்டமீறல் மற்றும் கண்மூடித்தனமான – புல்டோசர் களைப் பயன்படுத்துதல் போன்ற பிரச்சினைகளை இஸ்லா மியர்கள் நாடு முழுவதும் எதிர்கொண்டு வரு கின்றனர், இவை அனைத்தையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கண்டிக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது” என்று வேதனை யோடு இஸ்லாமிய கல்வி மற்றும் பொருளாதார உரிமை களுக்கான அமைப்பு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மோகன் பாகவத் வடித்தது முதலைக் கண்ணீர் என்பதைக் காலந் தாழ்த்தியாவது இஸ்லாமியர்கள் உணர்ந்து கொள் வார்களாக! செயல்படுவார்களாக!!