தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 19 அன்று காவல்நிலையத்திற்கு ‘விசாரணை’ என்ற பெயரால் கொண்டு செல்லப்பட்ட ஜெபராஜ், பென்னிக்ஸ் என்ற தந்தை, மகன் ஆகிய இருவர், காவல்துறையினரின் கடுமையான தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டனர். அய்ந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இவ் வழக்கில், காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் 9 பேரும் குற்றவாளிகளே என்று கடந்த 23.3.2026 அன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், தீர்ப்பின் முழு விவரமும், தண்டனை விவரங்களும் நேற்று முன் தினம் (6.4.2026) நீதிபதி அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளன.
இப் படுகொலைகள் மனித கண்ணியத்தை மீறும் செயலாக அமைந்திருக்கின்றன என்று கூறியுள்ள நீதிபதி, குற்றவாளிகள் அனைவருக்கும் இரட்டை மரண தண்டனை, சிறைத் தண்டனை, அபராதங்கள் உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை வழங்கியுள்ளார்.
காவல்துறையில் சிலரின் அதிகார அத்துமீறல்கள் எத்தகைய கொடூர நிகழ்வுகளுக்குக் காரணமாகி விடுகின்றன என்பதுடன், காவல்துறைக்கே களங்க மாகவும் மாறி விடுகிறது.
காவல் மரணங்கள் நிகழாமல் எச்சரிக்கையுடன் இருக்க இத்தகைய கடும் தண்டனைகள் தவிர்க்கப்பட முடியாதவையே!
மனிதம் தழைக்கவும், பாதுகாக்கப்படவுமே காவல் துறை என்பதை மீண்டும் அழுத்தம் திருத்தமாக இந்தத் தீர்ப்பு சொல்கிறது.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

